Sep 27, 2020
சிறப்பு கட்டுரைகள்

இது மாற்றத்திற்கான பயணம்!

நன்றி குங்குமம் தோழி

டிசம்பர் 3, காலை எட்டு மணி அளவில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் எப்போதும் போல மக்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க திடீரென சிரிப்பு சத்தத்துடன், பறை இசையுடன் கடற்கரை களைகட்டியது. சுமார் 300 குழந்தைகள், அதில் 150 சிறப்புக் குழந்தைகள். அனைவரும் கையில் விழிப்புணர்வு பலகைகளுடன் வரிசையாகக் கடல் மணலில் நின்றனர். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி இந்த குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நடைப்பயணம், ‘Newgen Knowledge Words’ நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்  முயற்சியின் கீழ் நந்தவனம் அமைப்பினரால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

சுமார் 20 நிமிடம் பறை இசை ஒலிக்க, உற்சாகமாக நடைப்பயிற்சி செய்தனர். நடக்க முடியாத குழந்தைகளை, கல்லூரியிலிருந்து உதவி செய்ய வந்திருந்த மாணவர்கள் தூக்கிச் சென்றனர். பின் ஒன்றாகச் சேர்ந்து பல பாரம்பரிய பீச்விளையாட்டுகளில் கலந்து கொண்டு, மணல் சிற்பமும் செய்து, ஓவியமும் வரைந்தனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பே, இதில் கலந்துகொண்ட குழந்தைகளில் 50 சதவீதத்தினர் சிறப்புக் குழந்தைகளும், மீதி பாதி சாதாரண குழந்தைகளும் என்பதுதான். பொதுவாக இது போன்ற மாற்றுத்திறனாளிகளின் நிகழ்ச்சிகளில், சிறப்புக் குழந்தைகள் மட்டும்தான் கலந்து கொள்வார்கள்.

ஆனால் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து, ஒருவருக்கு மற்றவர் துணையாய் நிற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் இந்த நிகழ்ச்சி. முதலில் குழந்தைகள் தயக்கத்தில் ஒதுங்கி இருந்தாலும், பின்னர் விளையாடும் போது ஒன்றாகச் சேர்ந்து, மற்றவருக்கு உதவி செய்து விளையாடியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சிறப்புக் குழந்தைகளுக்கு சரிசமமான உரிமைகளும், வாய்ப்புகளும் கிடைக்க, சிறு வயதிலிருந்தே இவர்களை ஒன்றாக வளரவிடுவதுதான் சிறந்த வழி.  

“பொதுவாக ஆறு வயதிற்கு மேல் பேச்சு வராத குழந்தைகள், எப்போதுமே பேசமாட்டார்கள். ஆனால் எங்கள் சிறப்புப் பள்ளியில் எட்டு வயதில் பேச ஆரம்பிக்கும் குழந்தைகளும் இருக்கின்றனர்” என்கிறார் நந்தவனம் அமைப்பினருடன் பணியாற்றி வரும் நரம்பியல் மருத்துவர் வீரா பஞ்ச். மேலும், “தினமும் பீச்சிற்கு வந்து வெறும் காலில் கடற்கரை மணலில் நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன்களை நாங்கள் கண்கூடாக இங்கே பார்க்கிறோம். நடக்க முடியாத குழந்தைகள் இங்கு நடக்கின்றனர்.

கால்களில் வலுவற்று நிற்கவே முடியாத குழந்தைகளும் தொடர்ந்து கடற்கரைக்கு அழைத்து வருவதால், எழுந்து நிற்கத் தானாகவே முயற்சி செய்கின்றனர். அடுத்த கட்டமாக நடக்கவும் முயல்கின்றனர்” என்கிறார் மருத்துவர் வீரா.  இந்த மாதிரியான சிகிச்சை, எந்த மருத்துவ புத்தகங்களிலும் கிடையாது. ஏன் இதை சிகிச்சையாகக் கூட பிறர் ஏற்கமாட்டார்கள். நந்தவனம் அமைப்பினரும் கூட, இந்த பீச் சிகிச்சையை தற்செயலாகத்தான் கண்டுபிடித்துள்ளனர். ‘‘அருகிலேயே கடற்கரை இருந்ததால், தினமும் குழந்தைகளை இங்கே அழைத்து வர, திடீரென அவர்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் வளர்ச்சியும் தெரிந்தது.

இதற்கான காரணத்தை ஆராய்ந்த போதுதான், இதெல்லாம் நம் சென்னை கடற்கரையின் மேஜிக் என்று புரிந்தது” என்கிறார் வீரா.  மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களை பாரமாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காக நந்தவனம் அமைப்பினர் தொடர்ந்து பல முயற்சிகள் செய்து வருகின்றனர். அதைப் பற்றிப் பேசிய நிர்வாக  அறங்காவலர் ப்ரீத்தா ஸ்ரீனிவாசன், “சிறப்புக் குழந்தைகள் நமக்கு கிடைத்த வரம். அவர்கள் அனைவர் வீட்டிலும் பிறப்பதில்லை. உங்கள் வீட்டை அந்த குழந்தை தேர்ந்தெடுத்திருக்கிறது என்றால், அதை நினைத்து நீங்கள் பெருமை கொள்ளத்தான் வேண்டும்.

அவர்களுக்கு போலி முகமூடி அணியத் தெரியாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் தூய்மையான அன்பும் பாசமும்தான். யாரையும் ஏமாற்ற வேண்டும் என்று நினைக்காமல், எந்த பொறாமையும் கோபமும் இல்லாமல், எப்போதும் அமைதியாக நிம்மதியாக வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள் சிறப்புக் குழந்தைகள்தான். ஒரு வீட்டில் சிறப்புக் குழந்தை இருக்கிறது என்றால், பெற்றோரில் ஒருவர் அவசியம் வீட்டிலிருந்து குழந்தையை கவனித்துக்கொள்ளும் நிலைமை இருக்கும்.

இது வசதியில்லாத குடும்பத்திற்கு பாரமாகிவிடும் என்பதால், சிறப்புக் குழந்தைகளுக்கான இலவச பகல் நேரப் பராமரிப்பு நிலையம் உருவாக்கியுள்ளோம்” என்றார். நம் சென்னை மக்களுக்கு இருக்கும் பெரிய வரமே கடற்கரைதான். எவ்வளவு கவலையிருந்தாலும் கடற்கரைக்குச் சென்று சில நிமிடம் மணலில் உட்கார்ந்து, அலைகளை பார்த்தாலே மனதில் மகிழ்ச்சி பிறக்கும். ஐந்து ஆண்டுகளாக இந்த கடற்கரை உடற்பயிற்சி மூலம் பல அதிசயங்களை பார்த்த நந்தவனம் உறுப்பினர்கள். இப்போது இதைப் பிற குழந்தைகளுக்கு, சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கும் கொண்டு சேர்க்க முயற்சிகள் செய்து வருகின்றனர்.

“மாற்றுத்திறனாளிகள் தினமும் கடற்கரைக்கு வருவதால் பல நன்மைகள் கிடைக்கும். இங்கு நடைப்பயிற்சி செய்யும் போது, குழந்தைகள் கீழே விழுந்தாலும் அடிபடாது. காற்றுக்கு எதிராக மணலில் நடக்கும் போது, கால்களில் வலு அதிகரிக்கிறது. தினமும் இயற்கையோடு சேர்ந்து இயங்கும் போது, விளையாட்டும் சந்தோஷமும் தாண்டி ஆரோக்கியமும், மன நிம்மதியையும் அதிகரிக்கும். இதனுடன் காலை சூரிய வெயிலும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

எனவே, இது உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் சிறந்த பயிற்சியாக நிரூபணமாகியுள்ளது” என்று தெரிவிக்கிறார் நந்தவனம் சி.எஸ்.ஆர்,  அமைப்பின் தலைவரும், அறங்காவலருமான மிக்கி ஜோசப். கடைசியாக பீச்சில், குழந்தைகள் அனைவரும் பல விளையாட்டுகளை ஒன்றாக விளையாடி, பெரிய திரையில் ஒன்றாக ஓவியங்கள் வரைந்து புது நண்பர்கள் கிடைத்த மகிழ்ச்சியில் ஒவ்வொருவராக விடைபெற்றனர்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்