Jun 02, 2020
தமிழகம்

தமிழகம் முழுவதும் தொடரும் அதிரடி நடவடிக்கை ஒரே நாளில் 5,381 பேர் கைது: ஆயிரக்கணக்கான பைக், ஆட்டோ பறிமுதல்

* வாகன எண்களை பதிவு செய்யும் போலீசார்

சென்னை: தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி தொற்று நோய் பரப்பும் வகையில் சுற்றி திரிந்ததாக நேற்று  ஒரே நாளில் 5,381 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை பல கோடி மதிப்புள்ள ஆயிரக்கணக்கான பைக், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும்,நெற்று முதல் சாலையில் செல்லும் வாகன பதிவு எண்களை போலீசார் தனியாக பதிவு செய்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஆனால் பலர் பைக் மற்றும் ஆட்டோக்களில் ஜாலியாக நகர்வலம், பைக் ரேஸ் போன்றவற்றில் ஈடுபடுவதாகவும், ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கவில்லை என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு, பைக் பறிமுதல் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கினர். அந்த வகையில் மாநிலம் முழுவதும் நேற்று வரை ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றியதாக 5 ஆயிரத்து 281 வழக்குகள் பதிவு செய்து 5 ஆயிரத்து 381 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 349 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர்களிடம் இருந்து 48 ஆயிரத்து 144 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 166 இடங்களில் நடந்த வாகன சோதனையில் தொற்று நோய் பரப்பும் வகையில் சுற்றியதாக 302 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 155 பைக் மற்றும் 3 ஆட்டோக்கள் என மொத்தம் 170 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை முழுவதும் நேற்று முதல் 166 வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் சாலையில் செல்லும் வாகன எண்களை பதிவு செய்து வருகின்றனர். ெதாடர்ச்சியாக வாகனங்களில் சுற்றி வரும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் வகையில் இந்த நடைமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதவிர, போக்குவரத்து விதிகளை மீறி தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டிய நபர்கள் மீது 80 வழக்குகள் உட்பட 173 வழக்குகள் போக்குவரத்து போலீசார் தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.