Jun 20, 2021
ஆலோசனை

பக்கவாதம் முதல் பாத பாதிப்பு வரை...

நன்றி குங்குமம் தோழி

‘40 வயது கடந்தாலே அடிக்கடி உப்பு நோயும், சர்க்கரை நோயும் இருக்கான்னு செக் பண்ணிக்கணும்’, ‘தினமும் வாக்கிங் போகணும், அதிகமா இனிப்பு சேர்த்துக்கிட்டா சுகர் வந்துடும்’, ‘சுகர் வந்தா கண்ணுக்கூட தெரியாமப் போயிடும்னு சொல்லுவாங்க’ என சர்க்கரை வியாதியை பற்றி பலரும் பலவாறு சொல்லக் கேட்டிருப்போம்...

சிறுக சிறுக உயிரைக் கொல்லும் சர்க்கரை வியாதி ஒருவருக்கு ஏன் வருகிறது, வந்தால் என்னென்ன பாதிப்பு நிகழும், எவ்வகையான மருத்துவ உதவி பெற வேண்டும், இதில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன என்பது பற்றி பலருக்கும் சரிவரத் தெரியாது என்பதே உண்மை. அது குறித்து இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சர்க்கரை நோய் என்றால்...

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறிப்பிட்ட அளவை விட நெடு நாட்களோ, அடிக்கடியோ அதிகமாக இருந்தால் இந்நோய் உள்ளது என்று  உறுதி செய்வர். இயல்பாக சாப்பிடுவதற்கு முன் ரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு 60 முதல் 110 வரை (இது 130க்கு மேல் இருக்கக் கூடாது). சாப்பிட்ட பிறகு (அதாவது, சாப்பிட்டு மூன்று மணி நேரம் கழித்து) இருக்க வேண்டிய அளவு 80 முதல் 140 வரை. (இந்த அளவு 180க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்).

சர்க்கரை சத்து ஏன் அவசியம்..?

நாம் தினமும் இயங்க ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் எனும் சத்து மூலம் கிடைக்கிறது. கார்போஹைட்ரேட்டை சர்க்கரை சத்தாக மாற்றி ஆற்றல் வழங்க வழி செய்வது இன்சுலின் என்னும் ஹார்மோன் தான். இந்த ஹார்மோன் உற்பத்தி ஆவதில் சிக்கல் ஏற்பட்டாலும் சர்க்கரை நோய் வரக்கூடும். ஏனென்றால் இந்த இன்சுலின் ஹார்மோன் தான் ஜீரணமாகி ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை சத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது.

தரவுகள் தரும் தகவல்கள்...

*ரத்த வழி உறவுகளாய் இருந்தால் சர்க்கரை நோய் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அதாவது, மரபு ரீதியாக வரும் சர்க்கரை நோய் ஆராய்ச்சியில், பெற்றோரில் ஒருவருக்கு இந்நோய் இருந்தால், அவர்களது வாரிசுகளுக்கு 25% இந்நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், பெற்றோர் இருவருக்குமே இருந்தால் 50% வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

*உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சர்க்கரை நோயால் அதிகம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்தியாவில் மட்டும் சுமார் மூன்று கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் சொல்கிறது.

*பெண்கள், ஆண்கள் விகிதத்தை ஒப்பிடுகையில் இந்நோய் இருபாலரையும் சமமாய் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

*60 வயதிற்கு மேற்பட்டவரை தான் அதிகம் பாதிக்கும். எனினும், தற்பொழுது 40 வயதை கடந்தவர்களுக்கும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நோயின் வகைகள்...

*டைப் 1 சர்க்கரை நோய்: 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வரலாம். இது வைரஸ் தொற்று அல்லது தன் உடல் தாக்கும் நோயாக நிகழலாம். இவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய நிலை இருக்கும். இந்த வகை சர்க்கரை நோயில் இன்சுலின் உற்பத்தி ஆவதில் சிக்கல் ஏற்படும்.

*டைப் 2 சர்க்கரை நோய்: இதில் இன்சுலின் உற்பத்தி சீராய் இருக்கும். ஆனால், அதனை முழுமையாக உடலினால் கிரகிக்க முடியாமல் போகும்.

*பெண்கள் கருவுற்றிருக்கும் போதும் சர்க்கரை நோய் வரலாம். பின் குழந்தை பிறந்ததும் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்பதால் பயம் கொள்ள வேண்டிய தேவை இல்லை.

*இவ்வாறு குழந்தைகளும், கருவுற்றிருக்கும் தாய்மார்களும் சேர்த்து டைப் 1 சர்க்கரை நோயில் 10 சதவீதம் மட்டுமே இருப்பர். மீதம் உள்ள 90% எண்ணிக்கை டைப் 2 சர்க்கரை நோய் கொண்ட நபர்கள் ஆவர்.

காரணங்கள்...

*கணையம் எனும் உறுப்பில் தான் இன்சுலின் சுரக்கின்றது. எனவே இந்த இன்சுலின் சுரப்பதில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால்,கணையத்தில் புற்றுநோய் அல்லது தொற்று நோய் ஏற்பட்டால்,4பரபரப்பான வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் மாறுபட்ட உணவு முறை வழக்கம்.
அதாவது, அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வது. உதாரணமாக, கிழங்கு வகைகள், பீட்சா, செயற்கைக் குளிர் பானங்கள்.

அறிகுறிகள்...

அறிகுறிகள் எதுவும் தொடக்கத்தில் தெரியாது. ஆனால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தாகம் எடுப்பது, சிறுநீர் செல்லும் இடத்தில் எரிச்சல் உண்டாவது, அதிகமாக பசி எடுப்பது, குறைந்த காலத்தில் உடல் எடை குறைவது, உடல் சோர்வு போன்றவை இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்வது அவசியம்.

பரிசோதனை...

*மேல் சொன்ன அறிகுறிகள் தெரிந்தால் இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை செய்வதே போதுமானது.

*கணையத்தில் சிக்கல் உள்ளவர்களுக்கு மட்டுமே ஸ்கேன் எடுக்க வேண்டிய சூழல் இருக்கும்.

விளைவுகள்...

*மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் ஏற்படும் மாற்றங்களினால் பக்கவாதம் நிகழலாம்.

*கால்களில் உள்ள ரத்த குழாய்களும் பாதிக்கப்படுவதால் காலில் காயம் ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாமல் இருக்கும். மேலும், அதை சரியாய் பராமரிக்காமல் இருந்தால் எந்த இடம் பாதிக்கப்பட்டதோ அந்த இடத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய சூழல் உண்டாகலாம்.

*விழித்திரை பாதிப்பு, கிட்னி பாதிப்பு, இருதய அடைப்பு, ஆண்மைக் குறைவு, பெண்களுக்கு கருச்சிதைவு கூட
ஏற்படலாம்.

*கருவுற்றிருக்கும் பெண்கள் சரியாக மருந்துகளும், உடற்பயிற்சிகளும் செய்து வராமல் இருந்தால் பிறக்கும் பிள்ளையின் உடல் நலனில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

சிகிச்சை முறை...

*உறுதி செய்யப்பட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டுவர மாத்திரைகள் வழங்கப்படும். இது வாழ்நாள் முழுதும் இருக்கக் கூடிய நோய் என்பதால் மருந்துகளை கட்டாயம் தினமும் உட்கொள்ள வேண்டும். மருந்துகளை தினமும் சாப்பிடாமல் இருந்தால் சர்க்கரை அளவு அதிகமாகி திடீரென பக்கவாதம் போன்ற பாதிப்புகளும் ஏற்பட சாத்திய கூறுகள் அதிகம்.

*தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இன்சுலின் அளவு கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
வருமுன் காப்போம்...

*80% சர்க்கரை நோய் வராமல் தடுக்க வழி நம்மிடமே இருக்கிறது. எனவே கீழ் வரும் விஷயங்களை கடைப்பிடிப்பது சிறந்தது.

*உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம். அதிலும், அதிக காய்கள், கனிகள் எடுத்துக் கொள்வது அவசியம்.

*மது பழக்கம், புகை பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

*தூக்கமின்மையும் நம் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களுக்கு காரணம் என்பதால் போதிய தூக்கம் அவசியமாகிறது.

*உயரத்திற்கு  ஏற்ப உடல் எடையை சீராக வைத்திருப்பது அவசியம். அதற்காக தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டியதும், அதனால் உடல் பருமன் வராமல் தடுக்கவேண்டியதும் மிக முக்கியம்.

*நீச்சல் பயிற்சி, நடனப்பயிற்சி போன்ற ஏரோபிக்ஸ் பயிற்சிகளை இயன்முறை மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.  

இப்படி தலை முதல் பாதம் வரை உள்ள எல்லா உறுப்புகளையும் பாதிக்கும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், வந்தால் அது மேலும் மோசமாகாமல் தடுக்கவும் உடற்பயிற்சி அவசியம் என்பதை மனதில் நிறுத்தி அதன் வழி உடற்பயிற்சி செய்து வந்தால் நன்மை நம்மை மட்டும் அல்லாமல் நம் அடுத்த தலைமுறைக்கும் மரபணு வழி பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்