May 26, 2020
தமிழகம்

நாகை மாவட்டத்தில் 8வது நாளாக மீனவர்கள் ஓய்வு; ரூ10 கோடி வர்த்தகம் பாதிப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை

நாகை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை என்று கடந்த 19ம் தேதி மாலை முடிவு செய்தனர். மேலும் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை பஞ்சாயத்தார் மூலம் திரும்ப வரும்படி அழைப்பு விடுத்தனர். கடலுக்கு சென்று பிடித்து வந்த மீன்களை விற்பனை செய்த பின்னர் மறுநாள் 20ம்தேதியில் இருந்து மீன் இறங்குதளம், ஏலம் விடும் இடம் எல்லாவற்றையும் மூடினர். தங்களது படகுகளை பாதுகாப்பாக கடற்கரையில் நிறுத்தி வைத்தனர். நாகை மாவட்டத்தில் உள்ள 59 மீனவ கிராமங்களில் 1500 விசைப்படகுகள், 3ஆயிரம் பைபர் படகுகள், 1500 கட்டுமரங்கள் உள்ளன.

இவற்றில் மாவட்டத்தில் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடி தொழில் சார்ந்த மீன் வியாபாரம், ஐஸ் கட்டி தயார் செய்தல், டீசல் ஏற்றுதல், கருவாடு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மீன்பிடி தொழில் சார்ந்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த 2 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி முதல் மீனவர்கள் முழுமையாக கடலுக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர். இன்று 8வது நாளாக ஓய்வில் உள்ளனர். இதனால் விறால், பால் சுறா, கொடுவா, இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட கடல் உணவு வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தினமும் ரூ.1 கோடி முதல் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு மீன்பிடி தொழிலை சார்ந்த மற்ற தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும். அப்பொழுது தான் பொருளாதார இழப்பில் இருந்து மீளமுடியும் என்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.