May 29, 2020
தமிழகம்

கொடைக்கானலில் கஜாவால் சேதமான சாலைக்கு இதுவரை நிரந்தர சீரமைப்பு இல்லை

* மழை கொட்டினால் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
* சீசனுக்குள் பணிகளை நடத்தி முடிக்க கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானலில் கஜா புயலினால் சேதமடைந்த சாலை இதுவரை நிரந்தரமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பலத்த மழை பெய்தால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே கோடை சீசனுக்குள் பணிகளை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானலில் கஜா புயல் 2018ம் ஆண்டு கோர தாண்டவம் ஆடியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களும், நூற்றுக்கணக்கான மின்கம்பங்களும் சாய்ந்தன. குறிப்பாக கொடைக்கானல்- வத்தலக்குண்டு சாலையில் பெருமாள் மலையை அடுத்த குருசடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் சீரமைப்புக்கு பின் இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து சில நாட்கள் கழித்து தற்காலிகமாக மண் மூடைகள் அடுக்கப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

இப்படி தற்காலிகமாக அமைக்கப்பட்ட இச்சாலையின் வழியேதான் தற்போது வரை போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த பகுதியை கனரக வாகனங்கள் கடக்கும் போதெல்லாம் அதிர்வு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடைக்கானலில் பேய் மழை கொட்டி தீர்த்தது. அப்போது அந்த தற்காலிக சாலையின் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது. அதுவும் தற்போது வரை சீரமைப்பு செய்யப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியை கடக்கும் போதெல்லாம் வாகனஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே கடந்து வருகின்றனர். இதுகுறித்து வாகனஓட்டிகள் கூறுகையில், ‘புயல் ஏற்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் நெடுஞ்சாலைத்துறை இதுவரை இப்பகுதியில் நிரந்தர சீரமைப்பு பணிகளுக்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேநிலை நீடித்தால் பேரிடர் காலங்களில் மீண்டும் இந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மூடைகள் அனைத்தும் சரிந்து விழுவதுடன் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும். மேலும் வாகனங்கள் மீது பாறைகள் விழுந்து பெரும் விபத்து நடக்கும் அபாயமும் உள்ளது. போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டிய இதுபோன்ற பணிகளை நெடுஞ்சாலைத்துறை செய்யாமல் மெத்தனம் காட்டி வருகிறது. எனவே வரும் கோடை சீசனுக்குள் குருசடியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தாங்கு சுவர் அமைத்து நிரந்தர சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டபோது கூறியதாவது, ‘குருசடி பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைப்பதில் நிர்வாக காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. தற்போது ரூ.40 லட்சம் செலவில் தாங்குசுவர் அமைத்து இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்பணிகள் விரைவில் துவங்கப்பட்டு முடிக்கப்பட உள்ளது’ என்றனர்.