Mar 28, 2020
விமர்சனம்

சில்லுக் கருப்பட்டி - விமர்சனம்

மிகப் பெரிய குப்பை கிடங்கில் வீசப்பட்ட இரும்பு, பிளாஸ்டிக் போன்ற பழைய பொருட்களை சேகரித்து கொண்டு வந்து காயலான் கடையில் விற்கும் சிறுவன், மாஞ்சா (ராகுல்). அவனுக்கு பிங்க் நிற குப்பை கவர் ஒன்று கிடைக்கிறது. அதில் சிறுமி மிட்டியின் (சாரா அர்ஜுன்) போட்டோ இருக்கிறது. அதனால் ஈர்க்கப்பட்ட மாஞ்சா, தினமும் பிங்க் நிற குப்பை பையை எதிர்பார்க்கிறான். அப்போது விலையுயர்ந்த மோதிரம் கிடைக்கிறது. அதை மாஞ்சா மிட்டியிடம் ஒப்படைத்தானா என்பது, ‘பிங்க் பேக்’ என்ற முதல் பகுதியின் கதை. மீம்ஸ் கிரியேட்டர் முகிலன் (மணிகண்டன்), ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அவருக்கு பயங்கர நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

இதனால் அவரை வெறுக்கும் அந்த பெண், திருமணம் செய்ய மறுக்கிறார். இதை தொடர்ந்து சிகிச்சைக்காக முகிலன் தினந்தோறும் வாடகை காரில் மருத்துவமனை செல்லும்போது, ஷேர் முறையில் கூடவே  பயணிக்கும் பேஷன் டிசைனர் மதுவின்  (நிவேதிதா சதீஷ்) அறிமுகம் கிடைக்கிறது. பிறகு முகிலனின் நோய் பற்றி அறியும் மது, அவருடனான தன் நட்பை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றாரா என்பது, ‘காக்கா கடி’ என்ற 2ம் பகுதியின் கதை. தனது மனைவியை இழந்த நவநீதன் (க்ராவ்மகா ராம்), பிளே கிரவுண்டில் யசோதாவை (லீலா சாம்சன்) பார்த்ததும் ஈர்க்கப்படுகிறார்.

இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு அமைகிறது. யசோதாவுக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிந்துகொண்ட நவநீதன், தனது விருப்பத்தை அவரிடம் தெரிவிக்கிறார். இதை எதிர்க்கும் யசோதா, பிறகு என்ன செய்தார் என்பது, ‘டர்ட்டிள் வாக்’ என்ற 3ம் பகுதியின் கதை.
மூன்று குழந்தைகளுக்கு அம்மாவான அமுதினி (சுனேனா), ஆபீசே கதியென்று கிடக்கும் கணவன் தனபால் (சமுத்திரக்கனி), தன்மீது தனிப்பட்ட அன்பு செலுத்துவது இல்லை என்ற மன உளைச்சலுக்கு ஆளாகி புலம்புகிறார். தாம்பத்ய உறவும் கணவனின் தூக்கத்துக்காக மட்டுமே நடக்கிறது என்று குமுறுகிறார்.

அப்போது தன் மனதிலுள்ள குறைகளை, மனிதர்களிடம் பேசும் அலெக்சா பொம்மையிடம் சொல்கிறார். அது என்ன தீர்வு சொன்னது, மனைவியை கணவன் புரிந்துகொண்டானா என்பது, ‘ஹே அம்மு’ என்ற 4ம் பகுதியின் கதை. நான்கு தனிப்பட்ட கதை களை ஒரே படமாக உருவாக்கி, இயக்கம் மற்றும் திரையில் கதை சொல்லுகின்ற பாணியில் தனி முத்திரை பதித்து இருக்கிறார், இயக்குனர் ஹலிதா ஷமீம். நான்கு அத்தியாயங்களிலும் நடித்த ராகுல்-சாரா அர்ஜுன், மணிகண்டன்-நிவேதிதா சதீஷ், க்ராவ்மகா ஸ்ரீராம்-லீலா சாம்சன், சமுத்திரக்கனி-சுனேனா ஆகிய நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்து இருக்கின்றனர்.

அபிநந்தன்  ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்னமூர்த்தி ஆகியோரின் ஒளிப்பதிவு, படத்தின்  கதையை கெடுக்காமல், காட்சிகளின் வலிமையை உணர்த்த பேருதவி செய்திருக்கிறது. பிரதீப் குமார் பின்னணி  இசை குறிப்பிடத்தக்கது.  2ம் பகுதியில் இடம்பெறும் டபுள் மீனிங் டயலாக்குகளை தவிர்த்து இருக்கலாம். 3ம் பகுதி கதை சற்று நாடகத்தனமாக நகர்வதை கவனித்து இருக்கலாம். எனினும், கதைகளை சொன்னவிதத்தில், முக்கியமான படங்களில் சில்லுக் கருப்பட்டிக்கும் இடம் உண்டு.