May 09, 2021
ஆலோசனை

வீல் சேர் வாழ்க்கை இனி இல்லை...

நன்றி குங்குமம் தோழி

தமிழில் ‘தோழா’ என்றொரு திரைப்படம் வந்ததை நம்மில் பலர் பார்த்திருப்போம். அதிலும், இரண்டு கை, இரண்டு கால் முற்றிலும் செயலிழந்து சர்க்கர நாற்காலியில் தன் வாழ்க்கையை ஓட்டும் நாகார்ஜுனா கதாப்பாத்திரம் நிச்சயம் நம் நினைவில் நன்கு பதிந்திருக்கும். அதுவும் அவருக்கு ஒரு விபத்தினால் மூளையின் அடிவழியில் வரும் முதுகுத் தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு கழுத்துக்கு கீழ் வரும் நரம்புகள் அனைத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

இவ்வாறான செயலிழப்பு ஒருவருக்கு எதனால் வருகிறது, வந்தால் என்னென்ன பாதிப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படும், அதிலிருந்து மீண்டுவர என்ன வழி, மீள்வதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்.

என்னென்ன காரணங்கள்..?

*சாலை விபத்தினால் முதுகுத் தண்டுவடம் மற்றும் மூளை பகுதிகளில் காயம் ஏற்படுவதால்.

*வேறுவகை விபத்துகளான மாடியிலிருந்து விழுவது, துப்பாக்கி சூடு, சாகச விளையாட்டுக்களில் எதிர்பாராதவிதமாக காயம் ஏற்படுவது.

*முதுகுத் தண்டில் ஏற்படும் புற்றுநோய்.

*முதுகு எலும்பு முறிந்து தண்டுவடத்தையும் அதனைச் சுற்றியுள்ள நரம்புகளையும் அழுத்துவதன் மூலம் ஏற்படலாம்.

*கழுத்துப் பகுதியில் உள்ள தண்டுவட எலும்புகள் சார்ந்த பிரச்னைகள். உதாரணமாக, தண்டுவட எலும்புடன் இணைந்திருக்கும் ஜெல்லி போன்ற தட்டுகள் (disc) பிதுங்கி அருகிலுள்ள தண்டுவடத்தை அழுத்துவதால்.

*மூளை சார்ந்த பிரச்னைகள். உதாரணமாக, மூளை புற்றுநோய் மற்றும் விபத்தில் மூளை சேதம்.

*இது குழந்தைகளுக்கும், கருவிலிருக்கும் சிசுவிற்கும் கூட நிகழலாம் (ஏதேனும் தொற்றுநோய் காரணமாக ஏற்படும்). மேலும், குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும் சிக்கல்கள் அதாவது, போதுமான ரத்த ஓட்டம் குழந்தையின் மூளைக்கு செல்லாமல் இருப்பதால் ஆக்சிஜன் அளவு குறைந்து மூளையின் திசுக்கள் சேதம் அடைவதால் நிகழலாம்.

*போலியோ, தசை சிதைவு நோய் (Muscular Dystrophy) போன்ற இன்னும் சில நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள்.

*தொற்று நோய்கள் நரம்பு திசுக்களை தாக்குவதால், அழற்சி ஏற்பட்டு நரம்புகளை பாதிக்கும்.

*டெங்கு, எச்.ஐ.வி, காச நோய், நீண்ட கால குடிப்பழக்கம், பாம்பு கடிப்பது, குழந்தைகளுக்கு வரும் மூளைவாதம், விளையாட்டு மைதானத்தில் ஏற்படும் காயம் போன்ற மற்ற சில காரணங்களாலும் ஏற்படும்.

பல அறிகுறிகள்...

*ஒவ்வொருவருக்கும் அறிகுறிகளில் மாறுபாடு இருக்கும். நம் தண்டுவடத்திலும், மூளையிலும்  ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி வேலைகள் உண்டு. எனவே எந்தப் பகுதி பாதிப்படைகிறதோ அதற்கேற்ப அறிகுறிகள் மாறும்.

*காயத்தின் தாக்கத்தைப் பொருத்து வாதத்தின் வீரியம் இருக்கும். சிலருக்கு கைகால்களில் தளர்ச்சி குறைவாகவே இருக்கும். அவர்களால் வெறும் முப்பது சதவிகிதம் மற்றவர்களின் உதவியுடன் உட்காரவும், கைகால்களை அசைக்கவும் முடியும்.ஆனால், சேதம் அதிகமாக இருந்தால் தசைகள் முற்றிலும் செயலிழந்து விடும். இதனால் நூறு சதவிகிதம் மற்றவரின் துணை தேவைப்படும்.

*தசைகளை மட்டுமல்லாமல் வாதமானது தொடு உணர்ச்சிகளையும் சேர்த்தே பாதிக்கும். உதாரணமாக, கைகால்கள் மறத்துப் போவது, எரியும் உணர்வு உண்டாவது, எந்தவித தொடு உணர்வும் சிலருக்கு இல்லாமல் இருப்பது போன்ற மாற்றங்கள் இருக்கும்.

*தசைகள் கட்டுப்பாட்டை இழந்திருக்கும். இதனால் தன்னிச்சையாக உட்கார முடியாத, நடக்க முடியாத, கைகளை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகும்.

*இவை தவிர்த்து உள் உறுப்புகளின் தசைகள் செயல் இழப்பதால் சிறுநீர், திடக்கழிவு வெளியேறுவதில் கட்டுப்பாடு இல்லாமல் போகலாம்.

*உணவு செரிப்பதில், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.

*சிலருக்கு செயற்கை வழி உணவு மற்றும் சுவாசம் தேவைப்படலாம்.

*சிலருக்கு தளர்வாக இல்லாமல் தசைகள் மிகவும் இறுக்கமாகவும் இருக்கலாம்.

*சிலருக்கு கோமா, ஞாபக மறதி, கோபம், எரிச்சல் போன்றவை நிகழலாம்.

எப்படி கண்டறிவது..?

*முதல் கட்டமாக விபத்து நடந்தவுடன் எம்.ஆர்.ஐ ஸ்கேன், எக்ஸ்-ரே போன்றவற்றின் மூலம் எந்தப் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவர்கள் கண்டறிவர்.

*இரண்டாம் கட்டமாக தசை திறன் சோதனை, நரம்பு திறன் சோதனை, முதுகு தண்டுவடத்தில் இருந்து எடுக்கப்படும் நீர் பரிசோதனை, ரத்த பரிசோதனை போன்றவை தேவைப்படும்.

வரக்கூடிய விளைவுகள்..?

*சுவாசப் பாதை வழியை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.

இல்லையெனில், நிமோனியா போன்ற தொற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். இதனால் சுவாசப்பாதையில் சளி சேர ஆரம்பித்து, இருமல், காய்ச்சல், சுவாசிப் பதில் சிரமம் என பிரச்னைகள் நீளும் ஆபத்துள்ளது.

*தோல் நோய் வராமல் தடுக்க வேண்டும். அதாவது, நீண்ட நேரம் ஒரே மாதிரியான பொசிஷனில் அமர்ந்திருந்தால், அமர்ந்திருந்த இடத்தில் உள்ள தோலில் சூட்டினாலும், ஈரப்பதத்தினாலும் அழுத்தம் ஏற்பட்டு புண் வரும். இதனால் காயத்தில் ஈ போன்ற பூச்சிகள் மேய்ந்து தொற்று நோயை உருவாக்கும். தோல் மேலும் சேதம் அடைவது மட்டுமின்றி தசைகள் வழியே ஆழமாக ஊடுருவி எலும்புகளையும் பாதிக்கும்.

*எல்லா வேலைகளுக்கும் மற்றவர்களை சார்ந்து இருப்பதால் மனதளவில் பாதிக்கப்படுவர்.

என்னதான் தீர்வு..?

*பிரச்னைக்கு பின் உள்ள காரணங்களை நரம்பியல் மருத்துவர்கள் சரி செய்வர். உதாரணமாக, காச நோய் போன்ற தொற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பது.

*இருப்பினும் மீண்டும் கால், கைகள் முன்பு போல இயங்க இயன்முறை மருத்துவம் அவசியம் தேவை.

இயன்முறை மருத்துவம்...

*சுவாசப்பாதை சரியாக வேலை செய்ய மூச்சுப் பயிற்சி கற்றுக் கொடுப்பர். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டவர்களுக்கு சில நுட்பங்கள் மூலம் சளியை வெளியே அகற்ற வழி செய்வர்.

*தோல் நோய் வராமல் இருக்க, தோலை எப்படி பராமரிப்பது போன்றவற்றை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கற்றுக் கொடுப்பர்.

*தினமும் பயிற்சிகள் கொடுத்து உடல் தசைகளைப் பலப்படுத்துவர். இதனால் பாதிக்கப்பட்ட நபர் விரைவில் எழுந்து நடக்கவும், தன் வேலைகளை தானே செய்யவும் இயலும்.

எவ்வளவு நாள் நீடிக்கும் இந்த போராட்டம்..?

*இதிலிருந்து மீண்டு வர தாமதமாகலாம். அதுவும், ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் சேதத்தின் ஆழம் பொருத்து வேறுபாடுகள் இருக்கும். இருப்பினும் முதல் ஆறுமாதம் வேகமான முன்னேற்றம் இருக்கும்.

*மீண்டும் எழுந்து யார் துணையுமின்றி நடப்பதற்கும், அனைத்து வேலைகளையும் அவர்களே செய்துகொள்வதற்கும் குறைந்தது இரண்டு வருடங்களாவது ஆகும்.

*சிலருக்கு இப்பிரச்னை சரி ஆகாமல் இறுதிவரை சர்க்கர நாற்காலியில் இருக்க வேண்டிய சூழல் உருவாகலாம். எனினும் அவர்கள் தினமும் பயிற்சிகள் மூலம் தசைகள் மேலும் மோசமான நிலையை எட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

*அதேபோல் ஒருவர் கோமாவில் இருப்பவராக இருந்தாலும் பயிற்சிகள் அளித்து தசைகளின் நிலையை பாதுகாக்க வேண்டியது முக்கியம்.

நம்பிக்கை வழி நடப்போம்...

‘இனி வாழ்க்கை முழுவதும் சர்க்கர நாற்காலிதான் உலகம்’ என்று சோர்ந்து போகாமல், வேதனையை சாதனையாய் மாற்றிய Stephen Hawking (புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்), ப்ரித்தி சீனிவாசன் (19 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர்), H. Boniface (வீல் சேர் பிரிவை சேர்ந்த டென்னிஸ் வீரர்) போன்ற பல நம்பிக்கை நபர்கள் உண்டு நம்மிடையே.

எனவே இப்படி ஒரு நிகழ்வு நாளை நமக்கோ, நம் வீட்டில் உள்ளவர்களுக்கோ எதிர்பாராத விதமாய் நிகழ்ந்தால் உடைந்துபோகாமல் நம்பிக்கையுடன் சேர்த்து தேவையான இயன்முறை மருத்துவத்தையும் எடுத்துக்கொண்டால் நிச்சயம் கடந்துவிடலாம்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்