Jul 12, 2020
தொழில்நுட்பம்

உலகை உலுக்கும் ஆப்!

நன்றி குங்குமம் முத்தாரம்

ஐம்பது வருடங்களுக்கு  முன் சீனாவின் சாண்டோங் மாகாணத்தில் பிறந்தான் அந்தச் சிறுவன். பெற்றோர் இருவரும் சுரங்கத்தில் வேலை செய்யும் பொறியாளர்கள். படுசுட்டியான அந்தச் சிறுவன் நன்றாகப் படித்து பல்கலைக்கழகத்தில் நுழைந்தான். பட்டப்படிப்பின் ஆரம்ப நாட்களிலேயே அவனுக்கு காதல் மலர்ந்தது. ஆனால், காதலியோ தொலைவில் இருந்தாள். காதலியைப் பார்க்க வேண்டுமானால் 10 மணி நேரம் ரயிலில் பயணம் செய்ய வேண்டும். கிடைக்கும் விடுமுறை நாட்களில் எல்லாம் 10 மணி நேரம் பயணம் செய்து காதலை வளர்த்தான். காதலியையே தனது 22வது வயதில் திருமணம் செய்து கொண்டான்  என்பது தனிக்கதை. ஆனால், காதலியைச் சந்திக்க 10 மணி நேரப் பயணமா... இவ்வளவு நேரம் வீணாகிறதே... காதலியைப் பார்க்க வேறு ஏதாவது வழிவகை இருக்கிறதா... என்று பகல் கனவில் மூழ்கினான். அவன் கண்ட பகல் கனவுதான் ‘ஜூம்’ செயலிக்கு அடித்தளம்! ஆம்; அந்தக் காதலன்தான் ‘ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிறுவனரான எரிக் யுவான். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் படிப்பை முடித்த எரிக், ஜப்பானில் நான்கு வருடங்கள் வேலை செய்தார். 1994ல் ஜப்பானுக்கு வருகை புரிந்த பில்கேட்ஸ், வருங்காலத் தொழில்நுட்பம் எதைச் சார்ந்து இருக்கும் என்பது குறித்து உரையாற்றினார். இந்த உரையைக் கேட்ட எரிக்கின் மனதில் மீண்டும் அந்த பகல் கனவு விழித்துக்கொண்டது. கனவை நிறைவேற்ற வேண்டுமானால் இணைய வசதி அவசியம். அது  அமெரிக்காவில்தான் அப்போது சிறப்பாக இருந்தது.

உடனே அமெரிக்கா செல்வதற்காக விசா வேண்டி விண்ணத்தார். விசா நிராகரிக்கப்பட்டது. சில நாட்கள் கழித்து மறுபடியும் விசாவிற்கு விண்ணப்பித்தார். அதுவும் நிராகரிக்கப்பட்டது. இப்படி இரண்டு வருடங்களில் எட்டு முறை விசாவுக்காக விண்ணப்பித்தார். எட்டு முறையும் நிராகரிக்கப்பட்டு ஒன்பதாவது முறைதான் அவருக்கு விசா கிடைத்தது. 1997ம் ஆண்டு தனது 27வது வயதில் அமெரிக்காவில் காலடி எடுத்தும் வைத்தார் எரிக்.  வீடியோ மற்றும் வெப் கான்ஃபரன்ஸ் அப்ளிகேஷன்ஸ் நிறுவனமான ‘வெப் எக்ஸி’ல் வேலை. இரவில் தூங்காமல் கூட புரோகிராமிங் கோடுகளை அடித்துக்கொண்டே இருந்தார். 2007ல் ‘சிஸ்கோ சிஸ்டம்ஸ்’ வெப் எக்ஸை கையகப்படுத்தியது. அதன் பொறியியல் துறையில் வைஸ் பிரசிடன்ட்டாக பதவி உயர்வு பெற்றார். 2011ல் ஸ்மார் ட்போ னில் பயன்படுத்தும் வகையில் ஒரு வீடியோ கான்ஃபரன்ஸ் சிஸ்டம் குறித்த ஐடியாவை சிஸ்கோ நிர்வாகத்திடம் சொன்னார் எரிக். அந்த ஐடியாவை பரிசீலனை கூட செய்யாமல் சிஸ்கோ நிராகரித்துவிட்டது. தனது திறமைக்கு மதிப்பில்லாத ஓர் இடத்தில் இனிமேலும் இருக்கக்கூடாது என்று நினைத்த எரிக், சிஸ்கோவில் இருந்து விலகினார். அதே வருடத்தில் தனது ஐடியாவை நம்பி ‘ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்தை ஆரம்பித்தார். நினைத்த சில நொடிகளிலேயே காதலியைக் காண அவர் கண்ட பகல் கனவு நனவானது.

ஆனால், ஆரம்ப காலத்தில் எரிக்கை நம்பி ‘ஜூமி’ல் முதலீடு செய்ய யாரும் முன்வரவில்லை. தவிர, ஜூமில் வீடியோ சாட் செய்தால் தகவல்களைத் திருடி விடுவார்கள் போன்ற புரளிவேறு கிளம்பியது. தினமும் கம்பெனியைக் குறை சொல்லி ஆயிரக்கணக்கான மெயில்கள் எரிக்கின் இன்பாக்ஸை நிறைக்கும். எதற்கும் எரிக் தளர்ந்துபோகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஜூமின் வீடியோ கான்ஃபரன்ஸை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதன் யூசர் ஃப்ரண்ட்லி கோடிக்கணக்கான பயனாளிகளைத் தன்வசமாக்கியது. பிறகு நிறுவனங்களும் ஜுமைப் பயன்படுத்த, இன்று அலுவலக மீட்டிங்குகள் கூட ‘ஜூம் மீட்டிங்’ என்று மாறிவிட்டன. வீடியோ கான்ஃபரன்ஸில் நிறைய பேரை ஒருங்கிணைக்க முடியும் என்பது இதன் சிறப்பு. கான்ஃபரன்ஸ் நடக்கும்போது யாராவது ஒருவருக்கு நெட்வொர்க் பிரச்னை ஏற்பட்டால் கூட கான்ஃபரன்ஸ் சீர்குலையாதது ஜூமின் ஸ்பெஷாலிட்டி. அதனால் நாளுக்கு நாள் ஜூமை பயன்படுத்துபவர்கள் எண்ணிக் கை அதிகரித்தது. கடந்த டிசம்பர் வரை தினசரி ஒரு கோடிப்பேர் ஜூமை பயன்படுத்தி  வந்தார்கள். கொரோனா வைரஸின்லாக் டவுன் காலத்தில் மற்ற நிறுவனங்களின் வளர்ச்சி அதலபாதாளத்தில் விழ, ஜூமின் வளர்ச்சி எவரெஸ்ட் உயரத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஆன்லைன் வகுப்புகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்துடனான உரையாடல்கள், திருமண மற்றும் மரண நிகழ்வுகள், அலுவலக மீட்டிங்குகள், நடிப்புப் பயிற்சிகள் என எல்லாமே இப்போது ஜூமில்தான் அரங்கேறுகின்றன. இன்று தினசரி 20 கோடிப் பேர் ஜூமைப் பயன்படுத்துகின்றனர். இதனால் எரிக்கின் நிகர சொத்து மதிப்பும் 7.8 பில்லியன் டாலராக எகிறிவிட்டது!