May 27, 2020
தமிழகம்

அணைக்கட்டு அருகே கள்ளச்சாராய விற்பனையால் கொரோனா பரவும் அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள், பொதுமக்கள் அச்சம்

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே தொடரும் சாராய விற்பனையால் கொரோனா பரவும்அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட மலைப்பகுதி நிறைந்த பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. கெங்கநல்லூர் அடுத்த ஆயிரங்குளம் மலைசந்து மலைஅடிவாரத்தில் தம்பதியினர் தொடர்ந்து சாராயம் விற்றுவருவதாக கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
 
இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனையை அறிந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ‘குடி’ மகன்கள், பைக், ஆட்டோ மற்றும் கார்களில் வந்து சாராயம் குடித்துவிட்டு செல்கின்றனர். மேலும் சிலர் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்து தங்கள் பகுதியில் ரகசியமாக விற்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இவர்கள் வந்து செல்வதாகல் தங்கள் பகுதிகளுக்கு கொரோனா பரவிவிடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் திரண்டு சாராய விற்பனையை நிறுத்தும்படி தம்பதி மற்றும் போலீசாரிடம் தெரிவித்தும் பலனில்லையாம். இதனால் ஆத்திமடைந்த இப்பகுதி மக்கள் நேற்று மலைகிராமத்திற்கு செல்லும் வழியில் கல், முரம்பு மண் கொட்டி வழியை அடைத்தனர்.

இதனையும் மீறி குடிமகன்கள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும் டாஸ்மாக் இல்லாததை பயன்படுத்தி பாக்கெட் ஒன்று ₹25 முதல் 75 வரை விற்கப்படுகிறது. எனவே இப்பகுதியில் கொரோனா ைவரஸ் பரவும் அபாயம் உள்ளது என வேதனை தெரிவித்தனர். மேலும் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக உரிய நடவடிக்கையை அதிகாரிகள் மற்றும் போலீசார் எடுக்க வேண்டும் என இப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.