Apr 11, 2021
ஸ்பெஷல்

பெண் இன்றி பெருமை இல்லை

அன்பு, ஆதரவு, அடக்கம் என்ற மூன்றிற்கும் அர்த்தமாக மனிதகுலத்தில் வாழும் தெய்வம் பெண். ஒரு தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, நலம் விரும்பியாக, வழிகாட்டியாக காலம் காலமாக பெண்கள் ஏற்கும் வேடங்கள்தான் எத்தனை எத்தனை? உடல் உறுதி கொண்ட ஆணைவிட மனஉறுதி கொண்ட பெண்ணே எந்நாளும் சிறப்பு மிக்கவள். பெண் இன்றி பெருமையும் இல்லை, கண் இன்றி காட்சியும் இல்லை என்று ஒரு முதுமொழி உண்டு. கடந்த பல ஆண்டுகளாக ஆணாதிக்க சக்திகளின் அடிமையாக, பெண்ணியம், பேச்சுரிமை, கருத்துரிமை, கல்வி உரிமை, விவாக உரிமை, வழிபாட்டு உரிமை என எதுவுமே இல்லாதவர்களாக வாழ்ந்தனர் மேற்குலகிலும்.

1910-ம் ஆண்டு, டென்மார்க் தலைநகரில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் தலைமையிலான உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில், பெண்களின் பிரச்னைகளுக்கு சோசியலிஸ்ட் பார்வையுடன், உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் 1917-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியன்று பெண்கள் மற்றும் தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர். இந்தப் புரட்சிகர தினமே உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. பாரதி கண்ட கனவினைப்போல் பலருக்கும் ஏற்பட்டதன் விளைவாய் பெண்கள் இன்று பல்வேறு உரிமைகளை நிலைநாட்டி வெற்றிநடை போட்டு வருகின்றனர்.

காலத்தின் தேவையால் ஆணுக்கு இணையாக பெண்களும் இன்று பணிக்குச் செல்வதாகட்டும், தங்களின் திறமைகளால் அமெரிக்க துணை ஜனாதிபதி என்ற உயர் பதவி வரை அடைவதாகட்டும் பெண்கள் தங்களின் அறிவுத்திறத்தால் உலகையே வென்று வருகிறார்கள். இருப்பினும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆங்காங்கே அரங்கேறி வருவது ஆணினத்திற்கு அழகானதல்ல. பெண்கள் என்றவுடன் அவர்களின் பாதுகாப்பே முதன்மை பெறுகிறது. இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில், பெண்களின் பாதுகாப்பு பற்றிய ஆய்வு முடிவுகள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உலகில் பெண்கள் வாழ்வதற்கு மிக மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது.

பொள்ளாச்சி, நாகர்கோவிலில் அரங்கேறிய கொடூரமாகட்டும், சமீபத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே நடந்த அதிர்ச்சிகர சம்பவமாகட்டும் சாதாரண பெண் முதல் காவல் துறையிலிலுள்ள பொறுப்பு மிக்க பெண்ணிற்கே பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது. பாதுகாப்பு இப்படி இருக்கையில் பெண் கல்வியும் கேள்விக்குறியாக மாறிவருகிறது. மாணவி அனிதாவின் டாக்டர் கனவைக் காவு வாங்கிவிட்டு ‘பேட்டி படோ’ என்கிறது மத்திய அரசு. உள்நாட்டு உற்பத்தியில் ஜி.டி.பி.யில் 6 சதவிதம் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று கோத்தாரி கல்விக்குழு பரிந்துரைக்கிறது. ஆனால்ஆண்டுக்கு ஆண்டு கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைந்து கொண்டே செல்கிறது. பள்ளி கட்டிடங்களில், கழிவறைகள் உள்ளிட்ட சுகாதார கட்டமைப்பு இல்லாமல் பல பெண்கள் உயர் கல்விக்கு செல்லாத நிலை நிலவுகிறது.

இப்போது சத்துணவையும், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட முட்டை போன்ற புரதச்சத்து உணவுகளையும் தவிர்க்கக் கூடிய தனியார் NGO-விடம் கொடுக்க அரசு முயன்று வருகிறது. உலக அளவில் இந்தியாவில்தான் ஊதிய பாகுபாடு பெரும் அளவில் இருப்பதாக International Labour Organization தெரிவித்துள்ளது. 73 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியாவில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஊதியம் பெறவில்லை எனவும் அது 34% ஆண்களை விட பெண்கள் குறைந்த ஊதியத்தை வாங்குகின்றனர் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் பகுதி நேர வேலை செய்யும்  16% பெண்கள், ஆண்களை காட்டிலும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். ஒரு தாயின் வயிற்றிலிருந்து கருவாய் மலர்ந்தவன் என்பதை என்றும் ஒரு ஆண் நினைவில் வைத்துக் கொண்டால் பெண்ணிற்கு எதிரான மனநிலைக்கு செல்லவே மாட்டான். அமெரிக்க துணை ஜனாதிபதி என்ற உயர் பதவி வரை தங்களின் அறிவுத்திறத்தால் உலகையே வென்று வருகிறார்கள்.