Jun 01, 2020
விமர்சனம்

டகால்டி - விமர்சனம்

மும்பையில் சின்னச்சின்ன டகால்டி (தப்புதண்டா) வேலைகள் செய்து ஜாலியாக இருப்பவர், சந்தானம். அவரது நண்பர் யோகி பாபு, மும்பையில் பிக்பாக்கெட் அடிப்பவர். மும்பை தாதா ராதாரவி கொடுத்த ஒரு அசைன்மென்டில் சின்னதாக சொதப்பல் நடந்துவிட்டதால் அவரிடம் சிக்கிக்கொள்கிறார். மும்பை தொழிலதிபர் தருண் அரோரா, கற்பனையாக ஒரு பெண்ணை வரைவார். பிறகு அந்த சாயலில் இருக்கும் பெண்ணை பல கோடி ரூபாய் செலவு செய்து கண்டுபிடித்து தூக்கிக்கொண்டு வரவழைப்பார். பெண்ணுடன் ஜாலியாக இருந்துவிட்டு, பிறகு கொன்றுவிடுவார்.

இதுபோல் அவர் வரையும் படத்தின் சாயலில் இருப்பவர், ரித்திகாசென். திருச்செந்தூர் பெண். அவரை தூக்கிக்கொண்டு வரும் பெரிய அசைன்மென்ட் ராதாரவிக்கு கிடைக்கிறது. அதை நான் முடித்து தருகிறேன் என்று ராதாரவியிடம் கேட்டு வாங்கி, பிறகு அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகிறார் சந்தானம். கற்பனையில் வரையப்பட்ட ரித்திகாசென்னை சந்தானம் கண்டுபிடித்து வில்லன்களிடம் ஒப்படைத்தாரா என்பது கதை. அக்மார்க் சந்தானம் பிரான்ட் காமெடி கதையை, ஆக்‌ஷன் கலந்து கொடுத்துள்ளார் விஜய் ஆனந்த். எப்படி இருந்தாலும் டைமிங் காமெடியிலும், கவுன்டர் டயலாக்கிலும் சிரிக்க வைத்து விடுவார் சந்தானம். இப்படத்தில் அந்த ஏரியா கொஞ்சம் வீக்காக இருக்கிறது.

அதற்கு பதிலாக ஆக்‌ஷன் ஹீரோவுக்கான ஏரியா அதிகமாக இருக்கிறது. ‘என்னை ஹீரோ மாதிரி பன்ச் டயலாக் பேச வைக்காதே’ என்று அவர் சுயவிமர்சனமும் செய்கிறார். ஹீரோவின் நண்பனாக வந்து, தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. சந்தானமும், யோகி பாபுவும் அடிக்கடி ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்ளும் வசனங்கள், காமெடி சரவெடி. திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற கனவில், முன்பின் தெரியாத நபருடன் மும்பை செல்லும் வெகுளிப் பெண் கேரக்டரில் ரித்திகாசென், நன்றாக நடித்துள்ளார்.

தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, ராதாரவி உள்ளிட்ட வில்லன் வகையறாவை கமெடியிலும் சேர்க்க முடியவில்லை, சீரியசாகவும் பார்க்க முடியவில்லை. சில காட்சிகளே வந்தாலும், பிரம்மானந்தம் காமெடியில் கலக்குகிறார். தீபக்குமார் பாடியின் ஒளிப்பதிவு பளிச்சென்று உள்ளது. விஜய நாராயணன் பின்னணி இசை, படத்துக்கு தேவையானதை கொடுத்து இருக்கிறது. ஆனால், பாடல்கள் மனதில் பதியவில்லை. மும்பை சந்தானம், திருச்செந்தூர் ரித்திகாசென்னை சந்திக்கும் திரைக்கதை பயணம் சுவாரஸ்யம்.

வழக்கமான ஆள்மாறாட்ட கிளைமாக்ஸ் என்றாலும், கடைசி 15 நிமிட காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. ரித்திகாசென்னுக்கு திரைப்பட இயக்குனராகும் ஆசை வந்ததற்கான பின்னணி பலமாக சொல்லப்படவில்லை. பல டகால்டி வேலைகள் செய்து ஹீரோவுக்கான கெத்து காட்டும் சந்தானம், ராதாரவிக்கு பயந்து அசைன்மென்டை அணுகுவதில் லாஜிக் இல்லை. ரித்திகாசென் வீட்டை விட்டு காணாமல் போனதை அவரது குடும்பம் ஏன் சீரியசாக எடுத்துக்கொள்ள வில்லை? கடைசி நிமிடத்தில் ஹீரோ மனம் மாறுவது எல்லாம் பழைய ஐடியா. பல குறைகளை மறந்துவிட்டு பார்த்தால், டகால்டி காமெடியை ரசிக்கலாம்.