Jun 02, 2020
தமிழகம்

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அலைக்கழிப்பு: இடைத்தரகர்களுக்கு முன்னுரிமை

உடுமலை:  கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது. இதையொட்டி, மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர் உள்ளிட்ட இடங்களில் அரசு நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.19.15 வழங்கப்படுகிறது. ஆனால் விவசாயிகள் நெல்லை கொண்டு சென்றால் அதிகாரிகள் உடனடியாக வாங்குவதில்லை. ஈரப்பதமாக இருப்பதாக கூறி, உலர வைக்க வேண்டும் என காலதாமதம் செய்கின்றனர். பணமும் உடனடியாக தருவதில்லை.

இதனால் விவசாயிகள் மீண்டும் மீண்டும் செல்ல வேண்டி உள்ளது.தொலைவில் இருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து நெல் கொண்டு வரும் விவசாயிகளுக்கு இதனால் அலைக்கழிப்பும், கூடுதல் செலவும் ஏற்படுகிறது.
 இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ஏதாவது ஒரு காரணம் கூறி நெல்கொள்முதல் செய்வதை அதிகாரிகள் தட்டிக்கழிக்கின்றனர். ஆனால் இடைத்தரகர்கள் கொண்டு வந்தால் உடனடியாக கொள்முதல் செய்து, அப்போதே பணமும் பட்டுவாடா செய்கின்றனர். மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.