Jan 26, 2020
விமர்சனம்

பஞ்சராக்ஷரம் - விமர்சனம்

11ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த முனிவர் ஒருவர் எழுதிய பஞ்சராக்ஷரம் என்ற புத்தகம், கால மாற்றங்களை கடந்து தற்போது கிடைக்கிறது. கடந்த காலத்தைக் கொண்டு எதிர்காலத்தை நிர்மாணிக்கும் அதில் உள்ள வரிகள், படிப்பவர்களின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளது. பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வெவ்வேறு துறையை சேர்ந்த சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோம், மதுஷாலினி, சனா அல்டாஃப் ஆகிய ஐவரும் எதிர்பாராத பயணத்தில் சந்திக்கின்றனர்.

புத்தகத்தில் படித்த வரிகள், அவர்களின் எதிர்காலத்தை எப்படி மாற்றி அமைக் கிறது என்பது கதை. பாலாஜி வைரமுத்து இயக்கியுள்ளார். சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோம், மதுஷாலினி, சனா அல்டாஃப், புது வில்லன் சீமான் போன்றோர், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். பயப்படும் காட்சிகளில் மதுஷாலினியின் நடிப்பு சூப்பர்.

படம் முழுக்கஇதே கூட்டணி தொடர்ந்து வருவதால் சலிப்பு ஏற்படுகிறது. காட்சிகளுக்கு ஏற்ப பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார், கே.எஸ்.சுந்தரமூர்த்தி. அதை கவனத்துடன் படமாக்கி இருக்கிறது, யுவாவின் கேமரா. அடுத்தடுத்த காட்சிகள் சற்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும், வித்தியாசமான திரைக்கதை அதை மறைத்துவிடுகிறது. நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் என்று கருத்து சொல்லியிருக்கிறது படம்.