May 27, 2020
தமிழகம்

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஆடுகளுக்கு தீவனமாகும் முருங்கைக்காய்: அரவக்குறிச்சி விவசாயிகள் கவலை

அரவக்குறிச்சி: தமிழகத்திலேயே கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில்தான் முருங்கை சாகுபடி அதிகம். ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம்பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகிறது. இப்பகுதி முருங்கைக்காய் திரட்சியாகவும், சுவையாகவும் இருப்பதால், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யும் காய்கள் மலைக்கோவிலூர், ஈசாத்தம், இந்திரா நகர், பள்ளபட்டி உள்ளிட்ட மொத்த கொள்முதல் மையங்களிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மொத்த வியாபாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை கொள்முதல் சந்தைகள் மூடப்பட்டுள்ளது. முருங்கைக்காய் வாங்க ஆட்கள் இல்லாமல் விவசாயிகள் கால்நடைகளுக்கு தீனியாக போடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முருங்கை விவசாயிகள் நஷ்டமடைந்து கவலையில் உள்ளனர். நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு அரசு உதவவேணடும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.