Jul 05, 2020
ஸ்பெஷல்

வாழ்க்கை + வாகன பயணம் வேகமாக ‘வழி காட்டியவர்’ - இன்று (மார்ச் 18) ருடால்ப் டீசல் பிறந்தநாள்

‘என்னப்பா... கார் வாங்கியிருக்கே போல... பெட்ரோல் இன்ஜினா? டீசல் இன்ஜினா’’ என பயணத்தின்போது கேட்போம். ‘கட்டை வண்டி’ போல, கடந்து சென்று வாகனங்களின் வேகத்தை கூட்டிய, நீராவி இன்ஜினுக்கு மாற்றாக டீசல் என்ஜினை முதன்முதலாக கண்டுபிடித்த ருடால்ப் டீசலைப் பற்றித்தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், 1858ம் ஆண்டு, மார்ச் 18ம் தேதி தியோடர் டீசல் - எலிஸ் டீசல் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ருடால்ப் டீசல். போர் உள்ளிட்ட காரணங்களால் பிரான்சை விட்டு டீசல் குடும்பம், பிரிட்டனில் குடியேறியது. உறவினர் குடும்பத்தில் இருந்தபடியே பிரான்ஸில் படிப்பை தொடர்ந்து ருடால்ப் டீசல்.

படிப்பு ஒருபுறம் சென்றுக் கொண்டிருந்தாலும், மனம் எப்போதுமே இயந்திரங்களின் செயல்பாடுகளை மட்டுமே ஆராய்ந்துக் கொண்டிருந்தது. ஒரு பொருள் எப்படி இயங்குகிறது? அதன் இயங்குதிறனை அதிகப்படுத்தினால் என்ன? இப்படி பலவிதமாக யோசிப்பார். பள்ளிப்படிப்பை முடித்ததும் பெற்றோர் வசித்து வந்த ஜெர்மனிக்கு பயணமானார் ருடால்ப். அங்கு ஆக்ஸ்பர்க் நகரில் உள்ள தொழிற்கல்விக் கூடத்தில் பயின்றார். படிப்பை முடித்த பின் முனீச் நகரில் உள்ள ராயல் பவேரியன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். படிக்கும்போதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்தினார். உடல்நலம் தேறியதும், தனது பேராசிரியரான கார்ல் வான் லிண்டேவின் ரெப்ரிஜிரேட்டர் தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து, படிப்படியாக இயக்குநர் ஆனார். ருடால்பும், லிண்டேவும் இணைந்து பல நவீன இயந்திரங்களை வடிவமைத்தனர்.

அப்போதுதான் வாகனங்கள், ஏன் இப்படி மெதுவாக செல்கின்றன எனவும், இதன் வேகத்தை கூட்டினால், ஒரு மனிதனின் நேர விரயத்தை தடுக்கலாமே என எண்ணினார். சராசரி வேகத்தை பல மடங்கு அதிகரிக்க வேண்டுமென யோசித்தார். அதன் விளைவுதான் டீசல் இன்ஜினை தயாரிக்க உதவியது. 10 ஆண்டுகளாக தொடர் ஆராய்ச்சி + உழைப்பின் பலனாக டீசல் இன்ஜின்களை உருவாக்கினார். அப்போது நீராஜி இன்ஜினே ரயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களுக்கு பயன்பட்டு வந்தது. இவ்வகை இன்ஜினில் எரிபொருள் அதிகம் வீணாகிறதே என யோசித்தவர், இதற்கு மாற்றாக ‘கம்ப்ரெஷன் இக்னிஷன்’ என்ற இன்ஜினை வடிவமைத்தார். அதுவே அவரது பெயரில் டீசல் இன்ஜின் எனப்பட்டது.

பின்னர் தனது டீசல் இன்ஜினுக்கு காப்புரிமை பெற்றார். இதை பல நாடுகளுக்கும் விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்றார். டீசல் இன்ஜினில் சில வகையான தாவர எண்ணெய்களையும் எரிபொருளாகப் பயன்படுத்த முடியுமென நிரூபித்தார். அப்போது பெட்ரோலியத்தில் இருந்து ஒரு எரிபொருள் எடுக்கப்பட்டு டீசல் இன்ஜினுக்கு பயன்படுத்தப்பட்டது. இதற்கும் டீசல் என்றே பெயரிடப்பட்டது. அன்று மட்டுமல்ல... இன்று வரை டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு, தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைய வித்திட்டது என்றால் உங்களால் மறுக்க முடியுமா? ஒரு வர்த்தகமாக இருந்தாலும் சரி... பொருட்களை விற்பதாக இருந்தாலும் சரி... விரைவாக பணி முடிந்தால்தான் வணிகத்தை பெருக்க முடியும். அதற்கு டீசலின் பல ஆண்டு உழைப்பு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறக்க முடியாது.

இப்படி அரிய கண்டுபிடிப்பால், உலகப்புகழ் பெற்ற ருடால்ப், 1913ல் லண்டனுக்கு சென்ற கப்பலில் பயணித்தார். அப்போது திடீரென மாயமானார். பின்னர் 10 நாட்களுக்கு பிறகு இவரது உடல் கரை ஒதுங்கியது. இவரது மரணம் தற்கொலையா? உடல்நலம் பாதிப்பால் விரக்தியா? இல்லை... இவரை கொலை செய்து கடலில் வீசினார்களா? இப்படி பல விடை தெரியாத கேள்விகள் ருடால்ப் டீசலின் மர்ம மரணத்தை சுற்றி சுற்றி வளைய வந்தன. அவர் உடலின் தன்மையை கொண்டு 1913, செப்.29ம் தேதி அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. மர்மமாக இறந்தாலும், நமது வாழ்க்கைப்பயணத்திற்கு உதவும் வாகனங்கள் வழியாக, டீசல் இன்று வரை வாழ்ந்துக் கொண்டுதானிருக்கிறார்.