May 26, 2020
தமிழகம்

தொலைபேசி மூலம் விசாரணை நடத்தி 23 பேருக்கு இடைக்கால ஜாமீன்: ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஸ் சந்திரா புதிய முயற்சி

சென்னை: ஜாமீன் மனுக்களை தொலைபேசி மூலம் விசாரித்து 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையடுத்து, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை உயர் நீதிமன்றம் இழுத்து மூடப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஜாமீன் கேட்டும், ஏற்கனவே பெற்ற ஜாமீனில் விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்த கோரியும் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்குகள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைகு பட்டியலிடப்பட்டிருந்தது.  உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளதால் இந்த வழக்குகளை எல்லாம்  தன் வீட்டில் இருந்தபடியே நீதிபதி விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் குற்றவியல் வக்கீலின் கருத்தை கேட்க வேண்டும். ஆனால், ஊரடங்கு உத்தரவின் காரணமாக அவர் தன் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.

தொலைப்பேசியில் அரசு குற்றவியல் வக்கீல் பிரபாகரனிடம் நீதிபதி வழக்கு நிலவரம் குறித்து கருத்து கேட்டார்.  அதற்கு குற்றவியல் வக்கீல் அளித்த பதிலின் அடிப்படையில் நீதிபதி 58 வழக்குகளை விசாரித்தார். அவற்றில் கொலை, கொலை முயற்சி, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சிக்கிய 23 பேருக்கு இடைக்கால ஜாமீன்வழங்கி நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவிட்டார்.   இந்த 23 பேருக்கும் ஏப்ரல் 27ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்குவதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் இவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் இதற்காக இடைக்கால ஜாமீன் பெற்ற 23 பேரும் தலா ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீன் வழங்கவேண்டும் என்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவில் கூறியுள்ளார்.   மேலும், ஏற்கனவே பெற்ற ஜாமீனில் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று வெவ்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை எல்லாம் விசாரித்த நீதிபதி, 3 பேருக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளையும் தளர்த்தி உத்தரவிட்டார்.