Mar 09, 2021
சிறப்பு கட்டுரைகள்

விவசாயிகள் போராட்டத்தில் டிராக்டர் பெண்

நன்றி குங்குமம் தோழி

தலைநகர் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெண் விவசாயி எஸ்தர்லீமா தனது டிராக்டரில் விவசாய சங்க கொடிகளை கட்டியவாறு 20 க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளுடன் தஞ்சையில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு, பட்டுக்கோட்டையில் இருந்து டிராக்டரை ஓட்டியவாறு 70 கி.மீ. கடந்து வந்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். அவரிடத்தில் பேசியபோது..

‘‘12 வருடமாக நான் டிராக்டர் ஓட்டுகிறேன். டிராக்டர் பின்னால் நிலத்தை உழும் ரொட்டேட்டரை மாட்டியும் ஓட்டுவேன், லோடுகளை ஏற்றும் டிப்பர் மாட்டியும் ஓட்டுவேன். பிறர் நிலங்களில் உழுவது, விவசாயப் பொருட்களை டிப்பரில் கொண்டு சேர்ப்பது என வாடகைக்கும் செய்து கொடுக்கின்றேன்’’ என நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியவர், ‘‘டிராக்டரின் முன்பகுதியான இஞ்சினை மட்டும் ஓட்டுவது சுலபம். ஆனால் டிப்பர் மாட்டிய பிறகு ரிவர்ஸ் கியரில் டிராக்டரை வளைத்து ஓட்டுவதெல்லாம் கடினமான செயல். டிப்பர் டிராக்டரை ஓட்டிவிட்டால், எந்த வண்டியையும் கையாளுவது வெகு சுலபம்’’ என்கிறார் தன்னம்பிக்கை மிளிர.

‘‘தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆண்டிக்காடு கிராமம் என்னுடையது. டிசம்பர் 16ல், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க, தஞ்சாவூரில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் பலரும் 200 டிராக்டர்களில் கிளம்பினோம். போராட்டத்திற்கு வந்த டிராக்டர்களை ஆண்கள் ஓட்டிவர அதில் நான் மட்டுமே டிராக்டர் ஓட்டிவந்த ஒரே பெண்.

அப்போது டிராக்டரில் வந்தவர்களை காவல்துறை இடைமறித்து ஆங்காங்கே தடுத்து நிறுத்தியது. எனது டிராக்டரும் காவல் துறையால் தடுக்கப்பட, தஞ்சை நோக்கி செல்லும் மெயின் சாலையைத் தவிர்த்து, ஆற்றுப் பாதை வழியாகவே பயணித்து, பல கிராமங்களுக்குள்ளும் புகுந்து, 70 கி.மீ பயணித்து மதியம் 12:30 மணிக்கு நான் மட்டுமே போராட்டம் நடந்த இடம்வரை டிராக்டரில் சென்றேன்.

பல இடங்களில் என் டிராக்டர் காவல்துறையால் தடுக்கப்பட்டபோதும், ரிவர்ஸ் கியரில் பின்னுக்கு இழுத்து மீண்டும் வண்டியைத் திருப்பி, மாற்று பாதைகளுக்குள் நுழைந்து நுழைந்து பயணித்தேன். தஞ்சைக்குள் நுழைந்த என்னை பார்த்ததும், காவல்துறையினர் எப்படி டிராக்டரோடு இந்தப் பெண் மட்டும் ஊருக்குள் நுழைந்தார் என ஆச்சரியம் மேலிட பார்த்தனர். போராட்டம் முடிந்து, மீண்டும் டிராக்டரில் முக்கிய சாலை மார்க்கமாகவே ஊருக்குத் திரும்பினேன்’’ என்றவரிடம்.. எப்படி இது சாத்தியமானது? என்ற நம் கேள்விக்கு..

‘‘நான் விவசாயி மட்டுமல்ல தஞ்சை மாவட்ட சி.பி.ஐ. கட்சியின் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் துணைச் செயலாளராகவும் இருக்கின்றேன். +2 வரை படித்திருக்கிறேன். தற்போது எனக்கு வயது 49. குடும்பச் சூழ்நிலையால் திருமணம் செய்துகொள்ளவில்லை. என் குடும்பத்துக்குள் நடந்த நிலப் பிரச்சனையில் செய்யாத தவறுக்கு கொலைப்பழி சுமத்தப்பட என் அப்பா மற்றும் இரண்டு தம்பிகள் ஆயுள் தண்டனை கைதியாகி சிறைக்குச் சென்றார்கள்.

இது நடந்தது 1997ல். அப்போது எனக்கு வயது 26. எனது அம்மா வெளி உலகம் அறியாதவர். என் மூத்த சகோதரிகள் இருவருக்கும் திருமணம் முடிந்திருந்தது. என்னை அறியாமலே குடும்ப பொறுப்பு எனது தோள்களில் ஏற்றப்பட, முதல் இரண்டு மாதங்கள் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட நிலைதான்.

அப்போது என் சொந்த பந்தங்களும், அருகாமையில் இருந்தவர்களும், எங்கள் குடும்பத்தையும், என்னையும் ஏளனமாகப் பேசியதோடு, எங்கள் குடும்பத்தையே புறக்கணித்தார்கள். இந்த சம்பவங்கள் என் மனதில் வைராக்கியத்தை ஏற்படுத்த, விவசாயத்தைக் கையில் எடுத்து களம் இறங்கினேன். அப்போது என் குடும்பத்திற்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் எங்களிடம் இருந்தது.

வெளி உலகம் தெரியாத நான், தனியொரு பெண்ணாய் விவசாய வேலைகளை கையிலெடுக்க, அந்த சமயத்தில் என் கிராமத்தில் ஒருவரிடம் மட்டுமே டிராக்டர் இருந்தது. நம்மிடமும் டிராக்டர் இருந்தால் நாமே நிலத்தை உழுவது, நடவு செய்வது, கருதருப்பு, விவசாயப் பொருட்களை கொண்டு சேர்ப்பதென யாரையும் அணுகாமல் செய்யலாமே என யோசிக்க, வங்கியை அணுகி விவசாயக் கடனில் டிராக்டரை வாங்கினேன். கூடவே நிலத்தை உழும் ரொட்டேட்டர், விவசாயப் பொருட்களை ஏற்றும் டிப்பர் போன்றவற்றையும் தனித்தனியாக வாங்கி விவசாயத்தில் தைரியமாக கால் பதித்தேன். கொஞ்சநாள் ஓட்டுநரை பயன்படுத்தினாலும், நானும் முயற்சித்து, டிராக்டரை முழுமையாக ஓட்டக் கற்றுக் கொண்டேன்.

படிக்கும் காலத்தில் கிராமத்தில் நடக்கும் அரசியல் கூட்டங்களை வினோதமாகவே வேடிக்கை பார்த்திருக்கிறேன். நானும் அரசியலில் இறங்குவேன் என்றெல்லாம் யோசித்ததே இல்லை. என் சூழல் என்னை அரசியலை நோக்கியும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தியது. இப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் என்.எஃப்.ஐ.டபிள்யூ.வில் இருக்கிறேன். திருமணம் ஆனால் இன்னொரு வீட்டுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் விருப்பப்படியே நடக்க வேண்டும் என்பதால் திருமணத்தை தவிர்த்தேன். இடைபட்ட 21 ஆண்டுகளில், என்னுடைய 46 வயதில், நன்னடத்தையில் எனது அப்பாவும் சகோதரர்களும் விடுதலை ஆனார்கள்.

எங்கள் குடும்பத்து ஆண்கள் திரும்பி வரும்வரை குடும்பத்தையும், விவசாயத்தையும் தனியொருத்தியாகக் காத்து மீட்டெடுத்திருக்கிறேன். இப்போதும் குடும்ப நிர்வாகமும், விவசாய முன்னெடுப்புகளும் என்னிடமே உள்ளது. சிறையில் இருந்து திரும்பிய என் அப்பாவும் சகோதரர்களும் என்னை பெருமையாகவே பார்க்கிறார்கள். எந்த நிலையிலும் நான் கட்சி கூட்டம் எனச் செல்வதை என் குடும்பத்தினர் தடுக்கவில்லை.

அரசியலுக்குள் நுழைந்து களப் பணி ஆற்றத் தொடங்கியதில் தைரியமும் தன்னம்பிக்கையும் ரத்தத்தில் ஓட்டிக் கொண்டது. என் முன்னேற்றத்தையும், தைரியத்தையும் பார்க்கும் உறவுகளும், ஊர்க்காரர்களும் தானாகவே வந்து அன்போடும், மரியாதையோடும் இப்போது பேச ஆரம்பித்திருக் கிறார்கள். அவர்கள் பிரச்சனைகளையும் என் வீடு தேடி வந்து விவாதிக்கிறார்கள் என்கிறார் அழுத்தமாக.

மூன்று விவசாய சட்டங்கள் சொல்வதென்ன..?

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலச் செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான மஞ்சுளாவிடம், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து பேசியபோது…

*அரசியல் அமைப்பு சட்டப்படி விவசாயம் மாநிலங்களின் பட்டியலில் உள்ளது. வேளாண் சட்டங்களின் மூலம், மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறித்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சட்டம், தனித்தனி பேச்சுவார்த்தை என நடத்தாமல், பொதுவான பேச்சுவார்த்தை என்பது கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான சூழல்.  

*இந்தியாவில் 85 சதவிகிதம்பேர் சிறுகுறு விவசாயிகள். அவர்கள் தங்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்கலாம் என்னும் சட்டத்திலும் சிக்கல்கள் உள்ளது. வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் எனப்படும் மண்டிகள் நீக்கப்பட்டு, விளைபொருட்கள் நேரடி கொள்முதலுக்கு மாறுவதும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்டமே. ஒப்பந்த விவசாயிகள் என்ற முறையில் கார்ப்பரேட்டுகள் இவர்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள். அரசின் ஆதாரவிலை, கொள்முதல், சேமிப்பு. பொதுவினியோகம் இன்மையால் எளிய மக்களுக்கான நியாயவிலைக் கடைகள் இல்லாமல் போகும்.

*அத்தியாவசியப் பொருள் பட்டியலில் இருந்தவற்றையும் நீக்கியுள்ளார்கள். இதன் மூலம் பெரு நிறுவனங்கள் சேமிப்பு கிடங்குகளில் விளைபொருட்களை சேமித்து விலையேற்றம் செய்வதோடு, கள்ளச் சந்தை விற்பனைக்கும் வழி வகுக்கும். தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் இலவச மின்சாரம் சட்டம் தவிர்க்கப்படும்போது மின்சாரத்திற்காக விவசாயிகள் மிகப்பெரும் விலை கொடுக்கும் நிலையும் மேலும் இதில் உருவாகியுள்ளது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்