Sep 23, 2020
விமர்சனம்

ஜுமாஞ்சி : தி நெக்ஸ்ட் லெவல்

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில் ஷேக் ஹஸ்டன் இயக்கத்தில் டுவெனி ஜான்சன், கரன் ஜில்லன், கெவின் ஹார்ட், ஷேக் பிளாக் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஜுமாஞ்சி : தி நெக்ஸ்ட் லெவல். அதே நண்பர்கள் டீம் வளர்ந்து பள்ளிப் படிப்பெல்லாம் முடிந்து ஒரு வருடம் பிரிந்து இருக்கிறார்கள். பிரிந்தாலும் ஏதேனும் ஒரு நாள் சந்திப்பு வேண்டும் என முடிவு செய்ய பிரிட்ஜ், பெதனி, மற்றும் மார்த்தா மூவரும் ஸ்பென்சருக்காக காபி ஷாப் ஒன்றில் காத்திருக்கிறார்கள்.

அம்மா, தாத்தா என செட்டிலாகும் ஸ்பென்சர் இன்னமும் அதே தயக்கம் மேலும் கேர்ள் பிரண்டின் காதலுக்கு தற்காலிக நிறுத்தம் என மேலும் சில தயக்கங்கள் சூழ ஸ்பென்சர் வரவில்லை. மூவரும் ஸ்பென்சர் வீட்டிற்கு வந்தால் அங்கே ஸ்பென்சர் தாத்தா, மற்றும் அவரின் பால்ய நண்பர் மைலோ மட்டுமே சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கீழே அடித்தளத்தில் அதே பழைய 'ஜுமாஞ்சி' வீடியோ கேம். கேமிற்குள் ஸ்பென்சர் சென்று விட்டானோ என அதிந்த நண்பர்கள் குழு  கேமிற்குள் மீண்டும் செல்கிறது.

இம்முறை கேம் கேரக்டர்களின் உடலில் தாத்தா மற்றும் தாத்தாவின் நண்பரும் எதிர்பாரா விதமாக குதிக்கிறார்கள். முந்தைய பாகத்தைக் காட்டிலும் அதீத ஆபத்துகள் ஜுமாஞ்சியைக் காப்பாற்ற ஹார்ட் ஸ்டோன் அதைக் கண்டறிந்து செல்கிறது குழு முடிவு என்ன என்பது மீதிக் கதை. மார்த்தாவைத் தவிர அத்தனைப் பேருக்கும் கேரக்டர்கள் மாற்றம் அதனால் அரங்கேறும் காமெடி, ரெண்டு தாத்தாக்களின் சண்டை, உணர்வுகள், என இம்முறை கதைக்களம் சற்றே மெனெக்கெட்டு வேலை செய்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகளும் கூட கொஞ்சம் அதிகமாக நிச்சயம் 3டியில் கண்களுக்கு விருந்தாக அமையும்.

வழக்கம் போல் டிவைனி  மாஸ் லுக், கம்பீர ஆக்‌ஷன், என பின்னி எடுக்கிறார். தாத்தா எட்டியின் கேரக்டர் உள்ளே இருக்கும் போது அவர் போலவே நடித்திருப்பது அப்ளாஸ் வகை. அதிரடி காட்சிகளுக்கு ஹென்றி ஷாக்மெனின் பின்னணி இசை பிரட்&ஜாம் ஸ்டைல். கியூலா படோஸின் ஒளிப்பதிவு விஷுவல் காட்சிகளுக்கு கை கொடுத்திருக்கிறது. மொத்ததில் ஜுமாஞ்சி பாகங்களுக்கு ரசிகர் எனில் இந்தப் பாகம் இதன் முந்தையப் பாகமான வெல்கம் டு ஜங்கிளை விட பிரமாதம். ஆனால் கிளாஸிக் ராபின் வில்லியம்ஸ் பாகமான ஜுமாஞ்சியை நெருங்கக் கூட இல்லை.