Apr 11, 2021
தமிழகம்

மேலூரில் சாலையின் நடுவில் தடுப்புசுவர் அமைக்கும் பணி தீவிரம்: இடைவெளி விட்டு அமைக்க கோரிக்கை

மேலூர்: மேலூர் நகரின் நெரிசலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சாலையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை நெஞ்சாலை துறையினர் மேற்கொண்டுள்ளனர். உரிய இடைவெளி விட்டு அமைக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், மேலூர் நகரில் செக்கடி பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை போக்குவரத்து மிக நெரிசலாக இருக்கும். குறிப்பாக காலை மற்றும் மாலை வேளையில் நெரிசல் மிக மிக அதிகமாக இருக்கும். இதனால் இவ்விடத்தில் புதிதாக போக்குவரத்து போலீசாக பொறுப்பேற்கும் அதிகாரிகள் பேரிகார்ட் வைப்பது வழக்கம். இதனால் சற்று போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும்.

தொடர்ந்து அடுத்து பொறுப்பேற்பவர்கள் அதை அகற்றி விடுவார்கள். இதனால் மீண்டும் நெரிசல் ஏற்பட்டு விடும். தற்போது இவ்விடத்தில் நிரந்தரமாக சிமென்டால் ஆன தடுப்பு சுவர் அமைக்க நெஞ்சாலை துறை முடிவெடுத்து, பணிகளை துவக்கி உள்ளது. இதில் பேங்க் ரோட்டில் திரும்புவதற்கு வசதியாக சாலையில் இடைவெளி விடாமல் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அவர்கள் தரப்பில் இருந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.