Dec 01, 2020
ஸ்பெஷல்

ஒரு தேசம்; ஒரு கட்சி; ஒரு தலைவன்; ஒரு மதம் ஒற்றைத் தலைமையை நோக்கி இந்தியா?

நன்றி குங்குமம்

இந்தியா முழுதும் இப்போதும் ஓங்கி வரும் கோஷங்களில் ஒன்று ‘ஒரு தேசம்; ஒரு கட்சி; ஒரு தலைவன்; ஒரு மதம்’ என்ற விபரீதமான கோஷம்தான். ஒரு தேசம்; ஒரு வரி என்கிற பொருளாதாரத் திட்டமாக முன்வைக்கப்பட்ட கோஷம், இப்போது புதிய அரசியல் - சமூக - பண்பாட்டு - பொருளாதாரக் கட்டமைப்புக்கான கோஷமாக முன்வைக்கப்படுகிறது. இது நடக்க சாத்தியமானதா என்று சிலர் கேட்கக்கூடும். ஆனால், நாம் இன்று வாழும் வாழ்க்கை முப்பது வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கை போன்றதா என்ன? முப்பது வருடங்களுக்கு முன்பு நம் இந்தியா இப்போது உள்ளதைப் போல் ஒருநாள் மாறும் என்று யாராவது சொல்லியிருந்தால் நம்பியிருப்போமா? இந்த மூன்று தசமங்களில்தான் நாம் அரசு, அரசமைப்புக் கொள்கைகள், செயல்திட்டங்கள் சார்ந்து எத்தனையோ பெரிய மாற்றங்களைச் சந்தித்து விட்டோம்.இந்தியாவின் இளம் பிரதமராக ராஜிவ் காந்தி பொறுப்பேற்றுக்கொண்ட புதிதில், அதாவது 1985ம் ஆண்டு, அவர், ‘நாம் புதிய நூற்றாண்டுக்குத் தயாராக வேண்டும்’ என்றார். அப்போது அதற்கு இன்னமும் பதினைந்து ஆண்டுகள் இருந்தன. புதிய நூற்றாண்டு என்பது என்ன? ஒரு வாரம் முடிந்து அடுத்த வாரம் பிறப்பது போலவோ, முப்பதாம் தேதி முடிந்து அடுத்த மாதம் தொடங்குவதோ போலவெறும் காலண்டர் மாற்றம் என்றுதான் அப்போது பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.அந்த ஆண்டு ராஜிவ் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலாளித்துவ உலகமயமாக்கலுக்கான பணிகள் வேகமாக முடுக்கிவிடப்பட்டிருந்த நேரம்.

இங்கிருந்த இடதுசாரிகள் உள்ளிட்டோர் காட், டங்கல் போன்ற உலகமய ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்று போராடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், உலகமயம் தவிர்க்கவே இயலாத ஒரு பொருளாதாரத் தேவை என்ற புரிதல் அப்போதைய மத்திய அரசுக்கும் ஆளும் கட்சிக்கும் இருந்தது. இப்படியான சூழலில்தான் ராஜிவ் அமெரிக்கா செல்கிறார். அதனால்தான் அவருக்கு ஏகபோக வரவேற்பு. அந்நாளின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், தூதரக அதிகாரிகள், விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அமெரிக்கர்கள், என்ஆர்ஐ இந்தியர்கள் பலரும் புதிய நூற்றாண்டுக்கு இந்தியா தயாராகிவிட்டது.... புதுயுகம் பிறக்கப் போகிறதென நிஜமாகவே மகிழ்ந்தார்கள். அப்போதுதான் ராஜிவ் காந்தி அவர்கள் சாம் பிட்ரோடாவுடன் இணைந்து இந்தியாவில் தகவல் தொடர்பு புரட்சியை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப செயல்திட்டங்களை வடிவமைக்கத் தொடங்கினார். அப்போது காங்கிரஸ் அரசிடம் நாடாளுமன்றத்தில் 414 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். பாரதீய ஜனதா கட்சியிடம் வெறும் இரண்டே இரண்டு இடங்கள்தான் இருந்தன. அப்போதைய பாஜகவின் மிகப் பெரிய தலைவரும் பிரதமர் நாற்காலிப் போட்டியாளருமான அடல் பிஹாரி வாஜ்பாயேகூட மாதவராவ் சிந்தி யாவிடம் குவாலியர் தொகுதியில் வெற்றியைப் பறிகொடுத்திருந்தார். அப்போது யாராவது பாஜக இன்னும் ஒரு தசமத்தில் இந்தியாவின் அதிகாரத்துக்கு வரும் என்று சொல்லியிருந்தால் சிரித்திருப்பார்கள். ஆனால், என்ன நடந்தது..? நாடு முழுதும் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் திட்டமிட்டு பிரச்சாரப்படுத்தப்பட்டது. புதிய இந்தியாவைக் கட்டுவதே தங்கள் பணி என்று ராஜிவ் பேசிக்கொண்டிருந்தபோது, ராமர் கோயில் கட்டுவதே தங்கள் பணி என்ற கோஷத்தோடு பாஜக ரதயாத்திரையைத் தொடங்கியது.

வளர்ச்சிக்கான அரசியல், மதத்துவேஷத்துக்கான அரசியல் என இரு தரப்பு அரசியல்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் உணர்ச்சிகரமே வென்றது. பாஜக அதிகாரத்தில் வந்து அமர்ந்தது.இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அது பாஜகவின் கருத்துருவாக்க அரசியல். பாபர் மசூதியை இடிப்பது வெறுமனே ஏதோ ஒரு மசூதியை இடிப்பது அல்ல. அது இந்தியா என்ற நவீன அரசுக் கட்டுமானத்தை உடைப்பதன் ஒரு பகுதி. பாபர் மசூதியை இடிப்பது முதல் செயல்திட்டம் என்றால் அதன் உச்சபட்சமான செயல்திட்டம் இப்போது இருக்கும் இந்தியா என்ற ஜனநாயக தேசிய கட்டுமானத்தை உடைப்பதுதான். முதல் கட்டத்தை கால் நூற்றாண்டுக்கு முன்பே செயல்படுத்தியவர்கள் அதன் உச்சகட்டமான இந்திய தேசிய கட்டுமானத்தை தகர்ப்பது, இந்தியாவின் முகத்தை மாற்றி அதனை ஒரு ஒற்றை இந்துத்துவ நாடாக மாற்றுவது என்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். நன்கு கவனியுங்கள். இந்து நாடு அல்ல. இந்துத்துவ நாடு. இரண்டும் ஒன்றுதானே என்று சிலர் கேட்கக்கூடும். இல்லை. நிச்சயமாக இல்லை. நேரு சொன்னது போல் இந்து மதம் வேறு, இந்துத்துவ அடிப்படைவாத சிந்தனை வேறு. அது, இந்து மதத்தின் மிகச் சில சிறுபான்மை உயர்ந்த சாதிகளுக்கு மட்டுமே அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதை நோக்கமாகக் கொண்டது. அது எல்லாவகையிலும் ஜனநாயகத்துக்கு எதிராக, எதிர் மானுட சிந்தனைகளை முன்வைப்பது. இந்த புதிய கட்டுமானம் நிர்மாணிக்கப்பட்டால் காந்தியின் இடத்தில் சாவர்க்கர் அமர்த்தப்படுவார். சட்டப் புத்தகத்தின் இடத்தில் மனுநீதி அமரும். இந்தியத் தாயின் பாதங்கள் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னால் இழுத்துக்கொண்டு போய் விடப்படும்.நாம் இந்த மோடி அரசு பதவி யில் அமரும் வரை, இந்தியா என்கிற இந்தக் கருத்துரு அல்லது ஏற்பாடு அவ்வளவு சீக்கிரம் யாராலும் கலைத்துவிட இயலாதது என்றுதான் நம்பிக்கொண்டிருந்தோம்.

ஆனால், மோடி பதவியேற்ற சில மாதங்களிலேயே திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாற்றி அமைக்கப்பட்டது. இந்தியாவின் அணி சேராக் கொள்கைகள் கைவிடப்பட்டன. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுடனான நட்புறவு கைவிடப்பட்டது. இந்தியாவில் ஐஏஎஸ் என்பது தன்னிச்சையான அதிகாரம் மிக்க பதவி. ஆனால், அனைத்து அமைச்சரகங்களும் பிரதமமந்திரி அலுவலகத்துடன் (PMO) இணைக்கப்பட்டன. இன்று ஒவ்வொரு அமைச்சகத்தின் திட்டங்கள் அனைத்தும் பிஎம்ஓ அலுவலகத்தில்தான் தீர்மானிக்கப்படுகின்றன. அமைச்சகங்களுக்கான தனிப்பட்ட அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பிரதமரிடம் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது. இப்படி, அனைத்து அமைச்சகங்கள், திட்டக்குழு, வெளியுறவுத்துறை அமைச்சகம், ரா (RAW) என அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது ஜனநாயகத்துக்கு விடப்பட்டுள்ள சவால். நீதிமன்றங்களும் தேர்தல் ஆணையமும் மட்டுமே தனித்துவிடப்பட்டுள்ளன. இவையும் நேர்மையாகவும் தன்னிச்சையாகவும் இயங்குவதற்கு பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் போடப்படு கின்றன. இப்படியான சூழலில்தான் இந்தியாவை அமெரிக்கா போல் அதிபர் ஜனநாயகம் முறையில் மாற்றியமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்கிறார்கள். ஆனால் அமெரிக்கா போல் இரு கட்சி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியாக மாறுமா என்பதுதான் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இந்த புதிய மாற்றம் நிச்சயமாக இந்தியாவுக்கு நல்லதல்ல. இந்தியா போன்ற வளரும் நாடு ஒன்றுக்குத் தேவை மையப்படுத்தப்பட்ட அதிகார வலைப்பின்னல் அல்ல. அடுக்குநிலைகளும் பன்முக ஜனநாயகத்தன்மையும் கொண்ட ஃபெடரல் அதிகார அமைப்புகள்தான். இந்தியாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்றுதான் யாராலும் சொல்ல இயலவில்லை.                 

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்