Feb 05, 2023
விமர்சனம்

"பனாரஸ்" விமர்சனம்

எப்போதுமே வாழ்க்கையை மிகப்பெரிய கொண்டாட்டமாக அனுபவிக்கும் கோடீஸ்வரர் தேவராஜின் மகன், ஜையீத் கான். பெற்றோரை இழந்த இளம் பெண் சோனல் மோன்டோரியோ, வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் ரகம். நண்பர்களுடனான சவாலில் ஜெயிப்பதற்காக ஜையீத் கான் செய்யும் ஒரு தவறு, சோனல் மோன்டோரியோவை அந்த ஊரை விட்டே செல்லும் அளவுக்கு கடுமையாகப் பாதிக்கிறது. பிறகு தன் தவறை உணர்ந்து திருந்தும் ஜையீத் கான், காசியில் சித்தப்பா அச்சுத்குமார் வீட்டில் தங்கியிருக்கும் சோனல் மோன்டோரியோவை சந்தித்து மன்னிப்பு கேட்டு பிராயச்சித்தம் தேடுகிறார். அவரை மன்னிக்கும் சோனல் மோன்டோரியோ, பிறகு எடுக்கும் முடிவு என்ன என்பது மீதி கதை.

‘நான் ஒரு டைம் டிராவலர். நீ என் மனைவி. எதிர்காலத்தில் இருந்து இப்போது உன்னை நேரில் சந்திக்க வந்திருக்கிறேன்’ என்று அறிமுகமாகும் ஜையீத் கான், அவரை உடனே நம்பும் சோனல் மோன்டோரியாவின் காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது. காசிக்கு கதை நகர்ந்த பின்பு, அங்கு சுஜய் சாஸ்திரியை ஜையீத் கான் சந்தித்த பிறகு வேறொரு தளத்தில் பயணிக்கும் காட்சிகளும், பனாரஸ் என்கிற புனித நகரின் பின்னணியும், கங்கை நதியின் அமைதியான வேகமும் பிரமிக்க வைக்கிறது. ஆனால், ‘டைம் லூப்’ என்ற கால வளையத்திற்குள் சிக்கும் ஜையீத் கான் மேற்கொள்ளும் பயணம் அதிக சுவாரஸ்யத்தைக் கொடுக்கவில்லை.

முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பில் ஜையீத் கான் பாஸ் மார்க் வாங்குகிறார். காதல், ஆக்‌ஷன், காமெடி என்று அனைத்தும் அவருக்கு அத்துபடி. பாடகியாக வரும் சோனல் மோன்டோரியா, திரையில் சற்று முதிர்ச்சியுடன் தெரிந்தாலும், அதை தனது நடிப்பில் சரிசெய்து விடுகிறார். காசியில் மரணம் அடைந்தவர்களை போட்டோ எடுக்கும் சுஜய் சாஸ்திரி, ஹீரோயினின் சித்தப்பா அச்சுத்குமார், ஹீரோவின் தந்தை தேவராஜ் ஆகியோர், இயக்குனர் ஜெயதீர்த்தா சொன்னதைச் செய்துள்ளனர். காசி நகரையும், கங்கை நதியையும் அத்வைதா குருமூர்த்தியின் கேமரா கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. பி.அஜ்னீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை, காசிக்குச் சென்று வந்த உணர்வை ஏற்படுத்துகிறது. காசியில் மலர்ந்த காதலைப் பற்றி சொல்லி இருக்கிறது, பனாரஸ்.