Jun 02, 2020
தமிழகம்

கொரோனா தந்த ‘கிப்ட்’ சுத்தமான காற்றை சுவாசிக்கும் மக்கள்

திருச்சி: ஊரடங்கு உத்தரவு காரணமாக வாகன போக்குவரத்து இல்லாததால், புகை கலக்காமல் உள்ள சுத்தமான காற்றை மக்கள் சுவாசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி துவங்கிய ஊரடங்கு, வரும் 14ம் தேதி வரை 21 நாட்கள் அமலில் இருக்கும். மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் தவிர மற்றவர்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக வாகனங்கள் வெளியேற்றும் புகை, குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகை கலக்காமல் காற்று சுத்தமாக உள்ளது. இந்த சுத்தமான காற்றை மக்கள் சுவாசித்து வருகின்றனர்.

குறிப்பாக வீடுகளில் முடங்கி உள்ள மக்கள் மாலை நேரங்களில் மொட்டை மாடிகளில் அமர்ந்து சுத்தமான காற்ைற சுவாசித்தும், அனுபவித்தும் வருகின்றனர். இதுபற்றி திருச்சியை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசி ஒருவர் கூறுகையில், நான் வசிக்கும் குடியிருப்பு சாலையின் ஓரமாக உள்ளது. இது பிசியான சாலை என்பதால் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருக்கும். வாகனங்களின் சத்தம், ஏர்ஹாரன்களின் ஒளி, புகை வெளிப்பாடு ஆகியவை எரிச்சலை தரும். இதன்காரணமாக மாசு கலக்காத காற்றை சுவாசிப்பதே அரிதாக இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக புகை கலக்காத காற்றை சுவாசித்து வருகிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சலூன் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் வீடுகளில் முடங்கி உள்ள ஆண்கள் தாடியுடன் காணப்படுகின்றனர். செல்ப் சேவிங் பழக்கம் உள்ளவர்கள், முக சவரம் செய்து கொள்கின்றனர். ஆனால் இந்த பழக்கம் இல்லாதவர்கள், தாடியை தடவிக்கொண்டு, எப்போது சலூன் கடைகள் திறக்குமோ என்ற ஏக்கத்தில் உள்ளனர். ஒரு வாரத்துக்கே இவ்வளவு தாடி வளர்ந்து விட்டது, இன்னும் 2 வாரம் தடை இருப்பதால், நமது பாடு திண்டாட்டம் தான் என்று புலம்பி வருகின்றனர்.