Dec 07, 2021
தமிழகம்

கல்பாக்கம் அருகே முதல்வருக்கு சாக்லெட் கொடுத்த சிறுமி

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே இன்று காலை காரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கைகாட்டி நிறுத்தி, அவருக்கு 6 வயது சிறுமி சாக்லெட் வழங்கினாள். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒன்று முதல் 8-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, தற்போது இல்லம் தேடி கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

 இந்நிலையில், இன்று மாலை மரக்காணம் அருகே முதலியார்குப்பத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். முன்னதாக, இன்று காலை இசிஆர் சாலை வழியே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் மரக்காணத்துக்கு புறப்பட்டு சென்றார்.

மாமல்லபுரம் நுழைவு வாயில் அருகே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் மாவட்ட திமுக துணை செயலாளர் மாமல்லபுரம் வெ.விஸ்வநாதன் தலைமையில் மேளதாளம் முழங்க, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கல்பாக்கம் அருகே இளையனார்குப்பம் பகுதியில் தமிழக முதல்வரின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் சப்ரின் (9) எனும் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, தமிழக முதல்வரின் காரை நோக்கி சாக்லெட்டுடன் கைநீட்டினாள்.

இதை பார்த்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காரை நிறுத்த சொன்னார். பின்னர் அக்குழந்தையின் உறவினர்கள் சப்ரினை தமிழக முதல்வரின் வாகனம் அருகே கொண்டு சென்றனர். முதல்வர் ஸ்டாலினிடம், ‘உங்களுக்கு சாக்லெட் தருகிறேன், வாங்கிக் கொள்ளுங்கள்’ என  சப்ரின் கை நீட்டினாள். அதற்கு முதல்வர் ஸ்டாலின், நான் சாக்லெட் சாப்பிட மாட்டேன். நீயே சாப்பிடுமா. நீ நல்லா படிக்கணும் என சப்ரினை வாழ்த்திவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் கிளம்பி சென்றார்.