Jan 24, 2020
தொழில்நுட்பம்

விற்பனையில் புதிய மைல்கல் எட்டியது மாருதி வேகன் ஆர்

நகர்ப்புறத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற சிறந்த பட்ஜெட் கார் மாடல் என்ற பெருமையை மாருதி வேகன் ஆர் பெற்றுள்ளது. விற்பனையிலும் இந்தியாவின் டாப் -5 கார்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. அடக்கமான வடிவம், போதுமான வசதிகள், அதிக ஹெட்ரூம் இடவசதியுடன் இந்த கார் கைக்கு தோதான விலையில் கிடைக்கிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய மாடலாக வந்தது. அத்துடன் வழக்கமான 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மட்டுமின்றி, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்விலும் வந்தது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைத்தது. இதனால், இந்த காருக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த கார், அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நெருங்கும் நிலையில், ஒரு லட்சத்தை தாண்டி விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் வரை 1,03,325 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இம்மாதம் மேலும் 14,650 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், இது 29.5 சதவீதம் அதிகம் ஆகும். அதாவது, தொடர்ந்து மாருதி வேகன் ஆர் காருக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது.

இந்த கார், பழைய மாடலைவிட அதிக பிரிமீயம் அம்சங்களை பெற்றுள்ளது. அதிக க்ரோம் பாகங்கள், இரட்டை வண்ண இன்டீரியர் தீம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த காரில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல்கள் 4.42 லட்சம் முதல் 5.91 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. சிஎன்ஜி மாடல் 4.99 லட்சம் விலையில் கிடைக்கிறது.