Sep 30, 2022
விமர்சனம்

பொன் மாணிக்கவேல்

ஜாபக் மூவீஸ் தயாரிப்பில் ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா, நிவேதா பெதுராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஓடிடியில் வெளியாகியிருக்கும் படம் ‘பொன்மாணிக்கவேல்’. படத்திற்கு இசை டி.இமான், ஒளிப்பதிவு கே.ஜி.வெங்கடேஷ்.

நகரத்தையே புரட்டிப்போடும் அளவிற்கு அதிகாலையில் நடக்கும் கொலை. வீட்டு வாசலில் கொடூரமாகக் கொல்லப்படும் நீதிபதி அதை விசாரிக்க வரும் போலீஸ் தரப்பு விசாரணையில் சற்றே தாமதம் காட்ட நியமிக்கப்படுகிறார் டிசி பொன் மாணிக்கவேல். ஒவ்வொரு கட்டமாக கொலைக்கான காரணம் தேடி பயணிக்கும் கதையில் கொலைகாரன் யார், எப்படி சிக்கினான் என்பது மீதிக் கதை.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்மாணிக்கவேலாக பிரபுதேவா சில இடங்களில் பொருத்தம். பல இடங்களில் பொருந்த மறுக்கிறார். மேலும் காமெடி, டான்ஸ், ஒளரல் என எப்போதும் ஜாலி மோடில் சுற்றிய பிரபு தேவா இந்தப் படத்தில் மிஸ்ஸிங். அதைக் கொஞ்சம் இயக்குநர் சரி செய்திருக்கலாம். சீரியஸ் நமக்கு செட் ஆகாதுப்பா என பல இடங்களில் பிரபு தேவாவே சொல்லியிருக்கிறார்.

நிவேதா போலீஸ் ஹீரோவுக்கு மனைவி . கொடுத்த ஹீரோயின் வேலையை சரியாக செய்திருக்கிறார்.ஆனாலும் காதல் காட்சிகளில் ஃபார்வேர்ட் பட்டன் அழுத்தத்தான் தோன்றுகிறது. திடீர் என்ட்ரீ கொடுக்கும் சுரேஷ் மேனன் படத்தின் வேகத்திற்கு பயன்பட்டிருக்கிறார்.

 ‘போலீஸ் காரன் எங்கே அடிக்கணுமோ, அங்கே அடிக்கணும், எங்கே அமைதியா இருக்கணுமோ இருக்கணும்’ வசனம் சூழலுக்கு ஏற்ற ஒன்று.

இமான் இசையில் ’உதிரா உதிரா’ பாடல் ரம்மியம். பின்னணி இசையும் சில காட்சிகளில் பலமாக அமைய கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவுக்கு வலு சேர்த்திருக்கிறது. ‘உதிரா’ பாடல் மேக்கிங்கிலும் பளிச்.

எனினும் படம் முழுக்க சில லாஜிக் பிரச்னைகள். என்னதான் அசால்ட் போலீஸ் என்றாலும் படம் ஆரம்பித்து 40 நிமிடங்கள் வரை ‘டீ சாப்டு பேசலாமா?!’ எனக் கேட்டுக்கொண்டே ஒன்றும் கண்டுபிடிக்காமல் சுற்றுவது சினிமா கிளிஷேவாக படத்தின் சுவாரஸ்யத்தை சற்றே தட்டிப் பார்க்கிறது. நடந்திருப்பது ஒரு நீதிபதியின் கொலை என்னும் சீரியஸ் படத்தின்  முதல் பாதி முழுக்க முரட்டுப் போலீஸ் பெருவளத்தானிடம் மட்டுமே தெரிகிறது. பிரபு தேவா வருகிறார் நிற்கிறார், டீ சாப்பிடுகிறார் போகிறார் மோடிலேயே இருப்பது கொஞ்சம் மைனஸ்.

மொத்தத்தில் எப்போதுமான இன்வெஸ்டிகேஷன் போலீஸ் படமாக கடந்து செல்கிறது ‘பொன்மாணிக்கவேல்’.