Feb 05, 2023
ஸ்பெஷல்

சமணர்களுக்கும் தீபாவளி!

‘பழமையான மதம்’ எனும் கிரீடம் மாட்டிக் கொள்கிற மகத்துவமிக்கது சமணம். தீபாவளித் திருநாள்  கொண்டாட்டத்திற்கென பல்வேறு காரணங்கள் இருந்தும், புலால், கள் உண்ணாமை, கொல்லாமை,  பொய் சொல்லாமை, பிறன்மனை நோக்காமை என அரும்பெரும் அறங்கள் போற்றிய இச்சமணர்கள்  தந்ததே இத்திருநாள் எனும் வரலாற்றுத் தகவல் இருக்கிறது. தென்னகத்திற்கு சமணம் வந்ததே தனிக்கதை. மவுரியப் பேரரசன் சந்திரகுப்தரின்(கிமு322-298) குரு  சமணத் துறவி பத்ரபாகு. இவர், ‘பீகாரில்(பாடலிபுத்திரம்) 12ஆண்டுகள் கடும் பஞ்சம் வரும்’ என்று தன்  ஜோதிட அறிவில் கணித்துச் சொன்னார். இந்த கொடும் பஞ்சத்திலிருந்து தப்பும் நோக்கில்  பத்ரபாகு வழிகாட்டுதலில் பெரும் எண்ணிக்கையில் சமண மக்கள் தென்னகம் இடம்பெயர்ந்து,  கர்நாடகத்தின் சிரவணபெளிகுளிம் பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து சமணத் துறவி விசாகச்சாரியார்  தலைமையில் குழுவினர் கிமு 3ம் நூற்றாண்டில் கொங்கு நாடு வழி தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளுக்கும் வந்து தங்கினர். கிமு 4ம் நூற்றாண்டில் தமிழகம் வழி இலங்கைக்கு இச்சமணர்கள்  சென்றது அறியப்படுகிறது.

ஆதிநாதர் (ரிஷபதேவர்) துவங்கி பார்சுவநாதர் வரை 23 தீர்த்தங்கரர்கள் சமணத்தைப் போதித்தனர்.  இருப்பினும், கடைசியான 24ம் தீர்த்தங்கரராகிய வர்த்தமானர் மகாவீரரே இம்மதத்தைக் கட்டமைத்து  நிறுவனப்படுத்திய பெருமை பெறுகிறார். வடபீகாரின் வைசாலி அருகே பசரா கிராமத்தில் அரச  குலத்தவராக மகாவீரர் பிறந்தார். தந்தை சித்தார்த்தர். தாய் திரிசலை எனும் பிரியகாருணி. கடுந்தவத்தில்  ஞானம் பெற்றார். இவரது பற்றாளர்கள் துறவிகள் பொருளில் வடமொழியில் ‘ஸ்ரமணர்’, தமிழில்  ‘சமணர்’ ஆகினர். இந்த வர்த்தமான மகாவீரர் கொடுத்துச் சென்ற பண்டிகையே தீபத் திருநாள். இதுகுறித்து தமிழக  தொல்லியல்துறை முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கத்திடம் கேட்டபோது,  ‘பீகாரின் பாவாபுரி நகரத்து அரண்மனைப் பகுதியில் நிறைந்திருந்த மக்கள் மத்தியில் மகாவீரர்  அறவுரைகள் வழங்கினார். விடியும் வரை இச்சொற்பொழிவு தொடர்ந்தது. அதிகாலை வரை அவரவர்  இருந்த இடத்திலேயே மக்கள் உறங்கிப் போனார்கள். மகாவீரரும் தாம் அமர்ந்த இடத்தில் அப்படியே  இறந்து போனார்.

பொழுது விடிந்து அவரைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியுடன் இத்தகவலை அரசனிடம்  தெரிவித்தனர். அறிஞர் பெருமக்களுடன் ஆலோசித்த அரசர், ‘உலகின் ஞான ஒளி’யான மகாவீரரை மக்கள்  நினைவுகூர்ந்து வழிபடும் பொருட்டு, அவர் இறைநிலை அடைந்த இந்நாளில் வீடுகள் தோறும்  விளக்கேற்றி வைத்து வணங்கி விழாக் கொண்டாட உத்தரவிட்டார். ‘தீபம்’ என்றால் ‘விளக்கு’. ‘ஆவளி’  எனில் ‘வரிசை’. இதன்படி ‘தீபங்களின் வரிசை’ பொருள்படும் விதம் தீபாவளியை ஆண்டுதோறும்  இந்நாளில் அதிகாலையில் சமணர்கள் அன்று துவங்கி இன்று வரை கொண்டாடி வருகின்றனர். தென்மாவட்டத்தில் 80க்கும் அதிக இடங்களில் மகாவீரரின் பழமைச் சிலைகளிருக்கின்றன’ என்றார். தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழகத்தில் ஓணம் உள்ளிட்ட பண்டிகைகள் வழக்கில் இருந்தும் தீபாவளி  இல்லை. சமணமதத் தாக்கத்தில்தான் தமிழ் மண்ணில் தீபாவளித் திருநாள் வந்தது. சமணப்  பின்னடைவுக்குப் பிறகு இந்து மதம் இப்பண்டிகையை நரகாசுரன் அழிக்கப்பட்ட தினத்துடன் சேர்த்துக்  கொண்டிருக்கிறது.

விளக்கேற்றி வைத்துக் கும்பிட்டு விரதம் மேற்கொண்டு சைவம் உட்கொள்கிற  விழாவாகவே இன்றும் சமணர்களால் இத்திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது’ என்றார்.  தமிழகத்தில் திண்டிவனம், வந்தவாசி, காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, புதுக்கோட்டை என பல்வேறு  பகுதிகளில் தமிழ் சமணர்கள் விரவி வாழ்கின்றனர். நிர்வாண நிலைமிக்க இவர்களை ‘திகம்பர’  சமணர்கள் என்கின்றனர். வடமாநிலங்களில் இருந்தும் ‘ஜைனர்களாக’ சமணர்கள் பலர் தமிழகத்தில்  பரவி இருக்கின்றனர். இங்குள்ள இவர்களை ‘ஸ்வேதாம்பர’ சமணர்கள் என்பர். ‘ஸ்வேதா’ எனில்  ‘வெள்ளை’, ‘ஆம்பரம்’ எனில் ‘ஆடை’ என ‘வெள்ளையாடை’ அணிபவர்களாக இவர்கள் அடையாளம்  கொள்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதி சமணர்கள் கூறும்போது, ‘‘ஒளிப்பிழம்பாக மகாவீரர் ஆன்மா இறையடி சேர்ந்த இந்நாள்தான் எங்களின் தீபத் திருநாள். மறு  பிறவியற்ற மோட்சம் பெறுவதே மனிதருக்கு மகிழ்வானது. எனவே மகாவீரர் மறைந்து மோட்சம்  கொண்டதால் இந்நாள் எங்களுக்கு துக்க தினமல்ல.

அதிகாலையில் தீபமேற்றி வணங்குவோம்.  சிறைச்சாலை உள்ளிட்ட இடங்களுக்குப் போய் அங்கு வாடிக் கிடக்கிற மனிதர்களைச் சந்தித்து  இனிப்புகள் வழங்கி, ஆறுதல் பேசுவோம். தவறுகளில் இருந்து விடுபட்டு வாழ்க்கையை வளப்படுத்தும்  அறிவுரைகள் சொல்வோம். ஏழைகளைச் சந்தித்து அவர்களுக்கென இலவசமாக ஆடைகளுடன்,  உணவுகள் என தான, தர்மங்களிலும் ஈடுபடுவோம். எண்ணெய்க் குளியல் கட்டாயமில்லை.
அகிம்சைக்கு  எதிரானதால் வெடி வெடித்து, பட்டாசு கொளுத்த மாட்டோம்’ என்றனர்.  மதுரை சமணப் பண்பாட்டு மன்ற நிர்வாகிகள் கூறும்போது,  ‘ஜைனர் ஆண்டுக்கணக்குப்படி பொதுவான  தீபாவளிக்கு மறுநாளே வடமாநிலத்தவரின் தீபத்திருநாள். வீடு முழுக்க கழுவிச் சுத்தப்படுத்தி, பூக்கள்  அலங்கரிப்பில், அத்தனை இடங்களிலும் அகல் விளக்குகள் இருக்கும். வீடு, கடையில் தனலட்சுமி பூஜை,  மகாவீர் கோயிலில் சிறப்பு பூஜை நடக்கும்.  இந்நாளில் வெள்ளிப்பொருட்கள் வாங்கினால் செல்வம்  பெருகும் என்ற நம்பிக்கையுண்டு. புத்தாடை அணிந்து, நிறைய இனிப்புகள் செய்து உறவுக்கும்,  நட்புக்கும் தந்து மகிழ்வர். சமணத்துக்கு எதிரானதென்பதால் பலர் வெடி வெடிப்பதில்லை’  என்றனர்.