Apr 11, 2021
விளையாட்டு

இங்கிலாந்துடன் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் ஹாட்ரிக் வெற்றிக்கு இந்தியா முனைப்பு: கோஹ்லி உற்சாகம்

அகமதாபாத்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் அபாரமாக வென்ற இங்கிலாந்து அணி, அதே மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில் 317 ரன் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. அடுத்து அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்டில், இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2வது நாளிலேயே சரணடைந்தது.

அந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெறுகிறது. ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற இந்திய அணி வரிந்துகட்டுகிறது. கடந்த 2 டெஸ்ட் போட்டிகளைப் போலவே இந்த போட்டிக்கான ஆடுகளமும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல அஷ்வின், அக்சர் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிப்பது இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கும். நடப்பு தொடரில் இவர்கள் இருவரும் இணைந்து 42 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

பும்ரா சொந்த காரணங்களுக்காக இந்த போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் இடம் பெற உள்ளார். அவருடன் இணைந்து இஷாந்த அல்லது சிராஜ் வேகக் கூட்டணியை அமைக்கலாம். பேட்டிங்கில் ரோகித், கில், புஜாரா, கோஹ்லி, ரகானே, பன்ட் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளதால் இந்திய அணி உற்சாகமாக உள்ளது. தொடரை கைப்பற்றுவதுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர். அதே சமயம் கடைசி டெஸ்டில் வென்று கவுரவம் காப்பதுடன் 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய இங்கிலாந்து போராடும்.

சுழலை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறுவதும், வீரர்கள் தேர்வில் சொதப்புவதும் அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளன. மோடி ஸ்டேடியத்தில் நடந்த 3வது டெஸ்டில், 2வது ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னரை சேர்க்கத் தவறியது குறிப்பிடத்தக்கது. பகல்/இரவு டெஸ்டில் உபயோகிக்கப்பட்ட இளஞ்சிவப்பு வண்ணப் பந்தை எதிர்கொள்வதை விட, வழக்கமான சிவப்பு நிறப் பந்தில் விளையாடுவது பேட்ஸ்மேன்களுக்கு சற்று எளிதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதனால், 4வது டெஸ்டில் பந்துக்கும் மட்டைக்கும் இடையிலான போட்டி சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா: கோஹ்லி (கேப்டன்), ரோகித், கில், புஜாரா, ரகானே, பன்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், இஷாந்த், உமேஷ், சிராஜ், சாஹா (கீப்பர்), மயாங்க் அகர்வால், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல். இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, டொமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராடு, ரோரி பர்ன்ஸ், ஸாக் கிராவ்லி, பென் ஸ்டோக்ஸ், லாரன்ஸ், ஜாக் லீச், ஓல்லி போப், டொமினிக் சிப்லி, பென் போக்ஸ், ஓல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

* டிரா செய்தாலே போதும்! பைனலில் விளையாடலாம்
இங்கிலாந்து அணியுடன் இன்று தொடங்கும் 4வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டால் கூட பரவாயில்லை... குறைந்தபட்சம் டிரா செய்தாலே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். அதே சமயம், இந்த போட்டியில் இங்கிலாந்து வென்று 2-2 என தொடரை சமன் செய்தால், நியூசிலாந்துடன் பைனலில் மோதும் வாய்ப்பை ஆஸ்திரேலியா தட்டிச் செல்லும். டெஸ்ட் போட்டிகளில் உலக சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனல், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.