Jul 07, 2020
விமர்சனம்

பட்டாஸ் - விமர்சனம்

டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில் ஆர் எஸ் துரை செந்தில்குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் தனுஷ், சினேகா, பெஹரின் பிர்சடா, நவீன் சந்திரா முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பட்டாஸ். கிடைக்கும் பொருளை ஆட்டையை போட்டு விட்டு திருடிய இடத்திலேயே அன்பளிப்பும் விட்டுச்செல்லும் ஆடியோ திருடர்களாக பட்டாஸ்(தனுஷ்) மற்றும் அவரது கூட்டாளி பஞ்சர்(சதிஷ்). பாக்ஸிங் சாம்பியன் நிலனின் அகாடமியில் உள்ள அவரது விருதுகள் மற்றும் மெடல்களைத் திருடிச் சென்றுவிட்டு அங்கேயும் அன்பளிப்பு விட்டுச் செல்கிறார்கள். இதன் விளைவாக  நிலன் அடியாட்கள் மற்றும் போலீஸ் பட்டாசை துரத்துகிறார்கள். இதற்கு இடையில் மர்மமாக கன்னியாகுமரி (சினேகா) என்னும் பெண் நிலனை கொலை செய்ய முயற்சிக்கிறார். யார் இந்த கன்னியாகுமரி எதற்காக கொலை செய்யப் பார்க்கிறார். பட்டாசு- கன்னியாகுமரிக்கும் என்ன தொடர்பு என்பதே பட்டாசு சொல்லும் பரபர க்ளைமாக்ஸ்.

கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நான் என் நடிப்பை நியாயமாக கொடுப்பேன், என எப்போதும் தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு மிகவும் உண்மையாக இருக்கிறார் தனுஷ். சினேகாவிற்கு மகன் என்றாலும் சரி ஜோடி என்றாலும் சரி அவ்வளவு பொருத்தம். பட்டாசு பாத்திரத்தில் மீண்டும் 'பொல்லாதவன்' படத்தில் பார்த்த தனுஷ் லுக். அவருடைய மெனக்கெடலுக்கு அப்ளாஸ். சினேகா ஹீரோயினாக நடிக்கும் போதுகூட இப்படியான சிறப்பான பாத்திரங்கள் அவருக்கு அமையவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு இந்த படத்தில் அற்புதமான பாத்திரம். மேலும் அடிமுறை என்னும் சண்டைக்காட்சிகளில் நேர்த்தியாகவே தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சினேகாவின் இடத்தை பூர்த்தி செய்ய இன்னும் ஒரு நடிகை வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

மெஹரின் கதையின் சின்ன புள்ளியாக இருந்துவிட்டு வழக்கமான அடாவடி அழகிய ஹீரோயினாக டூயட் பாடி நடனமாடி சிரிப்புடன் சென்றுவிடுகிறார் பெரிதான வேலை ஏதும் அவருக்கில்லை. வாத்தியார் குரு இப்படி எந்த சீனியர் தலக்கட்டு பாத்திரம் என்றாலும் நாசர் ஒரு கை பார்ப்பார். இந்தப்படத்திலும் அதற்கு விதிவிலக்கல்ல அடிமுறை ஆசான் ஆகவே வாழ்ந்திருக்கிறார். நவீன் சந்திரா பிளாஷ்பேக்கில் வரும் இளம் வயது உதவாக்கரை மற்றும் துரோகி பாத்திரங்களுக்கு நல்ல பொருத்தம் ஆனால் பிற்பாதியில் வரும் பாக்சிங் வில்லன் பாத்திரத்திற்கு சற்றே ஒட்டாமல் நிற்கிறார் சில இடங்களில் அவரை மீறி அவரது இளம்வயது வெளிப்பட்டுவிடுகிறது.

இவர்கள் எல்லாம் மீறி ஆங்காங்கே காமெடி சரவெடிகளால் பளிச்சிடுகிறார் பஞ்சர் ஆக வரும் கேபிஒய் சதீஷ். சரியான படங்களை தேர்வு செய்தால் சூரி, சதீஷ் இடங்களை போல் இவருக்கும் ஹீரோவின் காமெடி நண்பர் அந்தஸ்து சுலபமாகவே கிடைக்கும். அடிமுறை சண்டைக்காட்சிகள் பிளாஷ்பேக்கில் வரும் திரவியம் பெருமாள் காட்சிகள் என ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ். விவேக்-மெர்வின் இசை இக்கால இளசுகளுக்கு துள்ளல் என்றாலும் பின்னணி இசையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். சில் ப்ரோ பாடல் சில காலங்களுக்கு 2கே கிட்ஸ்  விருப்ப லிஸ்டில் இருக்கும்.

புதிய கான்செப்ட் முன் பாதி திரைக்கதையில் இன்னும் சில சுவாரஸ்யமான காட்சிகளையும் வசனங்களையும் சேர்த்திருக்கலாம். முக்கியமாக ஹீரோயின் வரும் காட்சி தேமே என செல்கிறது. எனினும் யாரும் இதுவரை சொல்லாத திரைக்கதை மற்றும் கரு என்பதால் இந்த படத்தை நிச்சயம் தவிர்க்க முடியாது. ஒருவேளை மாரி 2 படத்திற்குப் பின் இப்படம் வெளியாகி இருந்தால் விமர்சன ரீதியாக இன்னும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் அசுரன் படத்திற்கு பிறகு வந்திருப்பதால் சின்ன ஏமாற்றம் ஏற்படுகிறது. மொத்தத்தில் பொங்கல் விடுமுறையை அடிப்படையாகக்கொண்டு குடும்பம், அம்மா அப்பா சென்டிமென்ட் தமிழர்களின் பழங்கால பண்பாட்டுக் கலை என அனைத்தையும் சொல்லிச் செல்வதால் பட்டாஸ் பார்க்கலாம் பாஸ்.