Dec 03, 2020
தமிழகம்

வேலூர் விஜிலென்ஸ் போலீசில் சிக்கிய மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரியின் 10 வங்கி கணக்குகள் முடக்கம்: 65 அசையா சொத்துக்கள் குவித்தது அம்பலம்

வேலூர்: வேலூரில் விஜிலென்ஸ் போலீசில் சிக்கிய முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம் சம்பந்தப்பட்ட 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. வேலூர் மண்டல மாசு கட்டுப்பாடு வாரிய இணை முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம். இவருக்கு சொந்தமான காட்பாடி, ராணிப்பேட்டை வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.3.25 கோடி பணம், 3.6 கிலோ தங்க நகை, 6.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 90 சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு பாஸ் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்டமாக பன்னீர்செல்வத்தின் மனைவி பத்மாவின் பெயரில் உள்ள வங்கி கணக்கு மற்றும் லாக்கர் முடக்கப்பட்டது. கைப்பற்றிய 90 சொத்து ஆவணங்களில் 65 ஆவணங்கள் அசையா சொத்து என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள 10 வங்கி கணக்குகளை விஜிலென்ஸ் போலீசார் முடக்கி உள்ளனர். இதுகுறித்து விஜிலென்ஸ் போலீசார் நேற்று கூறுகையில், ‘பன்னீர்செல்வம், 65 ஆவணங்கள் அசையா சொத்துக்களாக குவித்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி அந்தந்த சார்பதிவாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சொத்தின் மதிப்பு எவ்வளவு? எப்போது வாங்கப்பட்டது போன்ற விவரங்கள் கோரப்பட்டுள்ளது. மேலும் பன்னீர்செல்வம் சம்பந்தப்பட்ட 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது’ என்றனர்.