Sep 23, 2020
விமர்சனம்

தம்பி - விமர்சனம்

வியாகம் மற்றும் சுராஜ் சாதனா தயாரிப்பில் ஜீது ஜோஸப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா சத்யராஜ் , சீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'தம்பி' காணாமல் போன தம்பி சரவணன். அவரை நினைத்து வாடும் அக்கா பார்வதி (ஜோதிகா). அப்பாவும் அராசியல் தலைவருமான சத்தியநாதம் (சத்யராஜ்), மற்றும் அம்மா (சீதா). பதினைந்து வருடங்களாக மகனைத் தேடி அலையும் அப்பா, தம்பி வருகைக்காக காத்திருக்கும் அக்கா என்னும் வாழ்க்கையில் திடீரென கோவா போலீசாரிடமிருந்து மகன் கிடைத்துவிட்டதாக தகவல் வரவே சென்றால் அங்கே விக்கி(எ) சரவணன் (கார்த்தி) தலையில் அடிப்பட்டு பழசெல்லாம் ஞாபகம் வர அப்பாவை சந்திக்கிறார். பிக்பாக்கெட், 420, ஏமாற்றி பணம் பறிப்பவர், என முற்றிலுமாக மாறியிருக்கும் மகனை அழைத்துக்கொண்டு ஊர் திரும்புகிறார்.

ஆனால் அதுவும் பிராடு ,உண்மையில்லை என பின்னால் தெரிய வருகிறது. விக்கியின் நோக்கமென்ன, அவர் எண்ணம் ஈடேறியதா குடும்பம் என்ன ஆனது என்பது மீதிக்கதை. திருடன், ஃபிராடு போன்ற கேரக்டர் எனில் கார்த்திக்கு எப்போதும் அல்வாதான். இந்தப் படத்திலும் அந்த கேரக்டர் கை கொடுத்திருக்கிறது. சீரியஸ் தம்பி, பின்னால் சிரித்து பதுங்கும் திருடன் என தன் பாத்திரத்தை சரிவர செய்திருக்கிறார். ஜோதிகா , ஏன் எப்போதுமே ஒருவித கடுகடு முகத்துடனேயே இருக்கிறார். எனத்தெரியவில்லை. கொடுத்த காசுக்கு மேல் நடிக்கும் ஜோதிகா தன் சொந்ததயாரிப்பில் அளவான நடிப்பைக் கொடுத்திருப்பது ஆச்சர்யம்.

சத்யராஜ் நடிப்புதான் படத்திற்கு கூடுதல் பலம், மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு அரசியல்வாதி. இதில் கொஞ்சம் வித்யாசமாக பாந்தமான கௌரமான அரசியல்வாதி. மலையாளம் பாணி மெதுவான கதை சொல்லல்தான் என்றாலும், ஆச்சர்யமான திரில்லர், திருப்பங்கள் என ‘பாபநாசம்’ பாணியிலேயே இந்தப்படமும் சில உணர்வுகளைக் கடத்தத் தவறவில்லை. மெல்நகைப்புக் கொடுக்கும் பாட்டி சௌகார் ஜானகியின் காமெடி, கார்த்தியின் ஆஸ்தான அசால்ட் காமெடிகள் என ஜித்து ஜோசப் சில இடங்களுக்கு அழகும் சேர்த்திருக்கிறார்.

‘மேட்டுக்குடி’, கண்ணன் வருவான், என இன்னும் பலபல படங்களின் தெரிந்த கதைக்களம் என அமர்ந்திருந்தால் அதுதான் இல்லை என இறுதியில் கொடுக்கும் ஷாக்குகள் அருமை. ஊட்டியின் அழகை அப்படியே பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், காட்சிகளுக்கு ஏற்ப மேலும் ரம்மியமான கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை. தாலேலோ பாடல் வருடலாக வந்தாலும் கதையின் ஓட்டத்தில் சின்ன நெருடல். இருப்பினும் தனியாகப் பார்க்க, கேட்க இதமான காதல் பாடல். 'வீட்டுல ஒரு அக்கா இருந்தா ரெண்டு அம்மா இருக்கறதுக்கு சமம்' ஒற்றை வசனம் கதையின் ஆழத்தைச் சொல்லிச் செல்கிறது மொத்தத்தில் த்ரில்லர், திருப்பங்கள் நிறைந்த குடும்பப் படமாக சமீபத்தில் இம்மாதிரியான படங்கள் மிகக்குறைவு என்பதால் நிச்சயம் தவிர்க்க முடியாத படமாக மாறியிருக்கிறது ’தம்பி’.