Sep 30, 2022
ஆலோசனை

கோடை காலத்தை குளுமையாக மாற்றுவோம்!

நன்றி குங்குமம் தோழி

கோடை வந்துவிட்டாலே வெயிலின் தாக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் விடுமுறை கொண்டாட்டத்திற்கு மாறிடுவோம். இந்த ஒரு மாதம் தான் ஊட்டி, கொடைக்கானல் போகலாமா என்று திட்டமிடுவார்கள்.

ஒரு சிலர் வெளிநாட்டிற்கு பயணம் செல்ல விரும்புவார்கள். மற்றவர்கள் தங்களின் தாத்தா, பாட்டி ஊருக்கு தங்கள் பயணத்தினை மேற்கொள்வார்கள். எந்த ஊராக இருந்தாலும் கோடை காலத்தின் ேபாது குறிப்பாக பயண நாட்களில் என்ன ஆடைகள் அணியலாம் என்பதை தெரிந்து கொள்வோம். கோடைகால விடுமுறையின் போது வீட்டில் இருந்தால் நமக்கு பெரிய அளவில் வெயிலின் தாக்கம் தெரியாது.

அதுவே வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கோடை விடுமுறைக்காக பயணத்தை மேற்கொள்பவர்கள் என இவர்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்திற்கு ஏற்ப உடைகளை அணிய தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக வெகு தூர பயணத்திற்கு செல்ல நினைத்தால், அந்த இடத்திற்கு ஏற்ப போதுமான உடைகள் மற்றும் சரியான ஆடைகளை எடுத்துச் செல்ல வேண்டும். காரணம் நாம் செல்லும் இடத்திற்கு சரியான ஆடையினை அணியாவிட்டால் அந்த பயணம் மகிழ்ச்சியினை தராது. உதாரணத்திற்கு கோடையை கழிக்க மாலத்தீவிற்கு செல்ல விரும்பினால் அங்குள்ள கடற்கரையின் சூழலை அனுபவிக்க அதற்கான உடைகளை கண்டிப்பாக நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரத்தில் இயற்கை நமக்கு வரப்பிரசாதமாக கொடுத்திருக்கும் பருத்தியால் ஆன உடைகளை அணியலாம். அவ்வாறு அணியும் போது ஆடைகள் நம் உடலை இறுக்கிப்பிடிக்காதவாறு இருப்பது நல்லது. இதனால் சருமத்தில் சுவாசம் தடைபட வாய்ப்புள்ளது. இதனால் சருமத்தில் அரிப்பு மற்றும் இதர பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும். பருத்தி, ரேயான் மற்றும் கைத்தறி ஆடைகளை வெயில் காலத்தில் பயன்படுத்தலாம்.  பாலிஸ்டர் துணி உடுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. காரணம் பருத்தி ஆடைகள் நம் உடலில் இருந்து வெளியாகும் வியர்வையினை உறிந்து கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் சருமம் என்றும் உலர்வோடு இருக்கும்.

மேலும் மெல்லிய வண்ணங்கள் கொண்ட ஆடைகளையே தேர்வு செய்ய வேண்டும். அடர்த்தி நிறங்கள் கொண்ட உடையினை அணியும் போது, குறிப்பாக கருப்பு, சூரிய கதிர்களில் இருந்து வெளியாகும் வெப்பத்தினை உள்ளிழுத்து நம் சருமத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும். அந்த நிறங்களை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். மெல்லிய நிறங்கள் கொண்ட ஆடைகள் சூரிய வெப்பத்தினை சருமத்தில் ஊடுருவி செல்லாமல், அதை பிரதிபலிக்கும் என்பதால், உடலும் குளுமையாக இருக்கும்.

மேலும் மெல்லிய எடை கொண்ட ஆடைகளை அணியலாம். சம்கி போன்ற வேலைப்பாடுகள் கொண்ட எடை அதிகமுள்ள உடையினை தவிர்க்க வேண்டும். உடைகளுக்கு கவனம் செலுத்துவது போல் பயணத்தின் போது நாம் அணியும் காலணி மற்றும் சாக்ஸ்களின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். நைலான் சாக்ஸ் மற்றும் வெயிலின் தாக்கத்தில் இருந்த தப்பிக்க தலையில் தொப்பி அணியலாம்.

உடை ஒரு பக்கம் என்றால் நம்முடைய ஆரோக்கியமும் மிகவும் அவசியம். வெயில் காலத்தில் பயணம் செய்வது கஷ்டமாக இருக்கும். உடலில் நீர்வறட்சி ஏற்படுவதால், எளிதில் சோர்வடைந்துவிடுவோம். அதனால் எப்போதும் கையில் ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்துச் செல்வது அவசியம். அல்லது போகும் வழியில் இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம். கோடையில் வீட்டில் இருப்பவர்கள் தங்களின் வீட்டை ஊட்டிபோல் குளுகுளுவென்று வைக்க சில யோசனைகள்

*கோடைக் காலத்தில் வீட்டில் இருந்தால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று நினைக்க வேண்டும். சில சமயம் வெயிலின் பாதிப்பு வீட்டையும் அனலாக மாற்றிவிடும். அதை தவிர்க்க வீட்டின் சுவற்றில் அடர்ந்த நிற பெயின்டினை தவிர்த்து மென்மையான மற்றும் பேஸ்டல் நிற பெயின்டினை பயன்படுத்தலாம். இதனால் வீட்டின் சுவற்றில் அனலின் பாதிப்பு அதிகம் இருக்காது. இதன் காரணமாகத்தான் பலர் கோடையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களுக்கு பிக்னிக் சென்று விடுகின்றனர். கோடை வெயிலுக்கு பயந்து, குளிர்பிரதேசம் செல்வதற்கு பதில், ஊட்டி, கொடைக்கானலில் இருக்கக் கூடிய குளிர்ச்சியை நம் வீட்டில் எப்படி கொண்டு வரலாம் என்று யோசித்தால் பிக்னிக் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

*வீட்டின் சுவர் மட்டுமில்லாமல் நாம் பயன்படுத்தும் தலையணை மற்றும் குஷன்களுக்கு நல்ல அழகான நிறங்களால், தொட்டாலே மென்மையாக இருக்கும் அளவில் அதன் உறைகளை மாற்றி அமைக்க வேண்டும். பார்க்க அழகாகவும் அதே சமயம் மிருதுவாகவும் இருக்கும்.

*வீட்டின் பூ ஜாடிகளில் நல்ல அழகான, கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் மலர்களை வைத்து, அழகு படுத்தலாம். இதனால் அதனை பார்க்கும் போது, வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் எரிச்சல் நீங்கி கண்கள் குளிர்ச்சியடையும்.

*கோடையில் வீட்டின் பின்புறம் சின்னதாக தோட்டம் அமைத்து அங்கு குளிர் காற்று தரக்கூடிய வேப்பம் மரம் மற்றும் இதர செடிகளை தொட்டியில் வைத்து வளர்க்கலாம். அடுக்குமாடி குடியிருப்பு என்றால் பால்கனியில் சிறிய அளவில் தொட்டிகள் வைத்து செடி வளர்க்கலாம். மாலை வேலையில் இங்கு அமர்ந்தால் வெயிலின் தாக்கம் அவ்வளவாக நமக்கு  தெரியாது

*வீட்டின் ஜன்னல்களில் தொங்கவிடப்படும் திரைச்சீலைகளும் பருத்தியாக இருப்பது அவசியம். மேலும் அவை வீட்டின் சுவற்றிற்கு ஏற்ற நிறத்தில் இருந்தால் பார்க்க அழகாகவும், கண்களுக்கு குளிரச்சியாகவும் இருக்கும்.

*பூக்கள் என்றாலே புத்துணர்ச்சி கிடைக்கும். எனவே வீட்டின் சுவர், பெட் சீட், குஷன்கள், தலையணைகள், டேபிள் மேட், திரைச்சீலைகள் போன்றவற்றிற்கு பூ போட்ட டிசைன்களின் உறை அணிவிக்கலாம். இதனால் வெயிலினால் ஏற்படும் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும்.

*வீட்டின் தோட்டம் மற்றும் பால்கனிகளில் மட்டுமில்லாமல், வீட்டிற்குள்ளேவும் வரவேற்பறை, அடுப்படி ஜன்னல் போன்ற இடங்களில் சிறிய அளவிலான குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாம். பச்சை பசேலென்று அழகாக மட்டுமில்லாமல் குளிர்ச்சியாகவும் இருக்கும். இதை ஒவ்வொரு கோடையின் போதும் கடைபிடியுங்கள்... உங்க வீடே ஊட்டிபோல் மாறிடும்.

தொகுப்பு: பிரியா மோகன்

படங்கள்: ஜி.சிவக்குமார்