Jul 07, 2020
ஸ்பெஷல்

மூழ்கிக்கொண்டிருக்கும் நகரங்கள்

நன்றி குங்குமம் முத்தாரம்

நாகரிகம் ஆரம்பித்த காலத்தில் நகரங் கள் ஆற்றங்கரைகளிலும், கடலை ஒட்டிய பகுதிகளி லும்தான் தோன்றின. இன்று நாகரிகத்தின் உச்சியில் இருக்கிறோம். இதன் முதல் தாக்கம் காலநிலை மாற்றம். இதன் பெரிய பாதிப்பு தண்ணீர் பற்றாக்குறை.
இந்த தண்ணீர் தேவைக்காக பூமியை குடையக்குடைய, பூமி மண் அசைந்து... இளகி... அதைச் சார்ந்த நகரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் ஒரு கட்டத்தில் பூமியில் உள்ள பல நகரங்கள் கடல் நீரால் சூழப்படலாம், மூழ்கடிக்கப்படலாம். அல்லது மிதக்கலாம். இப்படி கடல் மட்ட மாற்றத்தால் பாதிப்பை சந்திக்கப்போகும் நகரங் கள் சிலவற்றை பார்ப்போம்.

மும்பை

இந்த நூற்றாண்டின் முடிவிற்குள் மும்பை மூழ்கும் என்கிறது ஒருகால நிலை ஆய்வு நிறுவனம். மும்பை கடல் மட்டத்தில் உள்ளதால் இதன் சில பகுதிகள் ஏற்கனவே, கடல் உள்புகும் சூழலுக்கு உள்ளாகியுள்ளன. வாய்க்கால், ஏரிகள், குளங்கள் வீடுகளாகவும், அபார்ட்மெண்ட்களாகவும் உருவெடுத்ததின் பலன் தண்ணீர் வாய்க்கால் மூலம் கடலுக்குச் செல்லாமல், வெள்ளமாக நகரையே சூழ்ந்து நிற்கின்றது. அரபிக்கடலின் தண்ணீர் 2050 வாக்கில் நகரத்துக்குள் புகும் என்கிறார்கள். இதனால் நகரமே, கடல் நீரில் சங்கமிக்கலாம்.
 
ஜகார்த்தா


உலகிலேயே மிக வேகமாக மூழ்கி வரும் நகரம் ஜகார்த்தா தான். இது வருடா வருடம் கடல் மட்டத்திலிருந்து 6, 7 அங்குலம் இறங்கி வருகிறது. தற்போதே ஜகார்த்தாவின் 45 சதவிகிதம் கடல் மட்டத்துக்கு கீழேதான் உள்ளது. இதற்கு கூறப்படும் முக்கிய காரணங்களில் ஒன்று... பூமிக்கடியில் இருக்கும் தண்ணீரை குழாய் போட்டு இழுப்பதுதான். இதனால் பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரின் அழுத்தத்திலும் கொள்ளளவிலும் மாற்றம் ஏற்பட்டு, நிலம் மூழ்க ஆரம்பிக்கிறது.
 
நியூ ஆர்லியன்ஸ்

2040-ம் ஆண்டுவாக்கில் இந்த நகரம் சார்ந்து கடல் மட்டம் 14.5 அங்குலம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாசாவின் கணிப்புப்படி இப்பவே இந்த நகரின் சில பகுதிகள் வருடத்திற்கு 2 அங்குலம் வரை கடல் மட்டத்தில் மாற்றம் கண்டு வருகின்றது. இத்தகைய தாக்கம் மிசிசிபி நதியை ஒட்டிய தொழிலகங்கள் நிறைந்துள்ள நார்கோ மற்றும் மிச்சவுட் பகுதிகளில் இப்போதே தெரிகிறதாம்.இந்தப்பகுதியில் கடல் மட்டம் உயர பூமி அடித்தண்ணீர் உறிஞ்சப்படுவது தான் முக்கிய காரணம். அத்துடன் எண்ணெய், வாயு ஆகியவை எடுக்கப் படுவதால் இந்தப் பகுதியே பனிப் பாறைகள் பகுதியிலிருந்து விலகி வரும் சூழலும் எழுந்துள்ளது.

மியாமி

இங்குதான் கடல் மட்டம் மிக வேகமாக உயருகிறது. பலன்... வெள்ளம், கழிவுநீர் கலப்பு போன்றவற்றால் வீடுகள், சாலைகளுக்கு பாதிப்பு. மியாமி மற்றும் மியாமி பீச் பகுதிகளில், ஏற்கனவே கடல் மட்ட உயர்வால், மழையில்லாத காலங்களிலும்கூட பாதிப்புகள் ஏற்படுகின்றன.  மழை நீரால் பாதிக்கப்படும் பகுதி களில் கடல் சுற்றி சூழ்ந்துள்ளதால், மேலும் சிக்கல். இந்தப் பகுதியில் சுண்ணாம்பு கல்பாறைகள் என்பதால், அது மூலமாகவும், தண்ணீர் உயருகிறது.

வெனிஸ்

கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பாக 2019-ம் ஆண்டு, வெள்ளத்தை பொறுத்தவரை இந்த நகருக்கு மிக மோசமான ஆண்டு. பிரபல சுற்றுலா இடங்களான செயின்ட் மார்க்ஸ் பாசிலிகா மற்றும் பியாசா சன்மாரக்கோ ஆகியவை, கடல் தண்ணீரால் சூழப்பட்டன.

இங்கு கட்டிடங்கள் நேரடியாக தரையில் அமையவில்லை. மாறாக, அடியில் சாரம் போன்று கட்டி அதன்மீது கட்டிடங்களை எழுப்பியுள்ளனர். இது சமீபகாலமாக கிழக்கு பக்கமாக சாய்ந்து வருகிறதாம். மேலும், இங்கு தண்ணீர் அடிக்கடி சிக்கலை ஏற்படுத்துவதால் நகரின் அழகிய கைவேலைப்பாடு சின்னங்களுக்கு அழிவுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.