Apr 13, 2021
விளையாட்டு

சில்லி பாய்ண்ட்...

* ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆல் ரவுண்டர் டேனியல் சாம்ஸுக்கு (28 வயது, ஆஸி.) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.
* ஐபிஎல் தொடரின் 14வது சீசனில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் பட்டம் வென்று கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும் என்று இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் கூறியுள்ளார்.
* இந்திய அணிக்காக விளையாடும்போது தான் மனநலத்தின் அவசியத்தை உணர்ந்து கொண்டேன் என்று ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
* ‘சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முக்கிய துருப்புச்சீட்டுகளாக கேன் வில்லியம்சன் மற்றும் ரஷித் கான் விளங்குவார்கள். டேவிட் வார்னர் தலைமையில் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வோம்’ என்று அந்த அணியின் இடது கை வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்க நம்பிக்கை நட்சத்திரம் திட்டத்தின் கீழ் உதவி பெறுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
* தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் விளாசி அசத்திய பாகிஸ்தான் தொடக்க வீரர் பகார் ஜமான், ஐசிசி பேட்டிங் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி 12வது இடத்தை பிடித்துள்ளார்.
* 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் இருந்து இந்திய ஜூடோ அணி விலகியுள்ளது.
* போபாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் 24 வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.