Sep 19, 2021
ஆலோசனை

கொரோனாவுக்குப் பிறகு…

கொரோனா வராமல் தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. இதேபோல் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் அதன் பின் செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்னவென்பதைப் பார்ப்போம்… மருத்துவருடனான சந்திப்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன முதல் வாரத்திற்கு பிறகு, நீங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

என்ன டயட்?

கொரோனா போன்ற வைரஸை எதிர்த்துப் போராடும் போதும், அதற்குப் பின்னரும் உங்கள் உடலின் ஆற்றல் மற்றும் சக்திக்கான தேவைகள் மேலும் அதிகமாகின்றன. அதனால் நாம் சமச்சீர் சத்துணவு எடுத்துக் கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய, புதிதாக சமைத்த மென்மையான உணவுகள் நல்லது. பருப்பு, தானிய வகைகள், பீன்ஸ் வகைகள், பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் தயாரிப்புகள், முட்டையின் வெள்ளை பகுதி, கோழி மற்றும் மீன் போன்ற உணவின் புரத மூலங்களை தொடர்ந்து தக்க வைத்து கொள்ளுங்கள். அதிக வறுத்த மற்றும் சர்க்கரை அதிகமுள்ள உணவுப் பொருட்களையும், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சாலட் வடிவிலும் சாப்பிடுங்கள். போதுமான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்லது. இனிப்பு நீக்கப்பட்ட பழச்சாறுகள், மோர், வெஜிடபிள் சூப்கள் (ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் திரவ உணவு) போன்றவை அவசியம். ஜங்க் உணவுகள் மற்றும் அதிகப்படியான மசாலா  உணவுகளைத் தவிர்க்கவும். உங்கள் தினசரி உணவில் 10 கிராம் கொட்டை (எந்தவித மாற்றமும் செய்யப்பட்டாத அசல் கொட்டை வகைகள் மற்றும் உப்பு சேர்க்காதவை) வகைகளைச் சேர்க்கவும். இதில் பாதாம் மற்றும் வால்நட் சிறந்தவை.

தண்ணீர் மற்றும் இனிப்பு நீக்கப்பட்ட பழச்சாறுகள், மோர், மூலிகை தேநீர் மற்றும் பார்லியில் செய்யப்பட்ட திசேன் போன்ற இதர திரவ வகைகளை அதிகம் [நாளொன்றுக்கு குறைந்தபட்சம்  3 லிட்டர்] குடியுங்கள்.

உடற்பயிற்சி ஆலோசனைகள்

எளிமையான / மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தினமும் யோகா, பிராணயாமா மற்றும் தியானம் செய்யுங்கள். உங்களது உடல் அனுமதிக்கும் அளவுக்கு அல்லது பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு மட்டும் இவற்றை செய்யவும். இயல்பு நிலைக்கு மீள்வதற்கு அளிக்கப் படும் பிசியோதெரபியில் சுவாச பயிற்சிகள் மிக முக்கியமானவை. தினமும் காலை மற்றும் மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உங்களால் முடிகிற, செளகரியமாக இருக்குமளவு செய்தால் போதுமானது.தீவிர உடற்பயிற்சிகள், அதிகம் எடை தூக்குவது போன்ற கடினமான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.

அன்றாட செயல்பாடுகள்

கொரோனா பரவல் தொடர்பாக நாம் பின்பற்ற வேண்டிய அனைத்து அம்சங்களையும் (முகக்கவசம் பயன்படுத்துவது, கை மற்றும் சுவாச சுகாதாரத்தைப் பேணுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது) கண்டிப்பாக பின்பற்றவேண்டும். நோயின் தாக்கம் ஏற்பட்ட முதல் நாளிலிருந்து 14 நாட்களுக்குப் பிறகே குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடன் இணைந்திருக்கலாம். மற்றவர்களைப் போல வெளியே சென்று வரலாம். ஆனால், அதிக சிரமம் இல்லாமல் பார்த்துகொள்வது அவசியம்.

முடிந்தால் சமைக்க தொடங்கலாம். தனிமைப்படுத்தலுக்குப் பிறகு வழக்கமாக நீங்கள் மேற்கொள்ளும் சாதாரண செயல்பாடுகளைச் செய்ய அவசரப்படாதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்களது செயல்பாடுகளைத் தொடங்குங்கள். படிப்படியாக உங்கள் அலுவலகப் பணிகளை மீண்டும் தொடங்கலாம். மன அழுத்தம் அதிகமில்லாமல், அதிக சிரமப்படுத்தாமல் மேற்கொள்ள முயற்சியுங்கள். ஆரம்ப கட்டமாக குறுகிய காலத்திற்கு வீட்டிலிருந்தபடியே பணிபுரியலாம். இதற்கு பிறகு உங்களுடைய திறனைப் பொறுத்து நாட்கள் செல்ல செல்ல அலுவலகத்திற்கு செல்லலாம். பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் தங்குவதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை.போதுமான தூக்கம் மற்றும் ஓய்வு உங்களுக்கு அவசியம். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதை கட்டாயம் தவிர்க்கவும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்

கொரோனா வந்துவிட்டதே… இனி தடுப்பூசி எதற்கு என்று நினைக்க வேண்டாம். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் அரசாங்க வழிகாட்டுதல்களின்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதே பாதுகாப்பானது. அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற முடியும்.

மன ஆரோக்கியம்

கொரோனா பாதித்து மீண்ட 90%-க்கும் அதிகமான நோயாளிகள் கவலை மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப் படுகின்றனர். அதனால் அவர்களுக்கு முறையான ஆலோசனை தேவை. மேலும் குறுகிய காலத்திற்கு மருந்து உட்கொள்வதன் மூலம் அவர்கள் மீண்டு வரலாம்.

கொரோனா பாதிப்பிற்கு பிறகான நோய்கள்

குணமடைந்த நோயாளிகளுக்கு பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று, பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் போன்றவை உண்டாவதாக பல ஆய்வுகளின் வழியே தெரிய வந்திருக்கிறது.  ஆகையால், அதிக ஆபத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு குறைந்தபட்சம் 3 மாதங்களாவது மருத்துவர்கள் ஆலோசனைகளை, மருத்துவ பராமரிப்புகளை தொடர்வது முக்கியம். இவை கோவிட் சிகிச்சை ஆலோசகர்களால்  தீர்மானிக்கப்படும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு…

நீரிழிவு நோயாளிகள் தாங்கள் உண்ணும் உணவை சக்தியாக மாற்ற உதவும் தங்களது வளர்சிதை மாற்றத்தின் அளவு குறைவதோடு, கோவிட் தொற்றுக்குப் பிறகு சர்க்கரை அளவு சீராக இல்லாமல் ஒழுங்கற்று இருக்கும் என்பதையும் புரிந்து கொள்வது அவசியம். மருத்துவ ஆலோசனை மற்றும் பராமரிப்பை தொடர்ந்து மேற்கொள்ளும் போது இப்பிரச்னைகளுக்கான தீர்வுகளை மேற்கொள்ளலாம். கோவிட் பாதிப்பிற்கு முன்னர் நாம் வழக்கமாக உட்கொண்ட மருந்துகளை, குடும்ப மருத்துவரின் ஆலோசனையுடன் மீண்டும்  தொடங்க வேண்டும்.

வீட்டிலிருக்கும்போது கண்காணித்தல்

கொரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்து குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு நம்முடைய உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம் ஆகியவற்றை கணகாணிக்க வேண்டும். பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ஆக்ஸிஜன் அளவையும் கண்காணிப்பது அவசியம். இவையனைத்தையும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது மேற்கொள்ளவும்.. தொடர்ந்து காய்ச்சல் இருந்தால், மூச்சுத் திணறல் ஏற்பட்டால், குறிப்பிடுமளவிற்கு எடை இழப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும்.

பயணங்கள் மேற்கொள்ளலாமா?

மருத்துவரின் ஒப்புதலுக்குப் பிறகு, ஆரம்பத்தில் குறுகிய கால பயணமாக குறைந்த தூரம் பயணிக்கலாம். பிறகு தூரத்தை படிப்படியாக அதிகரிக்கலாம்.

ஆக்சிஜன் உதவியுடன் இருக்கும் நோயாளிகள்

குறைந்தபட்ச அளவிலான ஆக்ஸிஜன் ஆதரவில் இருக்கும் நோயாளிகளுக்கான சிறப்பு ஆலோசனை: பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலம் உடலில் ஆக்ஸிஜன் அளவை தொடர்ந்து கண்காணிக்கவும். ஆக்ஸிஜன் அளவிற்கேற்ப ஆக்ஸிஜன் அளவை சரிசெய்யவேண்டும்.நடைப்பயிற்சி மற்றும் வழக்கமான மார்புக்கான பிசியோதெரபி மூலம் நம்முடைய நடவடிக்கைகளில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடையலாம்.. செரிமான செயல்முறையை பாதிக்காத வகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் மிதமான உணவை உட்கொள்வது கட்டாயமாகும்.

ஆக்ஸிஜன் ஆதரவு கருவிகளின் துணை இல்லாமல் ஒரு தனிநபர் தன்னிச்சையாக செயல்படும் வரை ஆன்லைனில் மருத்துவருடன் அவ்வப்போது ஆலோசனைகளைப் பெறுவது  நல்லது.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், எந்தவொரு தனிநபரும் இயல்புநிலைக்கு மீண்டும் திரும்ப வேண்டுமென்றால் அவருக்கு  கோவிட் மருத்துவ பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ அதேயளவு கோவிட் பாதிப்பிற்கு பிந்தைய தொடர்ச்சியான மருத்துவ பராமரிப்பும் மிக முக்கியம்.