Sep 19, 2021
ஆலோசனை

ஆயுர்வேதம் கூறும் குழந்தையின்மை சிகிச்சைக்கான வாழ்வியல் முறைகள்

நன்றி குங்குமம் தோழி

“முத்தான முத்தல்லவோ
மிதந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ
கடவுள் தந்த பொருளல்லவோ” - என்ற
கவியரசின் பாடல் வரிகள் குழந்தைச்
செல்வம் என்பது கடவுள் தந்த வரம்
என்பதை உணர்த்துபவை.


ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தனை செல்வ வளம் பெற்றிருந்தாலும்,  குழந்தை செல்வம் இருந்தால்தான் அவன் வாழ்க்கையே முழுமையடைகிறது. திருமணமான தம்பதியினர் அடுத்து தங்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்பது தாய்மை அடைதலே ஆகும். ஆனால், இன்றோ பல்வேறு காரணங்களினால் பல முயற்சிகள் செய்தும் பலனில்லாமல், குழந்தைகள் இல்லாமலே பல ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியினர் பலரை நாம் தினம்தோறும் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இக்காலத்தில் திருமணமான தம்பதியரிடையே குழந்தையின்மை என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. திருமணமாகி முறைபட்ட இல்வாழ்க்கையில் இருந்து ஒரு வருடத்திற்கு பின்பும் கருத்தரிப்பு ஏற்படாமல் இருக்கும் நிலையை மகப்பேறின்மை / குழந்தையின்மை என்று சொல்கிறோம். குழந்தையில்லாத தம்பதியர்களின் நிலைய பயன்படுத்திக் கொண்டு தற்போது குழந்தையின்மை சிகிச்சை மையங்களும், செயற்கை கரித்தரிப்பு மையங்களும் பல்கிப் பெருகிவிட்டன. குழந்தையின்மையை இரு நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலை மகப்பேறின்மை - பெண் ஒருமுறை கூட கருத்தரிக்காத நிலையை குறிப்பிடுவது.

இரண்டாம் நிலை மகப்பேறின்மை - பெண் முதல் குழந்தை பெற்ற பிறகு இரண்டாவது முறை கருத்தரிக்காமல் ஏற்படும் உடல் பாதிப்புகளை குறிப்பிடும் நிலை ஆகும். இதில்  குறைபாடு என்பது பெண்ணை  மட்டும் குறிக்காது, ஆண், பெண்  இருவருக்கும் இதில் பங்கு உண்டு. ஆண், பெண் இருவரில் யாரேனும் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ உள்ள குறைபாடுகளினால் கருத்தரிப்பில் தாமதம் உண்டாகும். சில நேரங்களில் இருவருக்கும் எந்த  குறைபாடுகளும் இல்லாமலும் கருத்தரிப்பு ஆகாமல் இருப்பதும் பார்க்கிறோம்.

‘சரகாசாரியர்’ என்னும் ஆயுர்வேத ரிஷி குழந்தை என்பது ஒருவர் வாழ்க்கையில் எந்த அளவுக்கு முக்கியம் என்றும் குழந்தை இல்லாதவர்கள் எவ்வாறு இந்த சமூகத்தில் ஒப்பிடப்படுகிறார்கள் என்றும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் கூறியுள்ளார். குழந்தை இல்லாத ஒரு மனிதன் பழங்கள் மற்றும் நிழல்கள் இல்லாத கிளைகளைக் கொண்ட ஒரு தனி மரத்தைப் போன்றவன் ஆவான் என்றும் புல்லால் செய்யப்பட்ட சிலைக்கு ஒப்பாவான் என்றும் அவன் ஒரு வர்ணம் பூசப்பட்ட எறியா விளக்கு என்றும் காய்ந்த ஏரி என்றும், நோக்கமற்ற வாழ்க்கையை வாழ்ந்தவன் ஆக கருதப்படுவான் என்றும் சரகாசாரியர் ஒப்பிடுகிறார்.

வாழ்க்கை எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதற்குப் பின்னால் உள்ள மிக ஆழமான உயிரியல் கருத்துக்களை ஆயுர்வேதம் மிகவும் எளிமையாக விவரிக்கின்றது. அதில் இயற்கை கருவுறுதல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு நான்கு கருவுறுதல் காரணிகள் அடிப்படையாக உள்ளன என்றும். அவை...

ரிது - பருவம், (பெண்ணின் மாதவிடாய் சுழற்சி)
க்ஷெத்ரம் - வயல் (கர்ப்பப்பை)
அம்பு - நீர் (சத்து மற்றும் உயிரோட்டம்)  
பீஜம் - விதை (சினைமுட்டை மற்றும் ஆண் விந்து) என்றும் ஆயுர்வேதம் விளக்குகிறது.

இன்று ஆங்கில மருத்துவம் கூறும் பல்வேறு மகப்பேறின்மைக்கான காரணங்களும் இந்த நான்கு காரணிகளிலேயே நாம் உள்ளடக்கி விடலாம். இன்று உலக சுகாதார மையம் மேற்கொண்ட ஆய்வில் மலட்டுத்தன்மையுள்ள தம்பதிகளில், கருவுறாமைக்கு 37 சதவீதம் பெண்தான் காரணம் என்றும், 35 சதவீதம் ஆண் மற்றும் பெண் இருபாலரும் காரணம் என்றும்; 8 சதவீதம் ஆண் மட்டுமே காரணம் என்றும் கூறுகிறது. இந்த நவீன மருத்துவத்தில், ஹார்மோன் மருத்துவம்,  IUI, IVF, GIFT மற்றும் ZIFT போன்ற செயற்கை கருத்தரிப்பு மருத்துவ முறைகள் இருந்தாலும் இச்சிகிச்சையினால் இரட்டை மற்றும் 3 குழந்தைகள் கருத்தரிப்பது (Multiple Gestation), உடல்பருமன்  (Obesity), அதிகப்படியான ஹார்மோன் சுரப்பு (Ovarian Hyper Stimulation Syndrome), கருப்பைக்கு வெளியே கரு உருவாதல் (Ectopic Pregnancy) போன்ற பக்கவிளைவுகள் வருகின்றன.

அதே சமயம் குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆயுர்வேதத்தில் இயற்கையோடு ஒன்றிய உணவு முறைகள், வாழ்வியல் முறைகள் மற்றும் உடலிலுள்ள நோய்களுக்கு தகுந்தார் போல் நச்சு நீக்கி சிகிச்சைகள் (Anti Toxic Therapy) மற்றும் மருந்துகள் சிறந்த முறையில் வழங்கப்படுகின்றன. ‘‘உணவே மருந்து மருந்தே உணவு” என்ற நிலை மாறி இன்று மக்களிடையே மருந்து மட்டுமே உணவாக உட்கொள்ளும் நிலை இருக்கிறது. கருத்தரிப்பு நிகழாமைக்கு இக்கால தம்பதியினருக்கு பல காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அவை, ஆண், பெண் இருபாலருக்கும் உள்ள பொதுவான காரணங்கள்

* வயது

* உடல் பருமன்

* மன அழுத்தம்

* உடல் உழைப்பின்மை

* உணவு மற்றும் வாழ்க்கை முறை மாறுபாடு

* ஹார்மோன் சமச்சீரின்மை மற்றும் தைராய்டு குறைபாடுகள்

* சர்க்கரை நோய்

* புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்

* சுற்றுச்சூழலில் வரும் நச்சுகள் (பூச்சிக்கொல்லி, Preservatives, herbicide etc )

* கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி

* பால்வினை நோய்கள் (sexually transmitted disease)

* சிலவகை மருந்துகள் பெண்களுக்கு வரும் முக்கியமான காரணங்கள்

* மாதவிடாய் கோளாறுகள்

* நீர்க்கட்டி (Pcod)

* கருப்பை கோளாறுகள் மற்றும் தாபிதம் (Pelvic inflammatory disease)

* கருப்பைக்குழல் தாபிதம்/ அடைப்பு (Blocked fallopian tubes)

இதில் அடிப்படையில் உடலில் உள்ள உஷ்ணத்தை சீர்படுத்தி நீர் கட்டிகளை அகற்றி சினைமுட்டையை வெளியேற்றி அதை ஆண் விந்துடன் சேர தக்க சூழ்நிலை ஏற்படுத்தி, பின்னர் அதை கர்ப்பப்பையில் சீராக இணைத்து ஊட்டச்சத்துக்களை வழங்குவதே ஆயுர்வேத சிகிச்சை ஆகும். இதன் மூலம் இயற்கையான முறையில் பெண்கள் தங்கள் பிரச்சினைகளிலிருந்து குணமடைந்து கருத்தரிப்பார்கள். இதில் நீர்கட்டி (PCOD) வியாதிக்கான மருத்துவம் பற்றி முந்தைய  இதழில் நாம் பார்த்தோம். தைராய்டு மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி வியாதிகளை பற்றியும் அவற்றின் சிகிச்சை பற்றியும் விரிவாக வரும் இதழ்களில் காண இருக்கின்றோம். ஆகவே இப்போது குழந்தையின்மைக்கான பொதுவான மருத்துவத்தை காண்போம்.

பிரசித்தி பெற்ற ஆயுர்வேத தேகசுத்தி பஞ்சகர்ம சிகிச்சைகளான ‘வமனம்’ (வாந்தி எடுத்தல்), ‘விரேசனம்’ (பேதி), ‘வஸ்தி’ (பீச்சு) மற்றும் ‘உத்தர வஸ்தி’ (பெண் பிறப்புறுப்பு மூலம் மருந்துகளை செலுத்துதல்) ஆகியவை சுத்தி சிகிச்சைகளாக செய்து உடம்பில் உள்ள நச்சுக்கள் மற்றும் அடைப்புகளை நீக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ஹார்மோன்களை சீராக சுரக்க வைத்து பின்பு பீச்சு, டூச் (பெண் பிறப்புறுப்பை கசாயம் விட்டு கழுவுதல்/பாய்ச்சல்) மற்றும் உள் மருந்துகள் கொடுக்க உடல் புத்துணர்வு உண்டாகும்.

இந்த சிகிச்சைகள் மூலம், நரம்பு மண்டலம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் வலுப்பெறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் மற்றும் குழந்தை பேரின்மை நீங்கி கர்ப்பம் தரிக்க உதவும். ‘உத்வர்தனம்’ என்னும் பவுடர் கொண்டு, மசாஜ் எடுப்பதால் உடல் பருமன் குறையும். உடலில் உள்ள கொழுப்புகள் கரையும். உடல் சோர்வு நீங்கும். கருப்பை வலுவடையும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களிலோ அல்லது  மாதவிடாய்க்குப் பிறகோ ‘விரேசனம்’ (பேதி) சிகிச்சை கொடுக்க நல்ல பலனைக் காணலாம்.

மாதவிடாய் வராதிருத்தல் (Amenorrhoea) மற்றும் அண்டவிடுப்பற்ற மாதவிடாய் (Anovulatory Cycles): சப்தசாரம், வாரணாதி குளத்தாதி கசாயங்களுடன் இங்குவசாதி சூர்ணம்,  ரஜப்பிரவர்தனி வடி, சிவ குளிகை, நஷ்டபுஷ்பான்தக மாத்திரை, ஜீரகாரிஷ்டம், லோகாசவம், குமாரியாசவம் பல்லாதக நெய் இருவேளை கொடுத்து இரவில் சுகுமார ஏரண்ட தைலம், கல்யாணக குடம் ஆகியவை கொடுக்க நல்ல பலனை தரும். மாதவிடாய் அதிகமான  நாட்கள் வருதல் மற்றும் அதிகப்படியான உதிரப்போக்கு: இங்கு நெக்ரோதாதி கஷாயம், பிரதரான்தக ரசம், அசோகாதி வடி,  புஷ்யாணுகச்சூரணம் ஆகியவை கொடுக்க நல்ல பலனை தரும்.

கர்ப்பப்பை உள் அமைப்பில் மாறுதல்கள் மற்றும் கோளாறுகள்: இதில் ஆலமொட்டு பால் கஷாயம்,  குமாரி அவலேகியம், தாதுகல்ப லேகியம், கூஷ்மாண்ட ரசாயனம், சதாவரி லேகியம் பலசர்பி, கல்யாணக நெய், மகாகல்யாணக நெய், விதார்யாதி நெய்,  அஸ்வகந்தாரிஷ்டம், பூர்ண சந்திரோதயம் ஆகியவை நல்ல பலனைத் தரும்.

பீஜ துஷ்டி என்னும் சினை முட்டையில் ஏற்படும் கோளாறுகள்: பொதுவாகப் பெண்களுக்குச் சினை முட்டை உருவாகாமல் போனால் சதகுப்பை, எள், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி போன்றவை  மற்றும் சிறுதேக்கு, குமாரியாஸவம், ஜீரகாரிஷ்டம் போன்றவை நல்ல பலனைத் தரும். சதாகுவாதி தைலம், மானஸமித்ர வடகம், க்ஷீரபலா தைல தளம், நசியம் போன்றவை நல்ல பலனைத் தரும். இந்த மருந்துகளை அவர்களின் பிரச்னைகளுக்கு ஏற்ப தகுதி வாய்ந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை படி எடுத்துக் கொள்ள வேண்டும். சுய மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது.

உணவு முறை மற்றும் வாழ்வியல் முறைகள்: திருமணமான பெண்களின் உடல் நிலைக் குறியீட்டு எண் எனப்படும் Body Mass Index (BMI) 25க்குக் குறையாமலும், 30க்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டால், உடல் எடை குறைவாக இருந்தாலும், உடல் எடை அதிகமாக  இருந்தாலும், கருத்தரிப்பிற்கான வாய்ப்புகள்  குறைகின்றன. எனவே அவரவர் வயதுக்கும், உயரத்திற்கும் ஏற்ற ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது முதல் கடமையாகும். அதற்கு முறையான உணவும், உடற்பயிற்சியும் மேற்கொள்ளலாம். அக்காலத்தில் அம்மியில் அரைப்பது, உரலில் இடிப்பது, கோலம் இடுவது, தரையில் அமருவது போன்ற செயல்கள் பெண்களின் இடுப்பு பகுதி மற்றும் கர்ப்பப் பையை இயல்பாகவே பலப்படுத்த உதவியது. இன்று இவை செய்ய இயலவில்லையென்றாலும் அதற்கு ஒப்பான உடற்பயிற்சிகள் செய்யலாம்.   

உணவில் அதிகம் கீரைகள், காய்கறிகள், பழங்கள், உலர் திராட்சை, பாதாம், அக்ரூட், அத்தி, பால் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். சீரகம், பெருங்காயம், எள், சோம்பு, உளுந்து, பூண்டு, கேழ்வரகு, சுக்கு, மஞ்சள், கருவேப்பிலை போன்றவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது. திரிபலா என்னும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடியை தினமும்  உட்கொள்வதின் மூலம் கர்ப்பப்பை கோளாறுகள் சீர்செய்யலாம். அக்காலதில் பெண் பூப்பெய்தவுடன் உளுந்தங்களி கொடுப்பார்கள் அதற்கு காரணம் உளுந்தங்களி சாப்பிட, கர்ப்பப்பை வலுவாகும்  அதைப் போல் முருங்கைப் பூவையும் சாப்பிடலாம்.

எள், கருஞ்சீரகம் சூரணம், சீரகக் குழம்பு மற்றும் கொள்ளு கசாயம் முதலியவை, மாதவிடாய் வராத பிரச்சனைக்கு நல்ல பலன் அளிக்கக்கூடியவை. ‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டாளாம்’ என்ற சொலவடை உண்டு. இங்கு அரசன் என்பது அரச மரத்தைக் குறிக்கும். அரச மரத்து இலையைப் பசும் பாலில் அரைத்துச் சாப்பிட கர்ப்பப் பையின் உள்கட்டமைப்பு சீராகிறது.

நம் தமிழ்நாட்டு திருமணத்தில் வாழைமரம் கட்டுவது முக்கியமாக கருதப்படுகிறது  இதற்குக்காரணம் வாழையடி வாழையாக குலம் தழைக்க வேண்டும் என்பதை குறிப்பதாகும். அது என்ன? வாழை மரத்திற்கும் குழந்தை பேறுக்கும் உள்ள  சம்பந்தம்? வாழை மரத்தில் உள்ள  வாழைப்பூ கடைசி பகுதியை மென்று சாப்பிடுவதன் மூலமோ அல்லது அதன்  சாறு அருந்துவதன் மூலமோ கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்கள் அழித்து குழந்தைப்பேறு அடையலாம், அதேபோல் வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும். தென்னை மரத்தில் உள்ள தென்னங்குருத்து சாப்பிடுவதன் மூலமும் கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்களை அழித்து குழந்தைப்பேறு அடையலாம்.

மீன், முட்டை வெள்ளைக்கரு, ஆட்டிறைச்சி போன்றவை எடுத்துக்கொள்ளலாம். பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உணவில்  துரித உணவுகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், மைதா, நூடுல்ஸ், பிஸ்கட்டுகள் மற்றும் அதிகமாக தேநீர், காபி அருந்துதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி, மாலையில்  இளவெயிலில்  சிறிது நேரம் இருத்தல், மிதமான உடற்பயிற்சி - 20 நிமிடங்கள், 8 மணிநேர உறக்கம், சரியான நேரத்திற்கு உணவு போன்ற வாழ்க்கை முறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

நீண்ட நேரம் செல்போன், மடிக்கணினி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க மூச்சுப்பயிற்சி, தியானம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இவை அனைத்தையும் பின்பற்றினால், லட்சக்கணக்கில் குழந்தையின்மை சிகிச்சைக்கு செலவழிப்பதை விடுத்து, உங்கள் வீட்டிலும் சீக்கிரம் குவா குவா சத்தம் கேட்கும். மேலும் இதுபோல் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வியாதிகள் பற்றியும் அதற்கு ஆயுர்வேதத்தின் அணுகுமுறை மற்றும் தீர்வுகள் பற்றியும் வரும் இதழ்களில் காண்போம்.

தொகுப்பு: உஷா நாராயணன்