Jul 07, 2022
ஆலோசனை

தொடர் சிகிச்சைகள் அவசியமா?

நன்றி குங்குமம் டாக்டர்

நீண்டநாள் பிரச்னைகளுக்கென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, ‘மூன்று மாதங்கள் கழித்து பரிசோதனைக்கு வாருங்கள்; ஆறு மாதம் கழித்து வாருங்கள்’ என்று உங்கள் மருத்துவர் கூறியிருப்பார். சிலர் மிகச்சரியாக அந்தந்த தேதிகளில் மறு பரிசோதனைக்கு சென்றிருப்பீர்கள். மற்ற சிலர் நன்றாகத்தானே இருக்கிறோம், இப்போது எதற்கு வீண் அலைச்சல் என்று தாமதப்படுத்துவீர்கள். இன்னும் சிலரோ, ‘எப்ப போனாலும் செக் பண்ணிட்டு அதே மாத்திரைகளைத்தான் எழுதிக் கொடுக்கிறார். அதனால நானே அந்த சீட்டைக் கடையில் காட்டி வாங்கிக்கிறேன்’ என்பீர்கள்.

பெரும்பாலான தொடர் நோய்கள், குறிப்பாக கண்நோய்களை குறித்த நேரத்தில் மறு பரிசோதனை செய்ய வேண்டியது மிக அவசியம். ஏற்கனவே செய்த டெஸ்ட்டைத்தான் பார்க்கிறார்கள், கொடுத்த மருந்தையேதான் கொடுக்கிறார்கள் என்று நோயாளிகளின் பார்வையில் சாதாரணமாகத் தெரியும் விஷயம் மருத்துவரின் பார்வையில் வேறு மாதிரி தெரியக்கூடும்.

உதாரணமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் விழித்திரை பரிசோதனை மிக அவசியம். சர்க்கரை நோய் ஆரம்பித்து 10 வருடங்கள் ஆன பின், எவ்வளவுதான் கட்டுபாட்டுடன் இருந்தாலும் விழித்திரை ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுவது இயல்பு. சர்க்கரை கட்டுக்குள் இல்லை என்றாலோ அத்துடன் சேர்த்து உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு போன்றவை இருந்தாலோ ரத்தக் கசிவுகள் அதிகரிக்கக்கூடும். மருத்துவர் சொன்ன காலகட்டத்தில் நீங்கள் செல்லவில்லை என்றால் நிலைமை விபரீதமாக மாறலாம்.

தாமதமாக கவனிக்க நேர்கையில் ஏதேனும் நிரந்தரப் பாதிப்பு ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது. சிறு ஊசிகள், லேசர் சிகிச்சை மூலமாக சரிசெய்யக்கூடிய ஆரம்பக்கட்ட நிலையை அலட்சியம் செய்ய, அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு கொண்டு விட்டுவிடும்.கண் மருத்துவத்தைப் பொறுத்தவரை சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக தொடர் சிகிச்சை மிக முக்கியமாக இருப்பது க்ளுக்கோமா என்னும் கண்அழுத்த நோய். க்ளுக்கோமா பார்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும் சைலன்ட் கில்லர். தொடர் பரிசோதனை மூலமே அதைக் கண்டுபிடிக்க முடியும். கண்டுபிடித்த பின்னர், பலருக்கு ஆரம்பகட்ட சொட்டு மருந்துகள் மூலமே கண் அழுத்த நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம். சிலருக்கு கூடுதல் சக்திவாய்ந்த மருந்துகள் தேவைப்படும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா, எப்போது செய்ய வேண்டும், என்ன விதமான அறுவை சிகிச்சை என்பதையும் தொடர் பரிசோதனைகளே முடிவு செய்யும்.

என்னிடம் வரும் நோயாளிகளில் பலருக்கு, கண் அழுத்த நோயினைக் கண்டுபிடிக்கும் போது குறிப்பிடத்தகுந்த பாதிப்பு இருப்பது தெரியவந்தால் ஆண்டுதோறும் Automated perimetry என்ற பரிசோதனையைச் செய்து அந்த ரிப்போர்ட்டை ஒரு கோப்பில் சேமித்து வையுங்கள் என்பேன். நம் சிகிச்சைக்கு எந்த அளவில் நோய் கட்டுப்பட்டிருக்கிறது, அதன் போக்கு எவ்வாறு இருக்கிறது என்பதற்கு இது மிகவும் உதவும். ஒரு கட்டத்தில் மருந்துக்கு கட்டுப்படவில்லை என்ற நிலை வந்தால் லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்யுமாறு வலியுறுத்தலாம். நீண்டநாள் சிகிச்சைகளைத் தவிர, தொடர் பரிசோதனைகள் தேவைப்படும் முக்கியமான விஷயம் காயங்கள்.

குறிப்பாக கண்களின் கருவிழியில் காயம்பட்டால் தினமும் பரிசோதனை செய்வது மிக அவசியம். ஒவ்வொரு முறையும் நுண்ணோக்கியின்(Slit lamp biomicroscope) மூலமாக காயத்தின் ஆழம் அகலம் ஆராயப்படும். கூடவே இமைகளில் வீக்கம், வெள்ளை விழியில் சிவப்பு இதுவும் கவனிக்கப்படும். Snellen’s chartல் தினந்தோறும் பார்வை எவ்வளவு இருக்கிறது என்றும் பரிசோதிப்பார்கள். முதல் நாளன்று காயம் காரணமாக இரண்டு வரிகள் மட்டுமே படிக்க முடிந்தது என்று வைத்துக்கொள்வோம். அடுத்தடுத்த நாட்களில் சிகிச்சை சரியான முறையில் போய்க்கொண்டிருக்கிறது என்றால் பார்வையில் முன்னேற்றம் இருக்க வேண்டும். இரண்டு வரிகள் தெரிந்த நிலையில் இருந்து மூன்று, நான்கு வரிகள் என்று முன்னேற்றம் காண வேண்டும். குறைந்தபட்சம் மோசமாகாமலாவது அதே அளவில் இருக்க வேண்டும்.

பிறந்த குழந்தைகள் சிலரை அவர்தம் பெற்றோர் அடிக்கடி கண் பரிசோதனைக்குத் தூக்கி வருவதைக் கவனித்திருப்பீர்கள். ‘இந்த சின்ன வயசிலேயே இப்படி ஆஸ்பத்திரிக்கு அலைகிறார்களே’ என்று வருத்தமும் பட்டிருப்பீர்கள். குறைமாதக் குழந்தைகளுக்கு விழித்திரையில் ரத்த நாளங்களின் வளர்ச்சியை (Retinopathy of prematurity) கண்காணிக்கவே பெரும்பாலான பெற்றோர்கள் பச்சிளங் குழந்தைகளுடன் மருத்துவமனைகளில் காத்திருக்கின்றனர்.

கருவில் இருக்கும் கடைசி சில வாரங்களில் தான் விழித்திரையின் நாளங்கள் முழுவதுமாக தன் வளர்ச்சியை எட்டி பிடிக்கும். ஏதாவது ஒரு காரணத்தால் விரைவிலேயே குழந்தை பிறக்க நேர்ந்தால், பிறந்ததிலிருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை விழித்திரை பரிசோதனை செய்ய வேண்டியது மிக அவசியம்.இத்தகைய பரிசோதனையின்போது விழித் திரையின் ஓரத்தில் அமையப் பெற்றிருக்கும் ரத்த நாளங்கள் அரைகுறையாக வளர்ந்திருக்கின்றன என்றால் அதை லேசர் சிகிச்சை மூலம் சரி செய்ய வேண்டியதிருக்கும். விட்டுவிட்டால் அந்த அரைகுறையாக வளர்ந்த ரத்தநாளங்கள் முழு கண் பார்வையையும் அழித்துவிடக் கூடும்.

‘என் பேரப் பிள்ளைகள் இரட்டைக் குழந்தைகள். எட்டு மாசத்தில் பிறந்துட்டாங்க.. இப்படித்தான் இரண்டு பிள்ளைகளையும் தூக்கிகிட்டு பதினஞ்சு நாளைக்கு ஒருக்க நாள் பூரா காத்திருப்போம்.. குழந்தைகளை அழ அழ செக்கப் பண்ணிட்டு கடைசில ஒன்னும் இல்லன்னு சொல்லிடுவாங்க.. எதுக்கு வீணா அலைய வச்சுக்கிட்டு.. பேசாம கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு சும்மா இருங்க’.

நான் ஒரு பயிற்சிக்காக ஒரு பெரும் மருத்துவமனைக்குச் சென்ற இடத்தில், ஒரு பாட்டி இன்னொரு இளம் தாய்க்கு கூறிய இந்த அறிவுரை என் காதில் விழுந்தது. அப்போதுதான் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பு தேசிய அளவில் மருத்துவர்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்தது. குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு கண் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியத்தைப் பெற்றோருக்கு வலியுறுத்தத் தவறிவிட்டார் குழந்தைகள் நல மருத்துவர்ஒருவர். பின்னாளில் அந்தக் குழந்தை பார்வையிழக்க நேர, பெற்றோர் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கின்றனர். மருத்துவருக்கு மிகப் பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது.

அந்த பாட்டியிடமும், இளம் தாயிடமும் அந்த செய்தியைக் காட்டி, எனக்கு தெரிந்து இந்த பிரச்னையால் முற்றிலும் பார்வை இழந்த சிறார்களையும் பற்றியும் கூறினேன். கூடவே, ‘நல்ல வேளையாக உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு எதுவும் இல்லை.. ஒருவேளை இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே ஓரிருமுறை லேசர் வைத்து சரி செய்திருப்பார்கள்.. அவ்வளவுதான்’ என்று கூறி லேசர் வைக்கப்படும் முறையையும் அவருக்குப் புரியும்படி விளக்கினேன்.

‘அலைச்சலையும் குழந்தை அழுவதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பரிசோதனை செய்கிறேன்’ என்று அந்த இளம் தாய் உறுதி கூறினார்.குறிப்பிட்ட பிரச்னைகளுக்கான மறு சிகிச்சை என்றில்லாமல் சில மரபணு சார்ந்த பிரச்னைகளுக்கு செய்யப்படும் முன் பரிசோதனை குறித்தும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது மிக அவசியம். கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளிலும் எவ்வளவோ விஷயங்கள் உலகம் முழுவதிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றுதான் வருடந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்கள். எங்கள் பகுதியில் அனைத்து ஒன்றியங்களிலும் அவை சென்ற மாதத்தில் நடைபெற்றன.

ஒரு குறிப்பிட்ட ஊருக்குச் சென்றபோது வழக்கத்தைவிட அதிகமான புதிய நோயாளிகள் வந்திருந்தனர். அந்தப் பகுதி ஏற்கனவே சொந்தத்தில் திருமணம் செய்யும் பழக்கத்திற்குப் பெயர்போனது. அன்று பார்த்த 8 குழந்தைகளுமே உறவுக்குள் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்குப் பிறந்தவர்கள். அதிலும் 3 தம்பதிகள் தங்கள் இரண்டு குழந்தைகளுக்கும் கண்பார்வை இழந்த நிலையில் அழைத்து வந்தனர். ஒரு வீட்டில் ஏற்கனவே அண்ணனுக்குக் கண் தெரியாது; இப்பொழுது தம்பியும் மாற்றுத்திறன் சான்றிதழுக்காக வந்திருந்தான். அக்காவிற்கு பார்வைக் குறைபாடு; தம்பிக்கும் அதே பிரச்னை இருந்தது.

ஒரு தம்பதியின் முதல் குழந்தைக்கு நான்கு ஆண்டுகள் முன்பு நான்தான் சான்றிதழ் வழங்கியிருந்தேன். அவர்களிடம் அடுத்த குழந்தையைக் கருவுறுவதற்கு முன்பாக மரபணு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்; கர்ப்ப காலத்தின் ஆரம்ப நிலையிலேயே சில பரிசோதனைகளை செய்து குறைபாடு இருந்தால் தெரிந்துகொள்ள முடியும் என்று கூறியிருந்தேன். இருந்தும் இரண்டாம் குழந்தையும் பல குறைபாடுகளுடன் பிறந்திருந்தது. அதில் கண் குறைபாடும் ஒன்று. ‘ஏன் முன்பரிசோதனை செய்யவில்லை?’ என்று கேட்டதற்கு, ‘கொரோனா காரணமாக மருத்துவமனைக்குப் போகவில்லை’ என்றார்கள்.

பெருந்தொற்று ஆரம்பித்த புதிதில் சாதாரண சிகிச்சைகளுக்கு இப்போது மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவியலாளர்கள் வலியுறுத்தியது உண்மைதான். ஆனால், அது வெகு சில மாதங்களுக்குத்தான். அதன்பின் வழக்கமான எல்லா சிகிச்சைகளும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடந்து கொண்டுதான் இருந்தன. பரிசோதனை செய்யவில்லை என்று கூறும் நபர்களில் 99 சதவிகிதம் பேர் ஒருவித சோம்பலால் சிகிச்சையைத் தள்ளிப் போட்டவர்கள்தான்.

சமீபத்தில் சந்தித்த பெண் ஒருவருக்கு மூன்று மாதங்களுக்கு முன் விழித்திரையில் ரத்தக் கசிவு அபாய கட்டத்தில் இருப்பதை படங்களுடனும் வீடியோவுடனும் சொல்லியிருந்தேன். இருந்தும் அவர் மேல் சிகிச்சைக்குச் செல்லவில்லை. நேற்று ஒரு கண்ணில் பார்வை முற்றிலும் இழந்த நிலையில் வந்தார். தொடர் பரிசோதனைகளின் அவசியத்தைப் போலவே குறிப்பிட்டுக் கூற வேண்டிய இன்னொரு விஷயம், சிகிச்சை தொடர்பான ஆவணங்களை பத்திரப்படுத்துதல். நான் சந்திக்கும் நோயாளிகளில் பத்தில் ஒருவரே சென்றமுறை காண்பித்த பரிசோதனை அறிக்கையை மீண்டும் கொண்டுவருகிறார்கள்.

தொலைத்துவிட்டேன், நனைந்துவிட்டது, வெள்ளையடிக்கும்போது தூக்கிப் போட்டுவிட்டேன் இப்படி பல காரணங்களைக் கேட்க முடிகிறது. சென்ற முறைக்கு இந்த முறை உங்களுடைய உடல்நிலையில் எந்த அளவு முன்னேற்றம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள பரிந்துரைச் சீட்டையும் அறிக்கைகளையும் பாதுகாப்பது மிக முக்கியம்.உலகைத் தாக்கிய மிகப்பெரிய தொற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு மறுமலர்ச்சிப் பாதையில் நடைபோடத் துவங்கியிருக்கிறோம்.

நம் அண்டை நாடுகள் பொருளாதாரப் பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில், அலட்சியம் காரணமாக மனிதர்களில் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்படுவது நல்லதல்ல. எல்லா நிலைகளிலும் மனிதனின் Quality of life மிக முக்கியம். தொடர் பரிசோதனைகள், சீரிய முறையில் மருத்துவ ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பது இவற்றின் மூலம் வாழ்வின் தன்மையையும் சிறப்பாக்கி, சவால்களை சந்திக்க புத்துணர்ச்சியுடன் நடைபோடுவதே பொருத்தமாக இருக்கும்!

நலம் தரும் கொள்ளு ரசம்

நுரையீரல் நலன் காக்கும் கொள்ளு - கண்டந்திப்பிலி ரசம் எப்படி செய்வது?

தேவையானவை:

கொள்ளு - 2 டீஸ்பூன்,
கண்டந்திப்பிலி - 1 துண்டு,
மிளகு,
சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்,
பூண்டு - 2 பற்கள்,
மஞ்சள் தூள்,
கறிவேப்பிலை  சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். பிறகு, தேவையான அளவு தண்ணீரில் அனைத்தையும் போட்டு நன்கு கொதிக்க வைத்து, இளஞ்சூடாகப் பருகலாம்.