Feb 27, 2021
தொழில்நுட்பம்

கடந்த ஆண்டை போலவே பாடத்திட்டம்!: நீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை...தேசிய தேர்வு முகமை..!!

டெல்லி: நீட் தேர்வு மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை என்று தேசிய தேர்வு முகமை ஆணையம் அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் பொறியியல், மருத்துவம் படிப்பதற்கான ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளில் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜே.இ.இ பிரதான தேர்வு பாடத்திட்டங்கள் இருக்கும். எனினும் தேர்வு எழுதும் மாணவர்கள் 90 கேள்விகளில் இருந்து 75 கேள்விகளுக்கு விடை அளித்தால் போதும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இயற்பியல், வேதியியல், கணித பிரிவில் கேட்கப்படும் 90 கேள்விகளில் தலா 25 வீதம் 75 கேள்விக்கு விடை அளிக்கலாம். கடந்த ஆண்டு நடந்த தேர்வில், கேட்கப்பட்ட 75 கேள்விக்கும் விடை அளிக்க வேண்டும் என்று இருந்தது. இந்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சில மாநிலங்களில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் ஜே.இ.இ தேர்வுபோல் கேள்வித்தாள் அமையக்கூடும் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது. ஜே.இ.இ தேர்வானது அடுத்த மாதம் 23 முதல் 26 வரை நடைபெறவிருக்கிறது. 2ம் கட்ட தேர்வானது மார்ச் 15 முதல் 18 வரையிலும்; 3ம் கட்ட தேர்வு ஏப்ரல் 27 முதல் 30 வரையிலும்; இறுதிக்கட்ட தேர்வு மே 24 முதல் 28 வரை நடைபெறவிருக்கிறது. இந்த தேர்வுகளுக்கு பல மாதங்களாகவே மாணவர்கள் தயாராகி வரக்கூடிய சூழலில் தற்போது பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை என்று தேசிய தேர்வு முகமை ஆணையம் அறிவித்துள்ளது.