Mar 28, 2020
தமிழகம்

எப்போதும்வென்றானில் குழாய் உடைப்பு; அருப்புக்கோட்டைக்கு தாமிரபரணி குடிநீர் நிறுத்தம்

* குழாய் மாற்றுவதால் காலதமாதம்
* தண்ணீருக்கு தவிக்கும் பொதுமக்கள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகருக்கு வைகை மற்றும் தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகரில் தினமும் 95 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தாமிரபரணியிலிருந்து 49.50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வருகிறது. வைகை குடிநீர் திட்டத்தின் மூலம் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் வருகிறது. இதை கொண்டு நகர் முழுவதும் குடிநீரை விநியோகம் செய்து வருகின்றனர். 20 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது கடந்த சில மாதங்களாக 3 நாட்களுக்கு ஒருமுறை என சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் மின்தடை குழாய் பழுது லீக்கேஜ் ஆகிவிட்டால் குடிநீர் விநியோகம் செய்யும் நாட்கள் கடந்து விடும்.    

இந்நிலையில் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம் பம்பிங் செய்யப்படும் இடமான வல்லநாடு பகுதியில் இருந்து அருப்புக்கோட்டை வரை உள்ள குழாய்களில் ஆங்காங்கே  உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. கடந்த ஒரு மாதகாலமாக பகிர்மான குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாக செல்வதால் அருப்புக்கோட்டைக்கு கொடுக்கவேண்டிய குடிநீர் முழுமையாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் எப்போதும்வென்றான் பகுதியில் நேற்று முன்தினம் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மேலும் சிமிண்ட் மற்றும் இரும்பு குழாய்கள் திருச்சியிலிருந்து வரவேண்டி உள்ளதால் குழாய் மாற்றும் பணி தாமதமாகிறது. இதனால் வல்லநாட்டில் குடிநீர் பம்பிங் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த குடிநீர் திட்டம் மூலம் வரக்கூடிய தண்ணீரும் நின்றுவிட்டது.

தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் லீக்கேஜ்களை உடனுக்குடன் சரிசெய்வது, தனியாக மின்இணைப்பு பெற்றிருந்தும் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. சரியான திட்டமிடல், மின்தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை போன்றவற்றை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எடுப்பதில் அக்கறை கொள்வதில்லை. சொல்வதை செய்து காட்டக்கூடிய திறனும் அதிகாரிகள் யாருக்கும் இல்லை. இதனால் குடிநீருக்காக குடத்துடன் அலையவேண்டிய நிலையில் தான் அருப்புக்கோட்டை மக்கள் உள்ளனர். தாமிரபரணி குடிநீர் திட்டம்  துவங்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிமிண்ட் குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இதில் ஆங்காங்கு உடைப்பு அடிக்கடி ஏற்படுகிறது.  இதை சரிசெய்யும்போது குடிநீர் பம்பிங் செய்யும் காலம் கூடுகிறது.

மேலும் தாமிரபரணி குடிநீர் திட்டத்திற்கென தனி மின்இணைப்பு பெற்றிருந்தாலும் அடிக்கடி மின்தடை ஏற்படும் போது பம்பிங் செய்யப்படும் இடங்களிலும் மின்தடை ஏற்பட்டு விடுகிறது.  இதனால் குடிநீர் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது எப்போதும்வென்றான் பகுதியில் குழாய் உடைந்துள்ளதால் அதை மாற்றும் வரை அருப்புக்கோட்டைக்கு தாமிரபரணி குடிநீர் வராது. குழாய் மாற்றும் பணி முடிவடைந்ததால் தான் குடிநீர் பம்பிங் செய்யப்பட்டு நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய்கள் மாற்றும் பணியை விரைந்து செய்து நகருக்கு தாமிரபரணி குடிநீர் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே குடிநீர் பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.