Aug 03, 2021
ஆலோசனை

காக்கைக்கும் வலிப்புக்கும் என்ன சம்பந்தம்?

மூளையைத் தாக்கும் நோய்களில் வலிப்பு ஒரு முக்கியமான பிரச்சனை. கால், கை வலிப்பு என்ற சொல்லே சுருங்கி ‘காக்கா வலிப்பு’ என்பதாக இன்று மக்களிடையே புழக்கத்தில் உள்ளது. ஆனால், இந்த நோயின் பெயரை அறிந்திருக்கும் அளவுக்கு மக்களிடம் இந்த நோயின் தன்மையைப் பற்றி விழிப்புணர்வு இல்லை. இந்தியாவில் நூற்றில் ஒருவருக்கு வலிப்பு நோய் இருக்கிறது. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெறு
கிறார்கள். பிறந்த குழந்தை, இளைய வயதினர், முதியவர் என எல்லா வயதினரையும் இந்த நோய் பாதிக்கிறது.


வலிப்பு வந்தாலே வலிப்பு நோயா?

‘வலிப்பு’ என்பது ஒரு நோய் அல்ல. நோயின் அறிகுறி மட்டுமே. மூளை பாதிக்கப்படாமல் வலிப்பு ஏற்படும். அதிக வெப்பநிலை கொண்ட காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் நமது மூளை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் அறிகுறியாகவே வலிப்பு ஏற்படுகிறது. வலிப்பு வரும்போது பாதிக்கப்பட்டவருக்குக் கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். வாயில் நுரை தள்ளும். கண்கள் மேலே சுழன்று, நாக்கு, பற்களுக்கிடையில் சிக்கி, கடிபட்டு, வாயிலிருந்து ரத்தம் வழியச் சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார். சில நிமிடங்களில் இது சரியாகி, பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். இதையே மருத்துவர்கள் ‘வலிப்பு’ (Fits/Seizures/Convulsions) என்கிறார்கள். ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் வலிப்பு வந்திருக்குமானால், அவருக்கு வலிப்பு நோய் (Epilepsy) இருப்பதாகக்கொள்ளலாம்.

என்னென்ன வகைகள்?

மூளையில் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறதோ, அதற்கேற்ப வலிப்பின் தன்மை வேறுபடும். மூளையின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பால் வருவது ‘பகுதி வலிப்பு’ (Partial seizure). நாம் அவ்வப்போது காண்கிற பொதுவான வலிப்புகள் உடல் முழுவதும் பரவியிருக்கும். இந்த வகைக்கு ‘முழுவீச்சு வலிப்பு’ (Generalised seizure) என்று பெயர். இவை தவிர இன்னும் பல துணை வகைகளும் உள்ளன. வலிப்பின் வகைக்கு ஏற்ப சிகிச்சை முறை மாறுவது மருத்துவ நியதி.

எப்படி ஏற்படுகிறது?

மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்தச் செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின் புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் ‘வலிப்பு’ என்கிறோம்.

என்ன காரணம்?

தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமி தொற்று, புழுத் தொல்லை, மூளை காய்ச்சல், மூளை உறை அழற்சி காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே. வலிப்பு உள்ளவர்களின் உறவினர்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் பரம்பரையாகவும் வலிப்பு வரலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால், பிரசவக் காலத்தில் வலிப்பு வருவதுண்டு. பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்தக்குழாய் மாற்றங்கள், அல்சைமர் நோய், ரத்தத்தில் தட்டணுக்கள், சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களால் வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக ‘பொய் வலிப்பு’ (Pseudo seizure) வருவதும் உண்டு. பல சமயங்களில் எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாத வலிப்புகளே அதிகமாக வருவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

குழந்தைகளுக்கு வலிப்பு ஏன்?

பிறக்கும்போது ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடுகள், குறைப் பிரசவம், பிரசவக் காலத் தொற்றுநோய்கள், பிரசவத்தின்போது தலையில் அடிபடுதல் போன்றவற்றால் குழந்தைகளுக்கு வலிப்பு வருகிறது. இவர்களுடைய ரத்தத்தில் கால்சியம், குளுக்கோஸ், மக்னீசியம் அளவுகுறைந்தாலும் வலிப்பு வரும். குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு வருவதுதான் அதிகம். பெரும்பாலும் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சாதாரணக் காய்ச்சலாக இருந்தால்கூட, உடலின் வெப்பம் திடீரென அதிகரித்தால் வலிப்பு வருவது உறுதி. சூடம் சாப்பிட்ட குழந்தைக்கு வலிப்பு வருவதுண்டு.

குழந்தைகளுக்கு வலிப்பைத் தடுப்பது எப்படி?

கர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் கர்ப்பிணிகளை முறைப்படி பராமரிப்பது, மருத்துவமனையில் தேர்ச்சிபெற்ற மருத்துவரிடம் பிரசவம் மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வலிப்பு உண்டாவதைத் தடுக்கலாம். குழந்தைக்குக் காய்ச்சல் வராமல் பார்த்துக்கொள்வது, காய்ச்சல் வந்தால் உடனடியாகக் காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுப்பது, காய்ச்சல் கண்ட குழந்தையின் உடலில் ஈரத் துணி கொண்டு ஒத்தடம் கொடுப்பது, காய்ச்சல் உள்ள குழந்தையைக் குளிரூட்டப்பட்ட அறையில் படுக்கவைப்பது போன்ற முதலுதவிகளை உடனே செய்வது போன்றவற்றால், காய்ச்சல் வலிப்பைத் தடுத்துவிடலாம். வலிப்பு மருந்துகளைத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு மீண்டும் வலிப்பு வருவதைத் தவிர்த்துவிடலாம்.


முன்னெச்சரிக்கை அறிகுறிகள்!

பொதுவாக வலிப்பு நோய் திடீரென்றுதான் வரும். என்றாலும், அது வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக, ‘ஆரா’ (Aura) என்று அழைக்கப்படுகிற
எச்சரிக்கை மணி அடிப்பது போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

* திடீர் தலைவலி, உடல் சோர்வு.
* குழப்பமான மனநிலை.
* பதற்றம், பயம், வியர்த்தல்.
* காதில் மாயக் குரல் கேட்பது.
* கண்கள் கூசுவது அல்லது மங்கலான பார்வை.
* உடலில் மதமதப்பு.
* நடை தடுமாற்றம்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் வலிப்புப் பிரச்சினை உள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடத்துக்குச் சென்று படுத்துக்கொள்வது நல்லது.

வலிப்பு எச்சரிக்கைகள்!

* வலிப்பு வந்தவர்கள் விபத்துக்கு உள்ளாவதைத் தடுக்க வேண்டியது முக்கியம். இயந்திரங்களில் பணிபுரிவது, உயரமான இடங்களில் வேலை செய்வது, தண்ணீரில் அல்லது தண்ணீருக்கு அடியில் இயங்கும் பணிகளில் ஈடுபடுவது, வாகனம் ஓட்டுவது போன்ற பணிகளைத் தவிர்க்க வேண்டும்.

* வலிப்பு உள்ள குழந்தைகளைக் குளம், குட்டை, ஏரி, கிணறு, அருவி ஆகிய இடங்களில் குளிப்பதற்கும், நீர் நிலைகளின் அருகே விளையாடுவதற்கும் அனுமதிக்கக் கூடாது.

* வலிப்பு வந்தவர்கள் மது அருந்தக்கூடாது. அப்படி அருந்தினால், வலிப்புக்கான மருந்து முழுவதுமாக வேலை செய்யாது.

* வலிப்பு மருந்தை ஒரு வேளைக்குச் சாப்பிட மறந்து விட்டாலும், அது நினைவுக்கு வந்ததும், உடனே விட்டுப்போன மருந்தைச் சாப்பிட்டுவிட வேண்டும்.

* வேறு ஏதேனும் நோய்க்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது வலிப்பு நோய்க்குச் சாப்பிடும் மருந்துகளை மருத்துவரிடம் சொல்லிவிட
வேண்டும்.

* மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிப்பு நோய் மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்தக் கூடாது.

என்ன பரிசோதனை?

சில அடிப்படை ரத்தப் பரிசோதனைகளோடு மூளையின் மின்னோட்டத்தை அளவிடும் ஈ.ஈ.ஜி., ‘வீடியோ ஈ.ஈ.ஜி.’, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பெட் (PET) ஸ்கேன், ஸ்பெக்ட் (SPECT) ஸ்கேன் முதலியவற்றைச் செய்து வலிப்பு நோயைக் கண்டறியலாம்.

சிகிச்சை என்ன?

இன்றைய நவீன மருத்துவத்தில் வலிப்பைக் குறைக்கவும் மீண்டும் வராமல் தடுக்கவும் நிறைய மாத்திரைகள் உள்ளன. வலிப்பின் வகை, பாதிக்கப்பட்டவரின் வயது ஆகியவற்றைப் பொறுத்து மாத்திரை / மருந்து பரிந்துரை செய்யப்படும். வலிப்பை ஆரம்ப நிலையில் கவனித்துவிட்டால் ஒன்று அல்லது இரண்டு வகை மாத்திரைகளே போதும். நல்ல பலன் கிடைத்துவிடும். மாத்திரைகளை ஒருநாள்கூட விடாமல் உட்கொண்டு முறையாகச் சிகிச்சை பெறுகிறவர்களில், 60 முதல் 70 சதவீதம் பேருக்கு வலிப்பு வருவதை முழுவதுமாகத் தடுத்துவிடலாம்.

வலிப்பு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமோ என அச்சப்படத் தேவையில்லை. மருந்து / மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பித்து, 3 ஆண்டுகள்வரை வலிப்பு வரவில்லை என்றால், மாத்திரைகளைச் சிறிது சிறிதாகக் குறைத்து, பின்னர் முழுவதுமாக நிறுத்திவிடலாம். மாத்திரைகளை நேரம் தவறி உட்கொள்வதோ, விட்டுவிட்டுச் சாப்பிடுவதோ, உடனடியாக நிறுத்துவதோ கூடாது. வலிப்புக்கான சிகிச்சையில் இதுதான் முக்கியம்.

வலிப்புக்கான முதலுதவிகள்

* அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்கவையுங்கள்.
* சட்டை பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து ‘டை’ போன்றவற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள்.
* மின்விசிறி/ கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.
* அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.
* மூக்குக் கண்ணாடி, செயற்கை பல் செட்டை அகற்றிவிடுங்கள்.
* உமிழ்நீர் வழிந்தால் துடைத்து விடுங்கள்.
* ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்க வேண்டியது அவசியம். அதன்பின், சிறப்பு மருத்துவரிடமோ அல்லது பாதிக்கப்பட்டவர் ஏற்கெனவே சிகிச்சை பெறும் மருத்துவரிடமோ அழைத்துச் செல்லுங்கள். வலிப்பு வந்தவருக்குச் சிகிச்சை பெறச் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விளைவுகள் உடலில் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

முன்னெச்சரிக்கை அறிகுறிகள்!

பொதுவாக வலிப்பு நோய் திடீரென்றுதான் வரும். என்றாலும், அது வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக, ‘ஆரா’ (Aura) என்று அழைக்கப்படுகிற
எச்சரிக்கை மணி அடிப்பது போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

* திடீர் தலைவலி, உடல் சோர்வு.
* குழப்பமான மனநிலை.
* பதற்றம், பயம், வியர்த்தல்.
* காதில் மாயக் குரல் கேட்பது.
* கண்கள் கூசுவது அல்லது மங்கலான பார்வை.
* உடலில் மதமதப்பு.
* நடை தடுமாற்றம்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் வலிப்புப் பிரச்சினை உள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடத்துக்குச் சென்று படுத்துக்கொள்வது நல்லது.

என்ன செய்யக்கூடாது?

* அவரைச் சுற்றிக் கூட்டம் கூட அனுமதிக்காதீர்கள்.
* வலிப்பு வரும்போது அவருடைய கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பைக் கட்டுப்படுத்தமுயற்சிக்கக் கூடாது.
* வலிப்பு நின்று, நினைவு திரும்பும்வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக்கூடாது.
* முழு நினைவு வந்ததை உறுதி செய்து கொண்டு ( இதற்கு அவர் பெயரைச் சொல்லச் சொல்லலாம்) தண்ணீரைப் பருகச் செய்யலாம்.
* வலிப்பு ஏற்படும்போது, அவர்கள் கையில் இரும்புச் சாவி கொடுப்பதால் எந்தப் பலனும் இல்லை.
* மூக்கில் வெங்காயச் சாற்றை ஊற்றுவதும் கூடாது.