Sep 23, 2020
ஸ்பெஷல்

செடிகளே இனி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்!

சென்னை, கோவை, மதுரை  போன்ற நகரங்களில் வாழும் மக்களில் முப்பது சதவிகித மக்களுக்கு ஆஸ்துமா, வீஸிங் பிரச்னைகள் உள்ளன என்பது ஈ.என்.டி மருத்துவர்களின்  கருத்து.  ‘நச்சுப்புகை, உடலைப் பதம் பார்க்கும் மாசு  எதிர்காலத்தில்  இன்னும் அதிகரிக்கும் என சூழலியலாளர்கள் கூறுகின்றார்கள்.
 
‘‘சுவாசிக்க சுத்தமான காற்று வேணும்னா தண்ணீரைப்போல காசு கொடுத்து ஆக்சிஜனையும்  வாங்க வேண்டும் . இல்லை கிராமத்துக்குத்தான் போகணும்.!’’ என நாம் வருந்துவோம். ஆனால், மரங்களுக்கு இணையாக ஆக்ஸிஜனைத் தரும் செடிகொடிகள் என  பல வகைகள் உள்ளன. எல்லா சீதோஷ்ண நிலையிலும் வாழும் இந்தச் செடிகளை இயற்கை தந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் எனக் கூறலாம். நமது பெட்ரூம், சமையலறை, பால்கனி என்று எங்கு வேண்டுமானாலும் இவற்றை வளர்க்கலாம்.

கோல்டன் போதோஸ் (Golden Pothos)

நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும். வீடு, அலுவலகம், ரயில் நிலையம், கல்லூரி என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கலாம்.

வெள்ளால் (Weeping Fig)

காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தும். சிலிண்டரில் இருந்து லீக் ஆகும் கேஸ், கழிவுப் பொருளிலிருந்தும் அழுக்குத் துணிகளிலிருந்தும் வரும் கெட்ட வாயுக்களை இது கிரகித்துக் கொள்ளும். சமையலறை குளியலறை, மற்றும் டாய்லெட் போன்ற இடங்களில் இந்தச் செடியை வைக்கலாம்.

சக்குலென்ட்ஸ் (Succulents)

பேச்சலர்கள் படுக்கை அறையில் வைக்க சிறந்த செடி சக்குலென்ட்ஸ். சிறிய அளவிலான தூசி, சிகரெட் புகை போன்றவற்றை முடிந்தளவு கிரகித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது. அதே போல   இதை பராமரிப்பது சுலபம். கற்றாழை போல அனைத்து சூழலிலும் வளரக்கூடியது. காற்றில் இருந்தே தனக்கான நீரை எடுத்துக்கொள்ளும்.

ஸ்னேக் பிளான்ட் (Snake plant)

இது நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைட் போன்ற நச்சு வாயுக்களை கிரகித்து ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும். நாம் பயன்படுத்தும் ஷாம்பு, சோப்பு போன்றவற்றில் ஃபார்மால்டிஹைட் இருந்தாலும் பெயின்ட், நெயில் பாலிஷ் போன்றவற்றில் சற்று அதிகமாகவே உள்ளது. இது கண் பார்வைக் கோளாறு, தலைவலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆக, புதிதாக வண்ணம் பூசிய வீடுகளில் பெட் ரூமில் இந்தச் செடியை வளர்ப்பது நமது ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பு.

ஆர்ச்சிட்ஸ் (Orchids)

மூலிகைத் தாவரம், துளிசி, புதினா போன்றவற்றை சுவாசித்தல் ஒருவித புத்துணர்வு கிடைக்கும் அதற்கு இணையானது  ஆர்ச்சிட்ஸ் தாவரம்.  நல்லத் தூக்கத்தையும் உடல் ஓய்வையும் தரும்.  உடலை நீண்ட நேரம் உற்சாகமா வைக்க செய்யும், உடலில் ஏற்பட்ட சிராய்ப்பு, கீரல்  போன்றவற்றை ஆற்றக்கூடிய வாயுவை வெளிப்படுத்தும் .இன்ஃபெக்சனை கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. சுவாசிக்க  ஆகச்சிறந்த காற்றை தருகிறது. பள்ளி கல்லூரிகளில் அதிகம் வைக்கின்றனர்.

சீமை ஆல்  (Rubber plant)

வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மை கொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்ஸிஜனை வெளியிடும். கற்றாழையின் அருகில் இந்தச் செடியை வைப்பது சிறப்பு. இரண்டும் கூட்டணி அமைத்து காற்றை சுத்தப்படுத்தும் வேலையை செய்யும்.

கற்றாழை  (AloeVera)

மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, கிராமங்களில்அனைத்து வீடுகளிலும் நிச்சயம் இருக்கும். காடு, மேடு என எங்கும் பார்க்கலாம் ஆனால் நகரங்களில் கட்டாயம் தேவை.   ‘ஸ்னேக் பிளான்ட்’காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைடை சுவாசித்து ஆக்ஸிஜனை வழங்குகிறது என்றால், கற்றாழை ஃபார்மால்டிஹைடை முழுதாகக் கிரகித்துக் கொள்ளும். மற்றும் முடி உதிர்தல், தீப்புண் போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகவும் பயன்படும்.

மலைப் பனை  (Bamboo Palm)

காற்றில் கலந்துள்ள நச்சுக்களை நீக்கும். அழுகிய காய்கறிகளிலிருந்து வரும் துர்வாடையை மட்டுமல்ல, பிளாஸ்டிக்கை எரிப்பதால் வரும் நச்சுக்களையும் இது கிரகித்துக்கொள்ளும். அறையில் இயற்கையான ஈரப்பதத்தை எப்போதும் நிலவச் செய்யும். வீட்டுச் சமையலறை, அலுவலகம், பலர் ஒன்று கூடும் ஆடிட்டோரியம் போன்றவற்றில் இதை வைப்பது நல்லது.

பீஸ் லில்லி  (Peace Lilies)

எல்லா இடங்களிலும் வளர்க்கக்கூடிய , அனைத்து  சீதோஷ்ண நிலையையும் தாங்கும். பூஞ்சைகள், பாசான்,  காற்றின் நச்சு போன்றவைகளால் உண்டாகும் மாசு பூஞ்சை  காளான் உருவாகாமல் தடுக்கும். குளியலறை, பால்கனி போன்ற பகுதிகளில் வளர்க்கலாம்.

லாவண்டர்  (Lavender plants)

பராமரிப்பது சிரமம் . முறையாக பாதுகாத்தால் நல்ல பலனை தரும். மேற்கத்திய உணவுகளில் நம்ம ஊர் புதினா, கொத்தமல்லி  போல முக்கியமான வாசனைச் செடி. இந்த செடியின்  அருகில் சில நிமிடம் அமர்ந்தாலே உற்சாகத்தை தரும். நன்றாக காய்ந்த எலுமிச்சை தோட்டத்தில் கிடைக்கும் சுவாசப்பரிஷத்தை உண்டாக்கும். நோய்களை குணப்படுத்தும், நல்லதூக்கத்தை தரும்.

தொகுப்பு: திலீபன் புகழ்