Sep 27, 2022
உலகம்

7 தைவான் அதிகாரிகளுக்கு சீனா பொருளாதார தடை

பீஜிங்: தைவானை சேர்ந்த 7 உயரதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக  சீனா பொருளாதார தடை விதித்துள்ளது. தைவானுக்கு சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், அதன் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் பயணம் மேற்கொண்டார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பெலோசியின் இந்த செயலால் கோபமடைந்த சீனா, தைவானை சுற்றி போர் பயிற்சிகளை மேற்கொண்டு அச்சுறுத்தியது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் சில தினங்களுக்கு முன் தைவான் சென்றது. சீனாவின் கோபத்தை இது அதிகமாக்கி இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவுக்கான தைவான் பிரதிநிதி உட்பட தைவான் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் 7 பேர் மீது சீனா நேற்று கடுமையான பொருளாதார தடை விதித்தது. ஏற்கனவே, நான்சி பெலோசி, தைவான் சென்ற லிதுவேனியா போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு துணை அமைச்சர் ஆக்னேவுக்கு எதிராக கடந்த வாரம் சீனா பொருளாதார தடைகளை விதித்தது.