Jun 02, 2020
தமிழகம்

வதந்தியால் நேர்ந்த விபரீதம்: கொரோனா தொற்று உள்ள நபர் என தவறான செய்தி பரவியதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி தற்கொலை

மதுரை: கொரோனா தொற்று உள்ள நபர் என தவறான செய்தி பரவியதால் மனமுடைந்த மதுரையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வசித்து வந்த கூலித்தொழிலாளி சமீபத்தில் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருக்கு காய்ச்சல், சளி இருந்ததால் கொரோனா தொற்றாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சுகாதாரத்துறையினருக்கு தகவல் அளித்தனர். கூலித்தொழிலாளியும், அவரது தாயையும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க சுகாதாரத்துறையினர் முடிவு எடுத்தனர்.

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கிராம மக்களே சரக்கு வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை சிலர் வீடியோவாக பதிவு செய்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சி என் சமூக வலைதளங்களில் பரப்பினர். ஆனால் மருத்துவமனையில் கூலித்தொழிலாளிக்கும், அவரது தாய்க்கும் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீடு திரும்பிய அவர்கள் தங்கள் குறித்து பரப்பப்பட்ட வதந்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக கூறப்படுகிறது. நேற்று காலை மதுரையில் இருந்து நடந்தே வந்த கூலித்தொழிலாளி கப்பலூர் அருகே உள்ள தண்டவாளத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். பரிசோதனைக்காக அழைத்து செல்வது சாதாரண நடைமுறை என கூறிய மாவட்ட ஆட்சியர் வினய், இது போன்றவற்றை வீடியோ எடுத்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.