Jun 02, 2020
தமிழகம்

உசிலம்பட்டி அருகே மாட்டுப் பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து : 40 மாடுகள் உடல் கருகி பலியான சோகம்

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாட்டுப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 மாடுகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடுபட்டியைச் சேர்ந்த மனோகரன் என்பவருக்கு சொந்தமான பண்ணையில், தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இவர் 40 மாடுகள், 150 ஆடுகள் மற்றும் கோழிகள் வைத்து பண்ணை நடத்தி வந்தார். பண்ணை அருகில் மாட்டுத்தீவனமான வைக்கோல், சோளத்தட்டை, தவிடு போன்றவற்றை வைத்துள்ளார். இந்நிலையில் இன்று காலை மின்கசிவு காரணமாக பண்ணையில் தீப்பிடித்தது. காற்று வீசியதால் தீ மளமளவென பரவி வைக்கோல், சோளத்தட்டைகள் பற்றி எரிந்தன. ஆடு, மாடுகள் கத்தின. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பண்ணையில் இருந்த ஆடு, மாடு, கோழிகளை திறந்து விட்டன.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 40 மாடுகள் கருகி பலியாகின. பண்ணை அருகே நிறுத்தியிருந்த காரும் எரிந்து நாசமானது.இந்த தீ விபத்து குறித்து உசிலம்பட்டி கோட்டாட்சியர் சவுந்தர்யா நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த தீ விபத்தில் 40 மாடுகள் உயிரிழந்தது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மனோகரன் கூறுகையில், ‘ஒவ்வொரு மாடும் ரூ.50 ஆயிரம் வரை விலை போகும். 40 மாடுகள் இறந்துள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.