Jun 20, 2021
ஆலோசனை

பொலிவான முகத்திற்கு மக்காச்சோளம்

நன்றி குங்குமம் தோழி

உணவே மருந்து

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள், பழங்கள் போன்றவை மற்ற பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அங்கு அவை பூர்வீக பயிர்களை காட்டிலும் மிகுந்த விளைச்சல் கொடுக்கக் கூடிய பயிர்களாக மாறி இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு அற்புத பயிர்தான் மக்காச்சோளம். மக்காச்சோளம் வட அமெரிக்காவில் இருக்கின்ற மெக்சிகோ நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும். அந்த நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர் மக்காச்சோளத்தை உணவிற்கு மட்டுமல்லாமல் பல மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தினர்.  சமீபகாலமாக முக அழகு சாதனப்பொருட்களிலும் இந்த மக்காச்சோளம் அதிகம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய மக்காச்சோளம் கோடைக்காலங்களில்தான் அதிகம் பயிரிடப்படும். ஆனால் தற்போது, மக்காச்சோளம்  எல்லா பருவங்களிலும் பயிரிடப்பட்டு, மஞ்சள் நிறத்தை தவிர, சிவப்பு, இளஞ்சிவப்பு, கருப்பு, ஊதா மற்றும் நீலம் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களிலும் வருகிறது. ஸ்னாக்ஸ் அயிட்டங்கள் பலவற்றிலும் பிரதான மூலப்பொருளாக இது மிகவும் பிரபலமாக இருந்தாலும், சோளம் உலகெங்கிலும் மாவு, பஜ்ஜி, சூப் மற்றும் சாஸ்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

பஸ் ஸ்டாப்புகளிலும், மக்கள்  அதிகம் கூடும் பார்க், பீச் போன்ற இடங்களிலும் வேகவைத்த மக்காச்சோளம் எளிதில் கிடைக்கிறது. விலையுயர்ந்த தின்பண்டமாக பாப்கார்னை தியேட்டர், மால்களிலும் விற்கிறார்கள். இதுதவிர, கார்ன் ஃப்ளேக்ஸை காலைச்சிற்றுண்டியாக சாப்பிடுபவர்களும் உண்டு. எப்படி சாப்பிட்டாலும் இதில் அற்புத நன்மைகள் அடங்கியுள்ளது என்பதே உண்மை.


இவைதவிர, மக்காச்சோளத்தில் இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் மற்ற உணவு வகைகளில் இல்லாத வேதிப் பொருளான செலினியம் தாதுப்பொருளும் மக்காச்சோளத்தில் நிறைந்திருக்கிறது. இதில் உள்ள மக்னீசியம் சத்து இதயத்தின் துடிப்பை உறுதி செய்வதோடு, எலும்புகளின் அடர்த்தி மற்றும் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பாஸ்பரஸ் சத்து சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது மற்றும் உடலின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

கூர்மையான பார்வைக்கு…

மக்காச்சோளத்தில் கரோட்டினாய்டுகள் (Carotenoids) உள்ளன. இதிலிருக்கும் நுண்ணூட்டச்சத்துக்களான லுடீன் (lutein) மற்றும் ஜீயாக்சாண்டின் (zeaxanthin)  போன்றவை நம் கண்களின் ஆரோக்கியத்திற்கு உகந்தவை என்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த நுண்ணூட்டச்சத்துக்கள், விழித்திரையில் உயிரணுக்களால் ஏற்படக்கூடிய எந்தவொரு சேதத்தையும் தடுக்கக்கூடிய ஆற்றல் மிக்கவை.

ரத்தசோகையைத் தடுக்கமுன் எப்போதையும்விட அதிக அளவில் பரவிவரும் நோய்களில் ரத்த சோகை நோயும் இடம் பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்களை குறிவைத்து தாக்கும் நோய்களில் ரத்த சோகை முதலிடத்தில் உள்ளது. இரும்புச்சத்து, இதர ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் குறைபாடு போன்றவை ரத்தசோகை நோயின் அறிகுறிகளாகும். உடலின் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு இரும்பு மற்றும் ஃபோலேட் சத்துக்கள் அவசியம். அந்த வகையில் மக்காச்சோளம் இரும்புச்சத்தின் ஆதாரமாக இருக்கிறது. 100 கிராம் மக்காச்சோளத்தில் 2.7 மிலிகிராம் இரும்புச்சத்து உள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மற்ற ஊட்டச்சத்துக்களைப் போல ஃபோலிக் ஆசிட் எனப்படும் போலிக் அமிலமும் மனிதர்களின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத சத்தாக இருக்கிறது. இந்த போலிக் அமிலம் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் சராசரி எடைக்கும் குறைவாக பிறக்கும் நிலை உண்டாகிறது. கருவுற்ற பெண்கள் மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி மக்காச்சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது.

புற்று நோய்க்கு எதிரானது ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்த உணவுகள் புற்றுநோய்க்கு எதிரானவை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில், ஃப்ரீ ரேடிக்கல்களினால் உடலின் செல்கள் சேதமடைவதை, ஆன்டிஆக்ஸிடென்ட்டுகள் கட்டுப்படுத்துகின்றன என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. குறிப்பாக, சமைக்காததைக்காட்டிலும், சமைத்த இனிப்பு மக்காச்சோளத்தில் (Sweet Corn) ஆன்டிஆக்ஸிடென்டுகள் மிகுந்துள்ளதாக கூறப்படுகிறது.
நார்ச்சத்தின் புதையல்

உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, செரிமான அமைப்பை மிகவும் திறமையாக செயலாற்ற வைப்பதன் மூலம் நார்ச்சத்து உடலுக்கு பல வழிகளில் உதவுகிறது. மக்காச்சோளத்தை பாப்கார்ன் வடிவத்தில் சாப்பிடும்போது ஆரோக்கியமான மற்றும் அதிக அளவு நார்ச்சத்தை பெறமுடிகிறது. 100 கிராம் மக்காச்சோளம் 7 கிராம் நார்ச்சத்தை வழங்குகிறது. நார்ச்சத்தானது மலச்சிக்கலைத் தடுக்கவும் மூலநோய் ஏற்படாமல் செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் சாப்பிடும் உணவுகள் கழிவுகளாக மாறும் போது அவை நீர் வற்றி இறுகிக் கொள்வதைத் தடுத்து அவை சுலபமாக மலம் வெளியேற உதவுகிறது.

தாவர என்சைம்களின் கலவையாக விளங்குகிறதுதற்போது பலரும் தாவர அடிப்படையிலான உணவையே விரும்பி உண்கிறார்கள். எண்ணற்ற நுண்ணூட்டச் சத்துக்களையும், உயிரி சேர்மங்களையும் தாவரங்கள் கொண்டிருப்பதே அதற்கு முக்கிய காரணம். அந்த வகையில் மக்காச்சோளத்தில் பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கக்கூடிய அந்தோசயின்கள் (Anthocyanins), பைடிக் அமிலம் (Phytic Acid), ஃபெருலிக் அமிலம் (Ferulilc Acid), ஜீயாக்சாண்டின் (Zeaxanthin) மற்றும் லுடீன் (Lutein) போன்ற என்சைம்கள் நிறைந்துள்ளன.

குளூட்டன் அற்றது

பெரும்பாலானவர்கள் குளூட்டன் சகிப்புத் தன்மையால் என்சைம்களின் எதிர்விளைவுகளை சந்திக்கிறார்கள். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு பல நோய்களுக்குள்ளாகிறார்கள். மற்ற தானியங்களைவிட, மக்காச்சோளம் மற்றும் மக்காச்சோள மாவு குளூட்டன் இல்லாதது என்பதால், குளூட்டன் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு இது சிறந்த உணவாகும்.

ஆற்றலின் ஆதாரம்

மக்காச்சோளத்தில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. கார்போஹைட்ரேட்டுகள், உடலும் மனமும் சரியாக செயல்பட தேவையான சக்தியை வழங்குகின்றன. இது முழுமையாக  செரிக்க அதிகநேரம் எடுக்கும் என்பதால், நீண்ட நேரம் பசிஉணர்வை ஏற்படுத்தாது. மேலும், இது உடனடி ஆற்றலை தருவதால், உடற்பயிற்சிக்குப் பின்னான  (Post workout) சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். எடை குறைவாக உள்ளவர்கள் மக்காச்சோள உணவை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

நீரிழிவு பிரச்னை நீங்க

கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரைச் சத்து மிகுந்தது என்றாலும், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்திருக்கிறது. பைட்டோ கெமிக்கல்கள் உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை சீராக வைத்து நீரிழிவு நோயாளிகளின் உடலில் ரத்தத்தில் திடீரென சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் ஆபத்தான நிலையை தடுக்கிறது. அமெரிக்கன் டயபடிக் அசோசியேஷன் ஸ்டார்ச் நிறைந்த உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளுக்கு பதிலாக மக்காச்சோளத்தை கட்டுப்பாடான அளவில் உணவில் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் வெங்காயம், எலுமிச்சை, வெள்ளரி, குடைமிளகாய் போன்றவற்றோடு மக்காச்சோளத்தை சேர்த்து சாலட்டாக செய்து சாப்பிடலாம். ஆனால், மக்காச்சோளத்தோடு சீஸ், வெண்ணெய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது. அதேபோல, கார்ன் ஃப்ளேக்ஸ், மக்காச்சோளமாவு சேர்க்கப்பட்ட சூப், சாஸ் வகைகளை சாப்பிடுவதும் நீரிழிவு, உடல்பருமன் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஆரோக்கியமானதல்ல. உப்பு சேர்த்து பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மக்காச்சோளத்தை ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

அல்சைமர் நோய்க்கு எதிரானது

மக்காச்சோளத்தில் வைட்டமின் பி சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் இதில் நிறைந்துள்ள தையாமின் மற்றும் நியாசின்  ஆன்டிஆக்ஸிடன்டுகள்  மூளையின் செயல்பாட்டை கூர்மையாக்குகிறது. மூளையின் மேம்பட்ட நினைவகத்தை தூண்டக்கூடிய அசிடோகோலைனை (Acetycholine) ஒருங்கிணைக்க இந்த ஆன்டிஆக்ஸிடென்டுகள் உதவுகின்றன.

இதய நலம்

மக்காச்சோளத்தை பச்சையாக சாப்பிடுவதாலும், மக்காச்சோளத்திலிருந்து தயாரிக்கப்படும்  எண்ணெயை சமையலில்  உபயோகிப்பதாலும் இதய நலம் காக்கப்படுவதாக பல மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் இதயத்திற்கு செல்லக்கூடிய நரம்புகள் போன்றவற்றில் கொழுப்புகள் படிந்து விடாமல் தடுத்து, சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.

முக அழகு

மக்காச்சோளத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதத் தன்மை காக்கப்படுவதோடு, சுருக்கங்கள் ஏற்படுவதை தாமதிக்கிறது. மக்காச்சோள மாவை தண்ணீர் அல்லது சிறிது பால் கலந்து நன்றாக முகத்தில் பூசி கொண்டு, சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வர முகப்பரு தழும்புகள் எண்ணெய் வழிதல் போன்ற குறைபாடுகள் நீங்கி பளபளப்பான முகத்தோற்றத்தை தருகிறது. இதன் ஈரப்பதம் காக்கும் தன்மையால், தற்போது பெரும்பாலான முக அழகு சாதனப் பொருட்களில் மக்காச்சோளம் சார்ந்த பொருட்கள் அதிக அளவு உபயோகிக்கப்படுகிறது. மக்காச்சோளத்தைவிட, தற்போது அதன் பிஞ்சு வடிவான பேபிகார்னை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்

பேபிகார்ன் ஊட்டச்சத்தின் சுரங்கம்

பேபிகார்ன் மிகவும் ஊட்டச்சத்து அடர்த்தியான காய்கறி வகையாகும். அத்தியாவசிய நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் சத்துக்களோடு கூடுதலாக,  முக்கிய ஆன்டிஆக்ஸிடன்டுகளும் பேபிகார்னில் நிரம்பியுள்ளன.
   
பொட்டாசியம் - 260 மிலிகிராம்

பேபிகார்ன் குறைந்த அளவே கலோரி கொண்டிருப்பதால், ஆரோக்கியமான எடையை குறைக்க அல்லது பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல உணவாக இருக்கும். உங்கள் எடை குறைப்பிற்கான உணவில் பேபிகார்னை சேர்த்துக்கொள்வதன் மூலம் விரைவாகவும், எளிதாகவும் எடையைக் குறைக்க முடியும்.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்

அமெரிக்க வேளாண்மைத் துறையின் கூற்றுப்படி, பேபிகார்னில், நார்ச்சத்து, பொட்டாசியம், கரோட்டினாய்டுகள்  மற்றும் பாலிபினால்கள் உள்ளன.சரியான பருவத்தில் அறுவடை செய்து எடுத்த பேபிகார்னில் நன்மை பயக்கும் நார்கள் நிரம்பியுள்ளன என்று அமெரிக்க டி.கே. பப்ளிஷிங்கால் வெளியிடப்பட்ட  ‘ஹீலிங் ஃபுட்ஸ்’ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரையக்கூடிய நார் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும் இதயத்திற்கும் நல்லது. நார்ச்சத்து மலச்சிக்கலை தடுத்து, குடல் ஒழுங்குமுறைக்கு உதவுகிறது. நார்ச்சத்து மிகுந்த பேபிகார்ன் செரிமானமாக அதிக நேரம் எடுக்கும்.இதன் மூலம் சாப்பிட்ட முழுமையின் உணர்வைத் தூண்டும். இந்த உணர்வு அதிக கொழுப்புள்ள மற்ற உணவுகள் சாப்பிடுவதைத் தடுக்கிறது.

குறைந்த கார்போ ஹைட்ரேட்

குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதைப் போலவே, பேபிகார்ன் பெரிய மக்காச்சோளத்தை விடவும் குறைந்த அளவே கார்போஹைட்ரேட் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஆனால், பெரிய மக்காச்சோளத்தை விடவும் அதிக நார்ச்சத்தினை கொண்டிருப்பது இதன் சிறப்பம்சம்.  நம் உணவில் அதிக நார்ச்சத்து சேர்ப்பதால், பல ஆரோக்கிய நன்மைகளை பெறமுடியும். குறிப்பாக இதய நோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்க்கான அபாயம் குறைவு என்பதை மேரிலேன்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம் தெரிவித்துள்ளது.

அரை கப் பேபிகார்னில் 1 கிராம் புரோட்டீனும், 0 சதவீதம் கொழுப்பும் உள்ளது. நீரிழிவு மற்றும் இதய நோயாளிகள், உடலுக்கான கொழுப்பு மற்றும் புரதத் தேவையை மற்ற உணவின் மூலம் பெறமுடியும் என்பதால், நார்ச்சத்து தேவைக்கு முழுமையாக நம்பி பேபிகார்னை எடுத்துக் கொள்ளலாம். பேபிகார்னை அதிக நேரம் சமைக்காமல், குறைந்த நேரம் சமைப்பதால் அதன் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் இழப்பைத் தவிர்க்கலாம்.

எண்ணெய், வெண்ணெய், உப்பு, காரம் சேர்த்து சாப்பிடாமல் பச்சையாக சாலட்டிலோ, சூப்பிலோ சேர்த்து சாப்பிடுவது ரத்தக்கொதிப்பு நோயாளிகள், இதய நோயளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமானது.சமையல் கலை நிபுணர் நித்யா நடராஜன், பேபிகார்ன் சில்லி செய்யும் முறையை இங்கே விளக்குகிறார்.

க்ரிஸ்பி பேபி கார்ன் சில்லி

தேவையான பொருட்கள்

பேபிகார்ன் - 250 கிராம்
மைதா - ¼ கப்
சோளமாவு - ¼ கப்
உப்பு - தேவைக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எண்ணெய் (அ) நெய் - தேவைக்கேற்ப    
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (க்யூபாக வெட்டி வைக்கவும்)
குடைமிளகாய் - 1 (க்யூபாக வெட்டி வைக்கவும்)
காஷ்மீரி சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
எள் - ½ டீஸ்பூன். மேலே அலங்கரிக்க
வினிகர் - 1 டீஸ்பூன்
தேன் (அ) சர்க்கரை - 2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் (அ) மல்லித்தழை - மேலே அலங்கரிக்க.

செய்முறை

முதலில் பேபிகார்னை நீளவாக்கில் நான்காக வெட்டிக் கொள்ளவும். பின் அதை தண்ணீரில் 2 நிமிடம் வேகவைத்து எடுத்து வடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிது உப்பு, சோளமாவு, மைதாமாவு, சில்லி பவுடர், பெப்பர் பவுடர், இஞ்சி,பூண்டு விழுது ஆகியவற்றை கலந்து, உடனே  பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர், ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு , வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் அதில் சில்லி சாஸ், தக்காளி சாஸ், வினிகர் போட்டு கலக்கவும். பின்  சோளமாவு, தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துள்ள கலவையை அதில் சேர்த்து கலக்கவும். பின்னர் வறுத்து எடுத்துவைத்துள்ள பேபிகார்னையும், சர்க்கரை (அ) தேன் சேர்த்து கிளறி, எள் தூவி, அதன் மேல் வெங்காயத்தாள் (அ) மல்லித்தழை சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

தொகுப்பு: மகாலட்சுமி