Mar 29, 2020
விமர்சனம்

தர்பார் - விமர்சனம்

லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன்தாரா , சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்‘. ரவுடிகளை துவம்சம் செய்து என் கவுன்டர் செய்யும் ஆதித்யா அருணாச்சலம்(ரஜினிகாந்த்). அவரை விசாரிக்க வருகிறது மனித உரிமை ஆணையம். அவர்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டி ரிப்போர்ட் எழுதி வாங்குகிறார். ஏன் இத்தனை வன்முறையாட்டம், என்ன காரணம் என்பதற்கு விரிகிறது மும்பைக்கதை. சார்ஜ் எடுத்த இரண்டே நாளில் அங்கே 2000க்கும் மேலான பெண்களைக் காப்பாற்றுவது , போதைத்தடுப்பு என  நகரம் சுத்தம்செய்யப்படுகிறது. இந்த ரெய்டில் பெரும் தொழிலதிபர் மகன் அஜய் மல்ஹோத்ராவும் (பிரதீக் பாபர்) சிக்குகிறார். அவருக்கு தண்டனையும் கிடைத்துவிட இடையில் ஆள்மாறாட்டம் செய்து மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கிறார் அப்பா வினோத் மல்ஹோத்ரா.

வெளிநாட்டில் இருக்கும் மகனை தன் தந்திரத்தால் கொல்கிறார் ஆதித்யா அருணாச்சலம். பிறகு என்ன வில்லன் ஆட்டம் ஆரம்பம்.  போலீஸ் , கிரிமினல் சண்டை சகிதமாக படம் நகர்கிறது. முடிவு என்ன என்பது மீதிக் கதை. ‘நீங்க பையனா‘ என யோகிபாபு சில இடங்களில் கிண்டலடித்தாலும் உண்மையில் நயன்தாரா சொல்வது போல் ஆள் பார்க்க அதே ஸ்டைல், மாஸ் தான். இந்த மாஸ் ஸ்டைல்தான் இன்னமும் அவரை  இந்திய சூப்பர் ஸ்டார்கள் லிஸ்டில் இருந்து இறக்கி வைக்க மறுக்கிறது. நயன்தாராவிடம் காதல் ,டூயட், இந்தப்பக்கம் கர்லாகட்டை,சிக்ஸ்பேக் , இன்னொரு புறம் மகள் பாசம் என அத்தனைக்கும் ஈடு கொடுத்து ஓடுகிறார். எனினும் சில இடங்களில் சற்றே சிரமப்படுவது பளிச் என தெரிகிறது.

நயன்தாரா நாளுக்கு நாள் காட்சி ஒன்றுக்கு இவ்வளவு சம்பளம் என மெனு கொடுத்தாலும் கொடுப்பார் போல மிகச் சிலக் காட்சிகளில் வந்து , நடனம் ஆடி,பளிங்கு முகம், பளிர் சிரிப்பு என போய் விடுகிறார். இந்தப் படத்திலும் விரல் விட்டு எண்ணும் படியான காட்சிகளே. நிவேதா தாமஸ் கமல், ரஜினி என இருவருக்கும் மகளாகிவிட்டார், இந்தப்படத்தில் கியூட், பக்கத்துவீட்டு பைங்கிளியாக வந்து சென்று சென்டிமென்ட் காட்சிகளிலும் கண்கலங்க வைக்கிறார். சுனில் செட்டி பாலிவுட் ஸ்டைல் வில்லன் என சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. அந்த அளவிற்கு படத்திற்கு சற்றும் ஒட்டவில்லை. ஆனால் ஆள் வாட்டசாட்டமாக இந்த வயதிலும் ஸ்டைலாகவே இருக்கிறார்.

‘கெட்ட பய‘, கர்லா கட்டை, பஸ்கி , நயன்தாராவின் மேல் காதல், ரயில்வே ஸ்டேஷன் டான்ஸ் சண்டை என முன் பாதி முழுக்க ரஜினிஸம். படமும் விறுவிறு என ஓடுகிறது. இரண்டாம் பாதி சஸ்பென்ஸ் ரஜினிக்கு மட்டும் தான் நமக்கு இல்லை. கதையும் பாடலுடன் துவங்கி இடையில் தொங்குகிறது. என்னதான் பெரிய போலீஸ் என்றாலும் அதெப்படி ஒவ்வொரு நாட்டின் போலீஸ் துறையுடன் நேரடியாக அதிலும் தலைகளுடன் பேச முடியும். எல்லா சஸ்பென்ஸ்களையும் பார்வையாளனுக்கு சொல்லிவிட்டு ரஜினிக்கு சொல்லாமல் விட்டிருக்கிறார் முருகதாஸ். அதனாலேயே படம் சில இடங்களில் சுவாரஸ்யம் பற்றாக்குறையாகவே இருக்கிறது.

எதற்கெடுத்தாலும் மும்பையா, மிலிட்டரி, தாதா, போலீஸ் அனைத்துமே மும்பை மண்ணில் மட்டுமே நடக்கும் விஷயங்களாகவே சித்தரிக்கப்படும் மாயை என்ன என்பது மட்டும் ‘மும்பை ரகசியம்‘. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது, லைட்டிங் டோன்களும் ரசனைகரம்.  அனிருத் ‘பேட்ட‘ மாஸ் லெவெல் இதில் சற்றே தடுமாற்றம். ஆரம்ப சூப்பர் ஸ்டார் தீம் வைத்தே பல இடங்களை நிரப்பியிருப்பது ஏமாற்றம். சும்ம கிழி, ரொமான்ஸ் பாடல் ரஜினி ஸ்பெஷலாக அடடே. வில்லன் மாஸ் ஆக இல்லாத அல்லது காட்டப்படாத காரணம் கிளைமாக்ஸ் அவ்வளவு அழுத்தமாக இல்லை. மொத்தத்தில் ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து , முருகதாஸ் பொருத்தமட்டில் அவரது முந்தைய படத்தைக் காட்டிலும் இந்தப் படம் பரவாயில்லை.