Oct 23, 2021
தமிழகம்

வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு அப்ரூவராக மாறதயாராகும் கே.சி.வீரமணி விசுவாசிகள்: வெளிநாட்டு சொத்து விவரங்களை திரட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார்

வேலூர்: வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் மாஜி அமைச்சர் கே.சி.வீரமணியின் ஆதரவாளர்கள் பலரும் அப்ரூவராக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மீது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த 16ம் தேதி ஜோலார்பேட்டை, ஏலகிரி, ஓசூர், பெங்களூரு, சென்னை உட்பட 35 இடங்களில் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்கள், பினாமிகளின் வீடு, நிறுவனங்கள், அலுவலகங்கள், ஓட்டல்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களையும், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகளையும் கைப்பற்றினர். இந்த சொத்து ஆவணங்களுடன், 2011ம் ஆண்டுக்கு முந்தைய அவரது சொத்து மற்றும் வருவாய் இனங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் வீரமணி மற்றும் அவரது உறவினர்களின் பெயரில் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க நாடு ஒன்றில் நிறுவனம் வாங்கியது தொடர்பான விவரங்களையும், ஆஸ்திரேலியாவில் அவரது உறவினரின் மேற்பார்வையில் நடந்து வரும் தொழில் தொடர்பான விவரங்களையும் முழு அளவில் திரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால், பினாமிகள், அதிமுக நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

இதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வீரமணியின் தீவிர விசுவாசிகள் பலர் உள்ளனர். அவர்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வருகின்றனர். இன்னும் சில தினங்களில் விசுவாசிகள் சிலரது வீடுகள் மற்றும் நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்படலாம் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. அதனால், ஆதரவாளர்கள் சிலர் அப்ரூவராக மாற தயாராக உள்ளதாகவும், ஏற்கனவே ரெய்டின்போது போலீசார் நடத்திய விசாரணையின்போது பல்வேறு தகவல்களை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு மேலும் சூடுபிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரமணியுடன் 3 மாஜி அமைச்சர்கள் சந்திப்பு
முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் நேற்று காலை கே.சி.வீரமணியின் ஜோலார்பேட்டை வீட்டிற்கு வந்தனர். வீரமணியுடன் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.