Dec 01, 2021
தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களில் உறுதித்தன்மை ஆய்வு செய்து அறிக்கை-அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

ராணிப்பேட்டை : தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:

கொரோனா தொற்று பரவல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகளில் முதற்கட்டமாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது. தற்போது தமிழக முதல்வர் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிப்பாக தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 493 அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் 126 நடுநிலைப் பள்ளிகள் என நகர் பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் என மொத்தம் 619 பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஏற்கனவே 120 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இணைந்துள்ள  பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதுபோல், 100 அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளும், 65 மெட்ரிக் பள்ளிகளும் 26 பிறமொழி பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 1 முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.ஊரக மற்று நகர்ப்பகுதிகளில் பிடிஓக்கள், நகராட்சி ஆணையாளர்கள் தங்களுக்கான பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு பள்ளிகளில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும். குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். கழிப்பறைகளை தூய்மைபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைக்க வேண்டும். பள்ளிக்கட்டிடங்களில் உறுதி தன்மையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வர உள்ளதால் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பள்ளி கட்டிடங்கள், வகுப்பறைகள், கழிப்பறைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு செய்வதுபோல் மேற்கொள்ள வேண்டும். தூய்மை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நிதி பிரச்னை அல்லது புதிதாக பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றால் அதனை உடனடியாக எனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா, ராணிப்பேட்டை கல்வி மாவட்ட அலுவலர் அங்குலட்சுமி, பிடிஓக்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.