Aug 13, 2022
சுயத்தொழில்

வெளிநாட்டுக்குப் பறக்கும் கோலப்படிகள்!

நன்றி குங்குமம் தோழி

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் தீபிகா வேல்முருகன். சிறு வயது முதலே தன் அம்மாவும் பாட்டியும் சேர்ந்து ஒவ்வொரு நாளும் வீட்டு வாசலில் வரையும் விதவிதமான கோலங்களை பார்த்து வளர்ந்தவர். கொஞ்சம் வளர்ந்ததும், தன் அம்மாவும் பாட்டியும் வரையும் கோலத்திற்கு பக்கத்திலேயே இவர் ஒரு சிறிய கோலத்தை வரைந்து அதை ரசித்துக்கொள்வார். கோலத்தில் ஆரம்பித்த இந்த ஆர்வத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதையே கலை வடிவமாக மாற்றியுள்ளார்.

“என் அம்மாதான் எனக்கு கோலம் போடக் கற்றுக்கொடுத்தார். அப்படியே அதன் மீதான ஆர்வம் அதிகரித்து, கலை மீதான ஆர்வமும் வளர்ந்தது. பள்ளி முடித்ததும், கல்லூரியில் ஆடை வடிவமைப்பு பயின்றேன். திருமணத்திற்கு முன் கொஞ்சம் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டிருந்தாலும், திருமணமாகி ரங்கம் வந்ததும் அதைத் தொடர முடியவில்லை. எனக்கு எப்போதுமே இந்த பாரம் பரியமும் பழமையும் பிடிக்கும். குறிப்பாக வண்ணமயமான கலைப்பொருட்கள் மிகவும் பிடிக்கும். அதனால் என் வீட்டையும் எப்போதுமே பாரம்பரியமும் பழமையும் நிறைந்த கலைப் பொருட்களால் அலங்கரிப்பேன்.

பழைய பித்தளை பாத்திரங்கள், மரப் பெட்டிகள், மரச்சாமான்கள் கொண்டு வீட்டை நிரப்புவேன். அதிலும் என் கையால் நானே உருவாக்கும் கலைப் பொருட்கள் என் வீட்டில் அதிகம் இடம்பெற்றிருக்கும். காலப்போக்கில் என் அம்மா கற்றுக்கொடுத்த கோலத்தை மரப் பலகைகளில் வரைய ஆரம்பித்தேன். கோலம் என்னை மிகவும் ஈர்க்கும். அப்படியே படிப்படியாக அதை மெருகேற்றி மரத்தாலான கோலப் படிகள் உருவாக்கினேன்.

முதலில் 2018ல் நான் என் வீட்டை அலங்கரித்து அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தேன். அது வீட்டு அலங்காரங்கள் செய்பவர்கள் மத்தியில் பிரபலமாகி பலரும் தங்களுக்கும் அதே போல பொருட்களை செய்து கொடுக்கும்படி கேட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக ஆர்டர்கள் வர ஆரம்பிக்க ஒரு தச்சரும் எனக்கு எப்போதும் உதவியாக இருந்தார். 2019ல் ‘ஹோம்2 செரிஷ்’ (Home 2 Cherish) என்ற பெயரில் வீட்டு அலங்காரக் கலைப் பொருட்களை விற்க ஆரம்பித்தேன்.

முதல் முறையாக, குழந்தைகளை தூளியில் கட்ட இரண்டு மரப் பலகைகளை உபயோகப்படுத்துவார்கள். அந்த தொட்டிலில் என் கைவண்ணத்தைக் கொண்டு அழகிய கோலங்களை வரைந்தேன். அது தாய்மார்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. கோலங்களை மரப் பலகைகளில், தொட்டிலில், மரப் படிகளில், மனைகளில் வரைய ஆரம்பித்ததும் வெளிநாடுகளிலிருந்தெல்லாம் ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. கோலத்திற்கு இவ்வளவு வரவேற்பும் மார்க்கெட்டும் இருப்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

முதன் முறையாக, கார்த்திகை தீபத்தன்று வீட்டு வாசலில் கோலப் படிகளை வைத்து அகல் விளக்குகளை அந்த படிகளில் அடுக்கி அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன். அன்று முதல் கோலப் படிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிலர் ஐந்து படிகள் வேண்டும் என்று கேட்பார்கள். சிலர் பூஜை அறையில் வைக்க கோலப் படிகளை கேட்கின்றனர். இந்த கோலப் படிகள் நானே உருவாக்கிய கலைப் பொருள். எனக்கு உதவியாக இருக்கும் தச்சர் எனது யோசனைகளை அப்படியே மரப்பலகைகளைக் கொண்டு செதுக்கி கொடுப்பார். நான் அதில் கோலம் வரைந்து அழகாக்கிவிடுவேன்.

பெயர்ப் பலகைகளிலும் மரப்பாச்சி பொம்மைகள், கோலங்கள் என வாடிக்கையாளர்களின் விருப்பப்படி டிசைன்களை சேர்த்து கஸ்டமைஸ் செய்து கொடுக்கிறேன். கோலம்-மனைகளையும் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதில் பித்தளை மணிகளை அலங்காரத்திற்காக நான் இணைப்பது வழக்கம். அதில் கடவுளின் உருவ பொம்மைகளைச் சிலர் வைப்பார்கள். சிலர் விளக்குகள் ஏற்ற பயன்படுத்துகின்றனர். சிலர் பூச்செடிகள் கூட வைப்பதுண்டு.

இது தவிர கைகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லாங்குழி விளையாட்டுப் பொருளை ஃப்ரான்ஸ் நாட்டிற்கு அனுப்பினேன். அங்கு அதை விளையாட்டிற்காகவும், சுவரில் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்துகிறார்கள். வெளிநாட்டவர்கள் பலர் இந்திய பாரம்பரிய கலைப் பொருட்களை விரும்பி வாங்குவது ஆச்சரியமாக இருக்கிறது.கோலம் கலைப் பொருட்களைத் தவிர, மினி கதவு ஓவியங்களையும் செய்கிறோம். சமீபத்தில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை கொண்டு உருவாக்கிய கதவு ஓவியங்களுக்கு நெட்டிசன்கள் பல லைக்குகளை பாராட்டுகளாக கொடுத்துள்ளனர்.

உலகம் முழுக்க வாழும் அனைத்து தமிழர்களும் இந்த பொருட்களை விரும்பி வாங்குகின்றனர். இந்தியாவில் தமிழகத்தை தவிர ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் நம் பொருட்கள் அதிகமாக விற்பனையாகிறது. எனக்கு பொதுவாக முப்பது நாட்கள் முதல் நாற்பது நாட்கள் தேவைப்படும். நானே அனைத்துப் பொருட்களையும் செய்வதாலும், ஒவ்வொரு ஆர்டரை கஸ்டமைஸ் செய்து கொடுப்பதாலும், இந்த நேரம் தேவைப்படுகிறது’’ என்றார்.

இப்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 20 ஆயிரம் ஃபாலோவர்ஸைக் கொண்ட தீபிகா, இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் தன் கணவர்தான் என்கிறார். “என்னுடைய கணவர் தன் முழு ஒத்துழைப்பை கொடுத்து மரப் பலகைகள், பொருட்கள் வாங்க உதவியாக இருந்தார். வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்ப நிறைய நேரமும் பொறுமையும் தேவை. அந்த பொறுப்பை என் கணவரே ஏற்றுக்கொண்டு செய்வார். கோலங்களை வைத்து இவ்வளவு பெரிய அளவில் வெற்றி பெற முடியுமா எனப் பல கேள்விகளுக்கு இடையே என் கணவர் தந்த ஆதரவும் நம்பிக்கையும் தான், இன்று என்னை சாதனையாளராக மாற்றியுள்ளது” என்கிறார்.

தீபிகா வரையும் கோலத்தை சிக்கு கோலம், நெலி கோலம், கம்பி கோலம் என ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதமாக அழைப்பார்கள். நவராத்திரி என்றாலே அதில் கோலங்களுக்கு சிறப்பு அங்கம் உண்டு. ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான கோலங்களால் தெருவையே மக்கள் அலங்கரிப்பர். இப்போது அமெரிக்காவிலிருந்து நவராத்திரிக்காக பரிசுப் பொருட்கள் செய்ய தீபிகாவிடம் ஆர்டர் குவிந்துள்ளது. அதன் வேலைகளை மும்முரமாக செய்து வருகிறார்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்