Jun 05, 2020
தமிழகம்

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க விலை உயராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை: அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் விலைகள் அபரிமிதமாக உயராமல் இருக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர்கள் காய்கறி, பழங்கள், கீரைகள் ஆகியவற்றை சந்தைக்கு அன்றாடம் கொண்டு வந்து தான் தீர வேண்டும். இல்லையென்றால் பெருத்த நட்டத்திற்கு விவசாயிகள் ஆளாவதுடன், வீணாகி யாருக்கும் பயன்படாமல் போய்விடும். மக்களுக்கு மேற்படி பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் அன்றாடம் பொருட்கள் சந்தைக்கு வருவதும் அவசியம்.

இது தொடர்பாக கடந்த 24ம் தேதி தமிழக அரசின் வேளாண்மை துறை வெளியிட்டு வழிகாட்டுதல்கள் அடிப்படையில் அதிகாரிகளும், காவல்துறையினரும் செயல்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். விற்பனை செய்ய வந்த விவசாயிகளை தடுத்ததால் பல இடங்களில் விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.  எனவே, தமிழக அரசு வரும் நபர்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பது, இடைவெளியை கடைபிடிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற வகையில் செயல்படுமாறு காவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.