Mar 28, 2020
தமிழகம்

ராஜபாளையம் நகர் பகுதியில் குழாய் உடைந்து சாலையில் வீணாக ஓடிய குடிநீர்: தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ராஜபாளையம்: கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் நீர்த்தேக்கங்களில் ஓரளவு குடிநீருக்கு தேவையான நீர் தேக்கி வைக்கப்பட்டு நகர் பகுதியில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டதால் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில் நகரில் ஆங்காங்கே குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஓடுகிறது. சேதமடைந்த குடிநீர் குழாய்களில் குடிநீர் செல்லாதவாறு வால்வுகள் அடைக்கும்போது  வெளியேறுதட குடிநீர் அனைத்தும் சாலைகளிலும்,

கழிவுநீர் ஓடைகளிலும் பலமணிநேரம் ஆறாக ஓடி மீண்டும் சேதமடைந்த குழாய் வழியாக குடியிருப்பு பகுதிகளுக்கு வீட்டு குழாய்களில் போய் சேருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பலமுறை குடிநீரை ஆய்வு செய்து புகார் கூறியும் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவேபொதுமக்களின் நலன் கருதி குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நகரில் ஒரேநேரத்தில் அனைத்து பகுதிகளிலும்  திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் குடிநீர் குழாய்களை சேதம் ஏற்படுத்திவிட்டு பல மணி நேரம் கழித்துதான் தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் அதை சரி செய்வதற்கு இரண்டு, மூன்று தினங்கள் ஆகிவிடுகிறது. இதனால் தான் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றார்.